செவ்வாய், 31 டிசம்பர், 2024

வலைப் ””பூ” மனங்கனிந்த வாழ்த்துகள்

 

வலைப் ””பூ” மனங்கனிந்த வாழ்த்துகள்

உலகத் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். .

“வழிபடுதெய்வம் நிற்புறம் காப்பப்

பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து

பொலிமின்…………………………”…

”வழிபடும் தெய்வம் உன்னைப் பாதுகாக்கட்டும் ; குற்றமற்ற செல்வமொடு நின் தலைமுறை வழிவழியாகச் சிறந்து வாழ்க “ என்று தொல்காப்பியர் அடி தொழுது வாழ்த்துகின்றேன்.

திங்கள், 30 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 114. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் – நப்பூதனார் – மழை.

 

சான்றோர் வாய் (மைமொழி : 114. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர்நப்பூதனார்மழை.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு . குறள். 355.

 

வலமாகச் சூழ்ந்து எழுதல்  என்றால் என்ன …?

 

குணகடல் முகந்த கொள்ளை வானம்

பணைகெழு வேந்தர் பல்படைத் தானைத்

தோல்நிரைத் தனைய ஆகி வலன் ஏர்பு

                                     --கபிலர் அகநா. 278: 1 – 3

மேகங்கள் கீழ்த்திசைக் கடலிடத்து நீரை முகந்து  கொண்டன ; முரசினையுடைய மன்னர்களின் பல்வகைப் படைக்கலன்களை உடைய  சேனையின்கண்ணே யானைகளின் அணிவகுப்புப் போன்று தோன்றி வலமாக எழுந்து சென்றன.

 

வலமாக எழ- மழை பொழிதல்

 

மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில்

பணைமுழங்கு எழிலி பெளவம் வாங்கித்

தாழ்பெயல் பெருநீர் வலனேர்பு வளைஇ

மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர

இருநிலங் கவினிய ஏமுறு காலை

                                     --மதுரை எழுத்தாளன்,அகநா.84 : 1- 5

மலைமீது வில் – மேகம் முழங்க – கடல் நீரை முகந்து -  உலகினை வலனாக எழுந்து- இறங்கிப் பெய்யும் மிக்க மழை – திசையெல்லாம் மறையப் பொழிந்து நிலம் அழகுற இன்பம் எய்திய இக்காலத்தே. மழை –

 

பயங்கெழு திருவின் பல்கதிர் ஞாயிறு

வயங்கு தொழில் தரீஇயர் வலன் ஏர்பு விளங்கி

மல்குகடல் தோன்றியாங்கு .....................

               --மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார், அகநா. 298: 1 – 3

உலகில் வாழும் உயிர்களுக்குப் பயன்மிக்க செல்வத்தைத் தரும் பலகதிர்களையுடைய ஞாயிறானது, அவ்வுயிர்கள் விளங்குதற்கு ஏதுவாகிய பல்வகை தொழில்களைத் தருமாறு , வலமாக எழுந்து, நீர்முக்க கடலிலே தோன்றினாற்போல.  ‘ வழையமல் அடுக்கத்து வலனேர்பு ’..அகநா. 328 : 1

 

திருமுருகாற்றுப்படை

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு..

.

-நக்கீரர், திருமுரு.1, 2

 

உலகில் வாழும் உயிர்கள் எல்லாம் மகிழும்படி, மேருவை வலமாக எழுந்து, பற்பல சமயத்தவரும் புகழ்கின்ற ஞாயிறு கீழ்க் கடலிடத்தே எழக் கண்டாற்போன்று..

 

 

அறிவியல் நோக்கு

 

                   சூறாவளி , பூமியைப் போல் ஒரே திசையில் சுற்றும் அடர்த்தியான, உருண்டையான நிலையற்ற இயக்கத்தைக் கொண்ட பரப்பு என்று வானிலையியல் கூறுகிறது.[1][2]. மேலும் வானிலையியலானது சூறாவளியின் போது வட துருவத்தில் சுருண்டு ஏறுகின்ற  காற்று இடஞ்சுழியிலும் தென் துருவத்தில் ஏறுகின்ற காற்று வலஞ்சுழியிலும் வீசும் என்று கூறுகிறது. --- விக்கிபீடியா.

