வெள்ளி, 21 ஜூன், 2019

புதன், 19 ஜூன், 2019


அன்புடையீர் வணக்கம்
                     திருக்குறளுக்கு உரை திருக்குறளே”, அறிஞர் எம். டயசு அவர்களின் கருத்து எத்துணைப் பொருத்தமானது என்பதை  நன்கு உணர்ந்தேன். எனினும் திருக்குறளில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு எழுத்தும் என் நாவில் தவழ வேண்டுமென்ற  ஆவலினால் படிக்கத் தொடங்கினேன்;பின்னர் எழுதவும் துணிந்தேன்.
                                2006 ஆம் ஆண்டு, மார்ச்சு திங்களில் மைசூரில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பணியேற்றபொழுது, ஒரு வலைப்பூவைத் தொடங்கிச்  (kalappal.blogspot.com)    செம்மொழித் தமிழ் தொடர்பான செய்திகளை வெளியிட்டேன். அந்நாளில்தான் அயலகத் தமிழர்களின் தமிழ் ஆர்வத்தைத் தெரிந்துகொண்டேன். தொடர்ந்து பல்வேறு இலக்கியப் பகிர்வுகளோடு உலகத் தமிழர் உறவு  உறுதியாகவே, 2016 ஆம் ஆண்டில் திருக்குறள் சிறப்புரை என்னும் தொடரை நாள்தோறும் ஒரு குறளுரை  என வெளியிட்டேன்.     
                          திருக்குறள் சிறப்புரை இன்றுடன் நிறைவுற்றது. 1330 அருங்குறட்பாக்களின் சிறப்பினைச் சான்றோர் நெறிநின்று  உரைத்துள்ளேன்; சிற்சில இடங்கள் வேறுபடுதலுமுண்டு.  1330 அருங்குறட்பாக்களுக்கு 1330  செய்யுட்பகுதிகள் மேற்கோள்களாக இடம் பெற்றுள்ளன. ஆர்வலர்கள் குறட்பாவின் கருத்தை அறிந்து கொள்ளும் பொழுது மேலொரு இலக்கியக் கருத்தையும் சுவைக்கும் நோக்கில் மேற்கோள்கள் இடம்பெற்றுள்ளன.  
                                  இன்றுவரை என் வலைப்பூவில் .70,000 மேற்பட்ட பார்வைகள் பதிந்துள்ளன. நாள்தோறும் 10 முதல் 30 வரையிலான தமிழ் ஆர்வலர்கள் திருக்குறளைச் சுவைத்துள்ளனர் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
திருக்குறள் சிறப்புரை- நூல் வடிவில் வெளிக்கொணர விரும்பி, நாளைமுதல்  மீள் பார்வையில்  திருத்தம்மேற்கொள்ளவிருக்கிறேன்.
இப்பணியில் என்னை ஊக்கிய உலகத் தமிழர்களுக்கு என்றும் நன்றி உடையேன்…..!
                              நன்றி நண்பர்களே.....! மீண்டும் ஒரு செவ்விலக்கியக் களத்தில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.
வணக்கமும் வாழ்த்தும்
நன்றியுடன்
முனைவர் இரெ. குமரன்.திருக்குறள் -சிறப்புரை :1330
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். ----- ௩ ௩0  
காமநுகர்ச்சிக்கு, ஊடுதல்  இன்பமாகும் ; ஊடல் தணிந்து கூடிமுயங்குதல் காமக் களிப்பைப் பேரின்பமாக்கும்.

கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ
ஐது தொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே.” ---குறுந்தொகை.

 காந்தள் மலரையும் தோற்றிய அரும்புகளிலிருந்து உண்டாகிய செவ்வி மலர்களாகிய முல்லைப் பூக்களையும் மணம் கமழும் இதழ்களை உடைய குவளை மலர்களோடு இடையிடையே பொருந்துமாறு கலந்து, அழகாகத் தொடுத்தலில் சிறந்த மாலையைப் போல, நறுமணத்தையுடைய தலைவியின் மேனி, தளிரைக் காட்டிலும் மென்மையும் நிறமும் உடையது ; தழுவுதற்கும் இனிமையுடையது.
மலரினும் மெல்லிது காமம்

இப்பணியில் என்னை இயக்கிய சான்றோர்களை நன்றியுடன் போற்றி, நிறைவாக……..தொடரும்.செவ்வாய், 18 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1329