 

.                       மேகங்கள் வலமாகச் சூழ்ந்து எழுதல்என்ற கருத்தாவது பூமியின் நிலநடுக் கோட்டிற்குத் தென்பகுதியில் நீர்ச்சுழற்சி, காற்றுச் சுழற்சி  வலமாகச் சுழன்று எழும் என்பது இன்றைய அறிவியல் உண்மை. இத்தகைய அறிவியல் உண்மையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கச் சான்றோர் கண்டுபிடித்துள்ளனர் என்பது வியத்தற்குரியதன்றோ…!

 சங்க இலக்கியங்களில் மழை பொழிதல் குறித்த செய்தி பல பாடல்களில் இடம்பெற்றுள்ளன, ஓரிடத்திலாவது மழைபொழிதல்வருணபகவான்ஆற்றல் என்று சுட்டப்படவில்லை. சங்கச்சான்றோரின் அறிவியல் அறிவாற்றலுக்கு இஃதும் ஓர் சான்றாகும்.   

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 113. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் – நப்பூதனார் – மழை.

 சான்றோர் வாய் (மைமொழி : 113. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் – நப்பூதனார் – மழை.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு . குறள். 355.

மழை  - அறிவியல்

               “ மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில்இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின்வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களைஅடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகிவிடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும்ஆவியாகிவிடுவது உண்டு. ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய மழைக்காலம் என அழைக்கப்படுகின்றது.”   ---விக்கிபீடியா.

 

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் அறிவு.

கால நிலைக்கேற்ப வளிமண்டலச் சுழற்சிகள் ஏற்படுவது இயல்பே; பருவம் அல்லாத காலத்தில் மழைப் பொழிவு இன்றும் உண்டுஇயற்கையை  வெகுகாலமாகப் பட்டறிவினால் ஆராய்ந்து வானியல் பற்றிய செய்திகளைப் புலவர்கள் பதிவு செய்துள்ளனர்.

நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி வலன் ஏர்பு

கோடு கொண்டு எழுந்த  கொடுஞ்செலவு எழிலி

பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை

                                                           --நப்பூதனார், முல்லைப். 5 : 1 – 6

                           அலையோசை முழங்கும் குளிர்ந்த கடல்நீரைக் குடித்து எழுந்த மேகம், இடமகன்ற உலகத்தை வளைத்து, வலமாக உயர்ந்தெழுந்து, மலைகளில் தங்கிப் புல்லிய மாலைப் பொழுதில் பெருமழையைப் பொழிந்தது. இக்காட்சி, சக்கரத்தொடு வலம்புரிச் சங்கினை ஏந்திய கைகளையும், திருமகளை வைத்த மார்பினையும் உடைய திருமால், வாமனனாகச் சென்று இரந்தபோது, மாவலி வார்த்த நீர் கையில்பட்ட அளவில், விண்ணையும் மண்ணையும் அளாவும்படி உயர்ந்ததுபோல விளங்கியது.

பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர்பருகிக்

குவவுத்திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு

வயவுப்பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி

இருங்கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றிக்

காலை வந்தன்றால் காரே ….

                           --கருவூர்க் கலிங்கத்தார், அகநா.183: 6-10

                              பெருங் கூட்டமான  மேகங்கள் திரண்டு சுருண்டு வரும் அலைகளையும் குளிர்ச்சி பொருந்திய துறைகளையும் உடைய பெருங்கடலினுட் சென்றன, சென்று  நீரினை மிகுதியாக  உண்டன. உண்டு, மேற்குத் திசையில் எழுந்து சூலுற்ற பெண் யானைக் கூட்டம் போல இடந்தோறும் இடந்தோறும் வந்து தோன்றி ஒலியுடன் மழையைப் பொழிவதற்கு ஒன்றுகூடக் கார்காலம் காலையே வந்து விட்டது.

 

……………………. இன்னீர்த்

தடங் கடல் வாயின் உண்டு சில் நீர் என

…………………. நற்.115 : 3 – 4

 மேகங்களும் இனிய நீரையுடைய பெரிய கடலகத்து வாயினால் உண்டுஎஞ்சிய கடலின் நீர் சிறிது நீர் என்னும்படி கொணர்ந்தன.

 

இரு விசும்பு அதிர மின்னிக்

கருவி மாமழை கடல் முகந்தனவே

-மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார். நற். 329 : 10 – 11

 கருமை மிக்க வானம் ஒலியுண்டாகுமாறு இடித்து மின்னி மழைக்குரிய மேகக் கூட்டத்தோடு கடலில் சென்று நீர் முகந்து எழுந்த கார்காலம் வந்துற்றது.

மேற்சுட்டிய மேற்கோள்களில் மழை எவ்வாறு பொழிகிறது என்பதற்கான அறிவியல் நுட்பம் செறிந்த உண்மைகளை இன்றைய அறிவியல் சிந்தனைகளோடு ஒப்பிட்டு உணரவும்பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல் தெற்றென விளங்கக் காணலாம்.

…………………. –தொடரும்………………………….

சனி, 28 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 112. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் – உறையூர் முதுகண்ணன் சாத்தனார். –ஞாயிறு.

 

சான்றோர் வாய் (மைமொழி : 112. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர்உறையூர் முதுகண்ணன் சாத்தனார். –ஞாயிறு.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு . குறள். 355.

 

பகுதி -2.

 

                       கோப்பர் நிகஸ் ( 1473 – 1543 ) என்ற விஞ்ஞானி கோள்களைப் பற்றி ஆராய்ந்தார். கோள்கள் உருண்டையானவை என்றும் பூமி தன்னைதானேயும் சூரியனையும் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தார். இந்த அறிவியல் உண்மையை அவரால் வெளியிட முடியவில்லை ; மதவாதிகள் இக்கருத்தை வெளியிட அனுமதிக்கவில்லை  காரணம்-  கடவுளுக்கு எதிரான கருத்து அது  என்பதுதான். தான் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளை நூலாக வெளியிட  விரும்பினார். அவருடைய எழுபதாவது வயதில் நூல் வெளிவந்ததுஅதன் முதல் படியைக் கையில் பெற்ற உடனேயே அவர் மாண்டு போனார்.  அவர் ஒரு பாதிரியார், அந்நூலை அப்போதைய போப்பாண்டவருக்குக் காணிக்கையாக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

                                உலகம் பற்றிய அறிவியல் அறிவைத் தமிழர் பெற்றிருந்தனர். உல்; உலகம் ; ஞாலம் எனும் சொற்கள் உலகம் உருண்டை என்பதையும்  அது ஒரு கோள் என்பதையும் சுட்டுகின்றன. உலகம்உயிர்கள் உறையும் இடம் என்பர். அறிவியல் அறிவினாலன்றோ திருவள்ளுவர்சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்என்றார்.

 

                        கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் கோப்பர் நிகஸ் கூறிய அறிவியல் உண்மைகளை மக்களிடையே பரப்பிவந்த இத்தாலி நாட்டு ஜியார்டனே புருனோவை மதவிரோதி எனக் கூறிமதவாதிகள் அவரை ஜெனிவாவில் கைது செய்துகை விலங்கு பூட்டி இத்தாலிக்கு இழுத்து வந்தனர். அன்று அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை…. பலரும் கூடும் சந்தை ஒன்றில் புருனோவை மரத்தில் கட்டித் தீயிட்டுக் கொளுத்தினர்.

 

                            பண்டைய தமிழ்ச்சமுதாயம் புலவர்களைப் போற்றிப்புகழும் அறிவுடைச் சமுதாயமாகத் திகழ்ந்திருந்ததனால் ஆன்றோர் பலரும்  சான்றோர் மொழிந்தவற்றை வழி வழியாகப் போற்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைபெறச் செய்தனர்.

 

                              இயற்கையின் அரிய பெரிய ஆற்றல்களைக் கண்டுணர்ந்த புலவர் பெருமக்கள் தாம் கண்டவற்றை ;ஆராய்ந்தவற்றை; ஆய்வுக்கு உரியனவற்றை அப்படியே பதிவு செய்துள்ளனர். அவையாவும் இன்று நாம் அறிவியலோடு பொருத்திப் பார்க்கும் அளவுக்கு  அறிவியல் நுட்பம் வாய்ந்தவையாக உள்ளன.