திருக்குறள் -சிறப்புரை :1329
ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னோ இரா. ----- ௩உ ௯
ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த தலைவி ஊடல் கொள்வாளாக ; யாம் இவளின் ஊடல் தீர்க்க வேண்டி நிற்க,  கூடும் காலம்வரை இரவும் வளரட்டும்.
“……………….. . ………. தோழி
சுனைபூங் குவளைத் தொடலை தந்தும்
தினைப்புன மருங்கில் படுகிளி ஓப்பியும்
காலைவந்து மாலைப் பொழுதில்
நல்லகம் நயந்து தான் உயங்கிச்
சொல்லவும் ஆகாது அஃகியோனே.”----- குறுந்தொகை.
 தோழி…! மலைநாடன், பகலில் வந்து, சுனையில் பூத்த குவளை மலர்களை மாலையாகத் தொடுத்து நினக்குத் தந்தனன் ; தினைப் புனத்தில் தினைக்கதிர்களில் படியும் கிளிகளை நம்மோடு சேர்ந்து ஓட்டினான்; இவ்வாறு நமக்கு எளியனாகிய அவன் மாலைப் பொழுதில், நின்னுடைய நல்ல மார்பினை அடைய விரும்பி, வருந்தி, அக்கருத்தைச் சொல்லத் துணிவின்றி மெலிந்தனன்.

திருக்குறள் -சிறப்புரை :1328


திருக்குறள் -சிறப்புரை :1328

ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு. ---- ௩உ ௮
இவளின் நுதல் வியர்க்கயாம் கூடிக்களித்த இன்பத்தை மேலும் ஒருமுறை  அவளுடன் ஊடிகூடிப் பெறுவோமோ..?
வன்புரைத் தக்க சாயலன் என நீ
அன்புரைத்து அடங்கக் கூறிய இன்சொல்
வாய்த்தன வாழி தோழி வேட்டோர்க்கு
அமிழ்தத் தன்ன கமழ்தார் மார்பின்
வண்டிடைப் படாஅ முயக்கமும்
தண்டாக் காதலும் தலைநாள் போன்மே.” ---அகநானூறு.
தோழி…! நினது உயர்வுக்கு ஏற்ற மென்மைத் தன்மையன் என, நீ அன்பால் உரைத்து என் மனம் அமைதியுறக் கூறிய இனிய சொற்களெல்லாம் உண்மையாயின. தன்னை விரும்பியவர்க்கு அமிழ்தம் போன்ற இனிய நறிய மாலையையுடைய தன் மார்பின்கண்ணே, வண்டு இடையில் பொருந்தலாகாத நிறைந்த முயக்கமும் நீங்காத காதலும் முதல்நாள் கண்டபொழுது உண்டான இன்பம் போலச் சிறந்திருந்தன,திங்கள், 17 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1327


திருக்குறள் -சிறப்புரை :1327

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும். ----- ௩உ ௭

உள்ளம் ஒருமித்த காதலர் இருவருள், ஊடலில் தோற்றவரே வென்றவர் ஆவார்;  அஃது அவரால், அப்பொழுது அறியப்படாமல் போயினும் பின்னர்க் கூடலில்  புலப்படும்.

நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது
காதற் காமம் காமத்துச் சிறந்தது
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி
புலத்தலின் சிறந்தது கற்பே…” ---பரிபாடல்.

வடமொழியில் அமைந்த நான்கு வேதங்களையும் விரிவாகப்பாடி அவற்றின் பொருளை விளக்குகின்ற வாய்மொழியாகிய வேதத்தில் வல்ல புலவர்களே..!  நாங்கள் சொல்கின்ற சிறந்த பொருளைக் கேட்பீராக..! காம ஒழுக்கத்தில் சிறப்புடையது, காதலை (களவு) உடைய காமமேயாகும். காதலை உடைய காமம் என்பது முன்னர் உடம்பினால் எந்த உறவும் இல்லாத ஒருவர், தம்முள் எழுந்த அன்பு ஒன்றினாலேயே உள்ளம் ஒத்து, ஊழ் கூட்டுவிக்கத் தாமே தம்முள் கண்டு காதல்கொண்டு புணர்தலாகிய மெய்யுறு புணர்ச்சியாகும். கற்பொழுக்கம் ஊடுதலால் சிறப்புடையதாகும்.
(காமங்களுள் சிறந்தது காதல் காமம்; காதல் இல்லாத காமமாவன ; கைக்கிளையும் பெருந்திணையும் பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கமும் முதலியன என்க , இவற்றைக் காமக் காமம் என்ப.)