 

…………………. –தொடரும்………………………….

வெள்ளி, 27 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 111. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் – உறையூர் முதுகண்ணன் சாத்தனார். –ஞாயிறு.

 பகுதி - 1.

சான்றோர் வாய் (மைமொழி : 111. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் – உறையூர் முதுகண்ணன் சாத்தனார். –ஞாயிறு.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு . குறள். 355.

ஞாயிறு :

                      உலகத் தோற்றத்தின் முதலாக; உயிர் ஆக்கத்தின் மூலமாக ஆதிபகலனாகிய (ஆதிபகவன்) செஞ்சுடரைக் குறிப்பார் திருவள்ளுவர்.  தன்னொளியின்றி ஞாயிற்றின் ஒளியைக் கொள்ளும் கோள்களாகிய திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி ஆகியவற்றிற்குப் பிறப்பிடமாகியும் அக்கோள்களெல்லாம் தன்னச் சுற்றிவர நடுவே அசையாது இருத்தலினாலே ஞாயிறு கோளரசு என்னும் பெயர் பெறும்.

 

அறிவியல் அறிவாற்றல் :

அழல்கான்று திரிதரும் அலங்குகதிர் மண்டிலம்

நிழல்சூன்று உண்ட நிரம்பா நீளிடை

--மதுரை இளங்கெளசிகனார். அகநா. 381: 4 –5

….. மழை பெய்யாது ஒழிய நிழலினை அகழ்ந்து உண்டு தீப்போலும் வெப்பத்தினை ஞாயிறானது கக்கிச் செல்லும் அத்தகைய கடத்தற்கரிய நீண்ட இடை வழியில்…..

                 ஈண்டுக் கதிர் மண்டிலம் என்றது சூரியக் குடும்பத்தை; இதனால் சூரியன் தலமைக் கோளாகக்கொண்டு வான்வெளியைக் குறிப்பிடுகிறார். இன்றைய அறிவியல்  சூரியனைப் பல கோள்கள் சுற்றிவருகின்றன . இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து சூரியக் குடும்பம் ( Solar System) என்று கூறும்.

 

செஞ் ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப்

பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்

வளி திரிதரு திசையும்

வறிது நிலைஇய காயமும் என்றிவை

சென்றளந் தறிந்தார் போல என்றும்

இனைத் தென்போரும் உளரே…”

   --உறையூர் முதுகண்ணன் சாத்தனார். புறநா. 30 : 1 – 6

    அறிவியல் புலவர்

செஞ்ஞாயிற்றினது வீதியும் ; அஞ்ஞாயிற்றின் இயக்கமும் ( சூரியனின்  வட .தென் செலவைக் குறிப்பதோடு ஏனைய கோள்களை ஈர்த்தலும் இயக்குதலும்) அவ்வியக்கத்தாற் சூழப்படும் பார் வட்டமும் ; காற்று இயங்கும் திக்கும்( வான் வெளியில்) ; ஓர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டுப் போய் அளந்து அறிந்தவர்களைப்போல நாளும் இத்துணையளவை உடையனவென்று சொல்லும் கல்வியை உடையோரும் உளர்…. பரிப்பென்றதுஇத்துணை நாழிகைக்கு இத்துணை யோசனை செல்லுமென்னும் இயக்கத்தை.”

                       பரிப்பு ~ என்றது ஈர்ப்பு என்பதாகலாம். கோள்களின் இயக்கங்கள் ஈர்ப்பினால் இயங்குவதைச் சுட்டுவதாம் . ( பரி ~ கடந்து செல் ; வேகம்; இயக்கம் > பறி ~ நீரோடும் வாய்க்காலில் மீன்களை ஈர்க்க (பிடிக்க) மூங்கில் குச்சிகளைக் கொண்டு பின்னபட்ட  ஒரு மீன் பிடி பெட்டிக்குப் பறி என்று பெயர்.)

 

செஞ்ஞாயிற்றுச் செலவு என்றது  கிழக்கில் எழும்(Equinox) சூரியன் வடகிழக்கு (solstice)தென் கிழக்கு த் திசைகளில் மேற்கொள்ளும் செலவினைக் குறித்துள்ளார்.

 

Equinox: each time of year when day and night are of equal length.

(about 22 September and 20 March)

Solstice: either of the times in the year when the sun is furthest from the equator: the point reached by the sun at these times ; summer solstice. about 21 June; winter solstice . about 22 December.  

 

               சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் தான் மிகச்சரியாகக் கிழக்கே உதிக்கும்....

                  அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, இறுதியடைந்து மறுபடியும் தெற்கு நோக்கித் திரும்பும்...

                  அப்பறம் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

                  இப்படிச் சரியாகக்  கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு என்று இயங்கி மறுபடியும் சரியாகக் கிழக்குக்கு வர ஆகிற காலம் ஓர் ஆண்டு ஆகும்.”

 

                          சூரியனை மையமாகக் கொண்டு கோள்களின் இயக்கத்தையும் காற்றின்  இயக்கத் திசையையும் அளந்து அறிந்தனர் என்பது சங்க காலச் சான்றோரின் அறிவாற்றலைப் புலப்படுத்துகிறது.

                          இக்கருத்தைக் கருவி அறிவியல் நோக்கில் ஆராய்ந்து வெளியிட்டவர் கெப்ளர் (கி.பி.1620). கெப்ளர் கோள்களின் வழியைஇயக்கத்தை வரையறுத்தார். கோள்கள் யாவும் சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் செல்கின்றன என்றார். தான் கண்டுபிடித்த உண்மைகளை ஊரறிய வெளியிட முடியாமல் தவித்தார்.

                        இவ்வுண்மைகளைக் கனவு என்ற நூலில் ஒரு தாய் தன் மகளுக்குக் கூறுவதுபோல எழுதினார்.  இந்நூலின் கருத்துக்களைக் கண்ட மதவாதிகள் கெப்ளரின் தாயைச் சூனியக்காரி என்று கூறி விலங்கிட்டுச் சிறையில் அடைத்தனர்.

வாணிற விசும்பில் கோள்மீன் சூழ்ந்த

இளங்கதிர் ஞாயிறு…. “ என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.

                             கெப்ளரின் வானியல் கோட்பாட்டோடு சங்கச் சான்றோரின் அறிவியல் சிந்தனையை ஒப்பிட்டுப் பாருங்கள். தமிழரின் அறிவியல் ஆற்றல் புலப்படும். இன்னும்… 27 நாள்களும் (நட்சத்திரங்களும்) 7 கோள்களும் 12 ஓரைகளும் தமிழ்ச் சான்றோர் கண்டறிந்துள்ளனர். ஏழு கோள்களின் பெயரால் ஏழு நாட்களும் பன்னிரு ஓரைகள் மாதப்பெயர்களாகவும் அமைந்துள்ளன. ஒரு பகல் ஒரு இரவைநாள் என்றும் ஏழு நாட்களைஒரு கிழமை என்றும் கதிரவன் வடசெலவும் தென்செலவும் ஓர் ஆண்டு என்றும் குறித்துள்ளனர். தமிழர் ஒரு நாளை ஆறு சிறுபொழுது கொண்டதாகவும் ஓர் ஆண்டை ஆறு பெரும் பொழுது கொண்டதாகவும் பகுத்துள்ளனர். வைகறை விடியல் காலை பகல் மாலை இரவு என்றெல்லாம் பொழுதைப் பிரித்தார்களேயன்றி இராகு காலம் எமகண்டம் குளிசம் அட்டமி நவமி என்றெல்லாம் பிரிக்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். – தொடரும் >>>>>>>>>>>>>>>>>>

செவ்வாய், 24 டிசம்பர், 2024

சான்றோர் வாய் (மை) மொழி : 110. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் – தொல்காப்பியர்- கி.மு. 711.

 

சான்றோர் வாய் (மைமொழி : 110. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர்தொல்காப்பியர்- கி.மு. 711.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு . குறள். 355.

 

தொல்காப்பியரின் அறிவியல் சிந்தனைகள் :

உலகத் தோற்றம் :

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் 

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

                                                          -----தொல். 1589: 1- 2

                      அளத்தற்கரிய ஐம்பெரும் பொருள்களாகிய நிலம். தீ. நீர். வளி (காற்று). விசும்பு என்ற ஐந்தும் கலந்தும் மயங்கியும் கிடப்பது இவ்வுலகம் என்றார். இஃது அறிவியல் உண்மை.