திருக்குறள் -சிறப்புரை :1326


திருக்குறள் -சிறப்புரை :1326

உணலினும் உண்டது அறலினிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.------- ௩உ ௬

பசித்தபின் புசிஉண்ட உணவு செரித்து, மேலும் உண்ணும் அவா தோன்றியபின்  உண்ணுதல் உயிர்க்கு இன்பம் அளிப்பதாகும் ; அதுபோலக் காமம் மேலும் மேலும் வறிதே கூடிமுயங்குவதைவிட ,ஊடியபின் கூடுதல் இன்பமளிக்கும் . ஊடல். காமவேட்கையை மிகுவிக்கும் என்றாராக.

வேம்பின் பைங்காய் என் தோழி தரினே
தேம்பூங்கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே.” –குறுந்தொகை.

வேம்பினது பசிய காயை, என்னுடைய தோழியாகிய தலைவி, கையால் தரின் அதனை இனிய பூமணமுள்ள, கருப்புக்கட்டி என்று இளமைப்பருவத்தில் கூறினீர் ; என் தோழி பெருமுது பெண்டாகிய இப்பொழுது, பாரி வள்ளலின் பறம்பு மலையிடத்துள்ள, தைத் திங்களில் குளிர்ந்த சுனையில் உள்ள தெளிந்த நீரைத் தந்தாலும் வெம்மையாய் உவர்த்தலைச் செய்கிறது என்று கூறுகின்றீர். இது வியப்பைத் தருவதாக உள்ளது ; அன்பின் திறம் அத்தகையது போலும்.

ஞாயிறு, 16 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1325


திருக்குறள் -சிறப்புரை :1325

தவறில ராயினும் தாம்வீழ்வார் மென் தோள்
அகறலி னாங்கொன்று உடைத்து. ---- ௩உ ௫

தம்மிடம் தவறில்லை என்றாலும், தம்மால் விரும்பப்பட்ட காதலியின் தோள்களை ஊடலால் பிரிந்திருப்பதிலும் ஓர் இன்பம் உண்டாகும்.

கறிவளர் அடுக்கத்து ஆங்கண் முறிஅருந்து
குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங்கல் நாடன்
இனியன் ஆகலின் இனத்தின் இயன்ற
இன்னாமையினும் இனிதோ
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே..”---குறுந்தொகை.

அடுக்காக உள்ள மலைகளை உடைய அவ்விடத்தில் மிளகுக் கொடியில் வளர்ந்துள்ள தளிர்களை அருந்தக் குரங்குகள் ஒருங்கு கூடித் தங்கியுள்ள பெரிய மலைநாட்டின் தலைவன், புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒத்த இனிமையுடையவன். ஆதலால், எம்மோடு ஒப்புமையுடைய துன்பத்திலும் துன்பம் இல்லாது, இன்பத்தில் மட்டும் ஒப்பதாய் இனிதாக விளங்கும் துறக்க உலகம் இனிதாகுமோ..?

திருக்குறள் -சிறப்புரை :1324


திருக்குறள் -சிறப்புரை :1324

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.------ ௩உ ௪

காதலரை விடாது தழுவிப் புணர்ந்து மகிழ்தகற்கு இடந்தராத புலவியால் படும் துன்பத்தினைப் போக்குதற்கு, உள்ளத்தை உடைத்து  எழும் பணிமொழி என்னும் படை ,ஊடலை முறியடிக்கும்.

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ
புனக்கிளி கடியும் பூங்கண் பேதை
தான் அறிந்தன்றோ இலளேபாணாள்
பள்ளி யானையின் உயிர்த்து என்
உள்ளம் பின்னும் தன் உழையதுவே.” ---குறுந்தொகை.

நள்ளிருளில் துயில் கொள்ளும் யானையைப்போலப் பெருமூச்சுவிட்டு என் உள்ளம் புணர்தற்கு முன்னரேயன்றிப் புணர்ந்த பின்னரும் தன்னிடம் இருப்பதை, சுனையில் மலர்ந்த பூக்களைப் பறித்து, அவற்றை மாலையாகக் கட்டி, தினைப்புனத்தில் கதிரை உண்ணவரும் கிளிகளை ஓட்டுகின்ற பூப்போன்ற கண்களையுடைய பேதையாகிய தலைவி, அறிந்தனளோ..அறிந்திலளோ…?

சனி, 15 ஜூன், 2019

திருக்குறள் -சிறப்புரை :1323


திருக்குறள் -சிறப்புரை :1323

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னா ரகத்து. ---- ௩உ ௩

செம்மண் நிலத்துப் பெய்த மழை நீரைப்போலத்  தலைவன் தலைவியின்  அன்புடைய நெஞ்சங்கள் இரண்டும் தம்முள் தாமே கலந்து ஒன்றினார்தம் ஊடலில் தோன்றும் கூடல் இன்பத்தைப்போன்ற இன்பம், துறக்க உலகத்திலும் உண்டோ..? இல்லையே என்பதாம்.

விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பின் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கின் சாலாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குல் குறுமகள்
தோள்மாறு படூஉம் வைகலொடு எமக்கே.”

விரிந்த அலைகளை உடைய பெரிய கடலால் சூழப்பெற்ற இப்பூவுலக இன்பமும் பெறுதற்கரிய சிறப்புகளை உடைய வானுலக இன்பமும் ஆகிய இரண்டனையும் தாமரைப் பூப்போன்ற, மையுண்ட கண்களையும் பொன்னைப்போன்ற நிறத்தினையும் அழகிய வரிகளை உடைய அல்குலையும் உடைய தலைவியினுடைய தோளொடு தோள் மாறுபடத்துயிலும் அரைநாள் இன்பத்தொடு ஒருங்கு வைத்து நிறைகாணின், எமக்கு அவை  ஒத்த அன்பினால் எய்தும் இன்பத்திற்கு இணையாகாது. 

திருக்குறள் -சிறப்புரை :1322

திருக்குறள் -சிறப்புரை :1322

ஊடலில் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும். ----- ௩உ ௨

ஊடலிலினால் விளையும் சிறு பிணக்கும் துன்பம்தருதலோடு, காதலர் காட்டும் அன்பும் குறைவது போல் தோன்றினும் அன்பு வளர்ந்து,  ஊடல் கூடலாக மலர்ந்து  பெருமை பெறும்.

மெல்லிய லோயே மெல்லிய லோயே
நல்நாண் நீத்த பழிதீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின்
சொல்ல கிற்றா மெல்லியலோயே
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே
நாள் இடைப்படாஅ நளிநீர் நீத்தத்து
இடிகரை பெருமரம் போல
தீதில் நிலைமை முயங்குகம் பலவே.” ---குறுந்தொகை.

மெல்லிய இயல்புடையவளே….! பிறப்புடன் வளர்ந்த நல்ல நாணத்தை நீத்தமையால் தோன்றிய அலரும், மாமை நிறம் தீர்தலும் ஆகியவற்றை அறிந்த தலைவன்,  வற்புறுத்திக் கூறித் தெளிவித்ததால் பொறுத்துக் கொண்டிருப்பதல்லது அவற்றால் ஆகிய ஆற்றாமையைக் காமம் அறியாத இளைஞரும் காமத்தைத் துறக்க விரும்பும் பெரியோரும் உள்ள ஊர்க்குக் கூறினால் சொல்லும் சொற்களும் குறைந்து இல்லாமல் போகும். செறிந்த நீர்ப் பெருக்கத்தினை உடைய குளத்தின் நீர் மோதுகின்ற கரையில் உள்ள பெரிய மரத்தினைப்போல தீமை இல்லாத இல்லற நெறியில் நின்று, இனித் தலைவனைப் பலமுறை அணைத்து இன்புறுவோம்.

திருக்குறள் -சிறப்புரை :1321


திருக்குறள் -சிறப்புரை :1321
133. ஊடலுவகை

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவரளிக்கு மாறு. ------ ௩உக

காதலரிடத்துத் தவறு ஒன்றும் இல்லையானாலும் அவரொடு ஊடல் கொள்வது, அவர்,  மேலும் நம்மை நயந்து அன்பு செய்யுமாறு தூண்டுவதற்கே.

அன்பும் மடனும் சாயலும் இயல்பும்
என்பும் நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி
இன்றே இவணமாகி நாளை…..
…… ……… ………… ………..
மழைத்துளி மறந்த அங்குடிச் சீறூர்ச்
சேக்குவம் கொல்லோ நெஞ்சே பூப்புனை
புயலென ஒலிவரும் தாழிரும் கூந்தல்
செறிகொடி முன்கை நம் காதலி
அறிவஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே.” –அகநானூறு.

அன்பும், மடனும், மென்மையும், ஒழுக்கமும், எலும்பை நெகிவிக்கும் சொல்லும் ஏனையவும் தலைவியுடன் ஒன்றுபட்டுள்ள நல்ல கொள்கைஉடையோமாய், இருவரும் ஒரு தன்மைத்தாய்த் தழுவி இன்று இவ்விடத்தே இருந்தோமாகி,
 நாளை….!
பூவால் புனையப்பெற்ற மேகம் போலத் தழைத்த, நீண்ட, கரிய கூந்தலையும் நெருங்கிய வளைகளை உடைய முன்கையினையும் உடைய, நம் காதலியின் அறிவு கலங்கிய பார்வையையும் புலவியையும் நினைந்து சீறூரில் (தனித்து) தங்கியிருப்போமோ.? என்றனன்.