 உலகம் என்றது உலகினையும் உலகினுட் பொருளையும். உலகமாவது முத்தும் மணியும் கலந்தாற்போல நிலம் நீர் தீ வளி ஆகாயம் என விரவி நிற்கும். உலகினுட் பொருள் பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றானாற்போல வேற்றுமைபடாது நிற்கும்; அவ்விரண்டனையும் உலகம் உடைத்தாகலின் கலந்த மயக்கம் என்றார். “

என்று விளக்குவார் இளம்பூரணர். இதனால் எந்தக் கடவுளும் இவ்வுலகை உருட்டி வைக்கவில்லை என்பதும் விளங்குமன்றோ.

                        இவ்வுலகமும் உலகப் பொருள்களும் இவ்வைந்து பூதங்களால் உருவானவை. அழியும் போதும் இவ்வைந்தாகவே மாறும். மீட்டுருவாக்கம் பெற்று இவை சேர்ந்தும் பிரிந்தும் பலவகைப் பொருள்கள் ஆகின்றன. மனித உடலுட்படத் தோன்றியும் மறைந்தும் உலகம் நடக்கிறது.” என்று விளக்கம் தருகிறார் தமிழண்ணல்.

உயிரினப் பாகுபாடு :

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கு அறிவதுவே அவற்றொயு கண்ணே

ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே”- --தொல்.1526.

 

தொல்காப்பியர் உயிர்களின் பரிமாண வளர்ச்சியை வளப்படுத்தியுள்ளார். இவர் உயிர்களை ஆறு வகையாகப் பகுத்துள்ளார். இப்பகுப்புமுறை புலனறிவு அடிப்படையில் அமைந்து-  இன்றைய அறிவியல் கொள்கையோடு பெரிதும் ஒத்துள்ளதை அறியமுடிகிறது.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே  (புல். மரம் முதலிய இவ்வினம்தொடு உணர்வு  - அறிவு)

இரண்டறி வதுவே அதனொடு நாவே(  நத்தை. சிப்பி முதலிய இவ்வினம்-தொடு உணர்வோடு சுவை உணர்வும்)

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே (  கறையான். எறும்பு முதலிய இவ்வினம் - தொடு.சுவை. நுகர்வு உணர்வுகள்)

நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ( வண்டு . தும்பி. முதலிய இவ்வினம் - தொடு .சுவை. நுகர்வு. கண்- பார்வை உணர்வுகள்)

ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ( விலங்குகள் . பறவைகள் முதலிய இவ்வினம் - தொடு.சுவை. நுகர்வு. பார்வை. செவித்திறன் உணர்வுகள்)

ஆறறி வதுவே அவற்றொடு மனனே  ( மேற்சுட்டிய ஐந்து உணர்வுகளோடு மனம் என்னும் உணர்வும் அமையப் பெற்றவை மக்களும் பிறவும். –                                          தொல்காப்பியர் உயிரினங்களை அறுவகையாகப் பகுத்தார் . விலங்கியலார் பன்னிரண்டு வகையாகப் பகுத்துள்ளனர்.

 

     . ஆறறிவு :

 

மக்கள் தாமே ஆறு அறிவுயிரே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

                         -தொல். 1532

                              மக்களுக்கு மெய் வாய் கண் மூக்கு செவி என ஐம்பொறிகளும் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என ஐம்புலன் உணர்வுகளும் இருப்பதால் ஐயறிவும்ஆறாவதாக மனம் என ஒன்று பெற்று நன்மை தீமை அறிவதாலும் சிந்திப்பதாலும் அவர்களை ஆறறிவு உடைய உயிரினம் என்பார் தொல்காப்பியர். பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பேஎனக் கூறியதால் மக்களைப் போன்று ஆறு அறிவு உடையனவாக குரங்கு யானை கிளி முதலியவற்றுள் மன உணர்வுடைய உளவாயின் அவையும் ஆறறிவுயிராய் அடங்கும் என உரை வகுத்துள்ளார் இளம்பூரணர்.

                          இவ்வாறு  தொல்காப்பியர் உயிர்களை வகைப்படுத்தியுள்ளமை வியப்பிற்குரியதாகும். இரண்டு மூன்று நான்கு அறிவுடையவை முதுகெலும்பற்றவை; ஐந்து ஆறு அறிவுடையவை முதுகெலும்புள்ளவை.

                   உயிர்களின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை அறிவியல் வழியாக மெய்ப்பித்துக் காட்டிய சி. ஆர். டார்வின் ஓரணு உயிரிலிருந்து மனிதன் படிப்படியாக வளர்ந்துள்ள நிலையை 1858 இல் வெளியிட்டார். அறிவியல் உலகம் அவரை அதிசயமாகப் பார்த்தது. டார்வினின் இந்த அரிய கண்டுபிடிப்பு கடவுள் உயிர்களைப் படைத்தார் ; மனிதனைப் படைத்தார் என்ற மதக் கொள்கைகளைத் தகர்த்தெறிந்தது. டார்வின் - அரிஸ்டாட்டிலுக்கும் எம்பெடோகிளசுக்கும் கடன்பட்டிருப்பதைப்போல தொல்காப்பியருக்கும் கடன்பட்டுள்ளார் என்பதை உலகம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

 

                           ஆறாவது அறிவாகிய மனத்தைப் பெற்ற மனிதன் அதன்வழி சிந்திக்கும் திறனைப் பெற்றிருக்கிறான். மனத்தின் தெளிவு நடத்தையின்வழி வெளிப்படுகிறது. தொல்காப்பியரின் உளவியல் ஆய்வு சிக்மண்ட் பிராய்டின் உளவியல் ஆய்வுக்கு முன்னோடியாக விளங்குகிறது.”ஆறறிவதுவே அவற்றொடு மனனே” – என்னும் கூற்று பிராய்டின் கண்டுபிடிப்பாகப் போற்றப்படுகிறது. அவற்றொடுஎன்னும் ஒரு சொல்லால் தொல்காப்பியர் உளவியல் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானி ஆகிறார்.  அதாவது விலங்குணர்ச்சியை உள்ளடக்கிய ஆறாவது அறிவைப் பெற்றது மனித இனம் என்பதுதானே பிராய்டின் கண்டுபிடிப்பு.

கரு உருவாகும் காலம்

பூப்பின் புறப்பாடு ஈர் ஆறு நாளும்

நீத்து அகன்று உறையார் என்மனார் புலவர்

பரத்தையிற் பிரிந்த காலை யான.

         தொல். பொரு. கற். 187.

                தலைவிக்கு மாத விலக்குத் தோன்றிய ( மூன்று நாள் கழிந்த பின்பு) பன்னிரண்டு நாளும் தலைவன் அவளை விட்டுப் பிரிந்திருத்தல் இல்லை என்று கூறுவர் புலவர். இதனால் பயன் என்னையெனின் அது கருத் தோன்றும் காலம் என்க.

                        இத்தகைய ஓர் அறிவியல் ஆய்வை நிகழ்த்தி மெய்ப்பிக்க எத்தனை ஆண்டுக் காலம் ஆகியிருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உடலியல் குறித்த ஆய்வில் தொல்காப்பியரின் அறிவியல்  அறிவை ஈண்டுக் காணமுடிகிறது.

இன்று, பூப்பு வெளிப்பட்ட பத்தாம் நாளிலிருந்து பதினைந்தாம்  நாள் வரையில்தான் கருத்தோன்றும் என்பர்.

 

தொல்காப்பியரின் அறிவியல் சிந்தனைகள்   குறித்துச் சான்றுக்காக மேலே சுட்டியவை சிலவே ! .

 தொல்காப்பியம் தமிழின் முதல் இலக்கணம் மட்டுமன்று சிறந்த இலக்கியமுமாகும்.

தொல்காப்பியர், எழுத்திலும் சொல்லிலும்  ஒரு மொழியியல் அறிஞராக ; பொருளியலில் ஒரு சமுகவியல் அறிஞராக ; மரபியலில் ஓர் உயிரியல் அறிஞராக விளங்கி, அவர் பதிவு செய்துள்ள கருத்துகள், அறிவியல் சிந்தனைகளுக்குச் சிறந்த சான்றுகளாகின்றன.   

……………………..தொடரும் ………………………………