ஞாயிறு, 9 நவம்பர், 2025

தமிழமுது –167 – தொல்தமிழர் இசை மரபு:..........நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

 

தமிழமுது –167 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 27.

முத்தமிழிசை.

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

 

 

இயற்றமிழ் இசை :

இயற்றமிழை நோக்கின்  அதுவும் இசையுடன் விரவியே நடைபெறுதல் புலனாகும். தொல்காப்பியனார் சொற்றொடர்களின் ஓசை அமைதிக்கு வண்ணம் என்று பெயர் கொடுத்து, அதை இருபது வகைப்படுத்தியுள்ளனர். வல்லெழுத்துப் பயின்று வருவது வல்லிசை வண்ணம், மெல்லெழுத்துப் பயின்று மெல்லிசை வண்ணம். நெட்டெழுத்துப் பயின்று வருவது நெடுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்து பயில்வது குறுஞ்சீர் வண்ணம். என்று இவ்வாறு வண்ணங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதனாலும்  செய்யுள்கள் எல்லாம் எதுகை, மோனை, முதலிய தொடை விகற்பங்களோடு பாடப்படுதலாலும் இயற்றமிழ்ப் பாக்களும் இசையமைதி பெற்றிருப்பது நன்கு புலனாகும். வெண்பா முதலிய பாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான இசையுடனேயே பண்டு  தொட்டு ஓதப்படுகின்றன. அவற்றுள்ளும் கலிப்பா, பரிபாட்டு என்பவற்றை இசைப்பாக்கள் என்றே  பேராசிரியர் முதலிய பேருரையாளர்கள் கூறுவாராயினர். எட்டுத்தொகையுள் ஒன்றாகிய  பரிபாடல் செய்யுட்கள் ஒவ்வொன்றுக்கும் பண் வகுத்திருப்பதும் நோக்கற்பாலது.  பாலை யாழ்,நோதிறம் காந்தாரம் என்ற பண்கள் அதில் குறிக்கப்பட்டுள்ளன. இசை வகுத்தோராக ஒரு பதின்மர் பெயர் அதிற் காணப்படுதலின், அப்பொழுது இசைவாணர்கள் எவ்வளவு மிகுதியாக இருந்திருத்தல் வேண்டும், என்று கருதலாகும். மற்றும் வெண்பா முதலிய பாக்களுக்கு இனமாக வகுக்கப்பெற்ற தாழிசை, துறை முதலாயினவும் இசைப்பாக்களே யாதல் வேண்டும்.

மற்றும், மக்களுடைய உள்ளக்கிளர்ச்சியாகிய வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், வெகுளி, நகை, சாந்தம் என்பவற்றை மெய்ப்படத் தோற்றுவிக்கும் கவிதைகள் எல்லாம் இசையமைதி உடையனவே என்னலாம். தொல்காப்பிய மெய்ப்பாட்டியியலில் உள்ள உணர்ச்சியாகிய சுவைகளுக்கு இலக்கணம் கூறப்பட்டிருத்தலின் அக்காலத்திலேயே அத்தகைய செய்யுட்கள் மிக்கிருந்தனவாதல் வேண்டும். நமக்குக் கிடைத்துள்ள இடைக்காலத்து நூல்களிலும் சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரிய புராணம்,  முதலிய சுவை உணர்ச்சிகள் த்தும்பப் பெற்ற பாடல்களால் அமைந்தனவாகும்.

 

இராமன் வனம் புகுவான்………… …தொடரும்……………………

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக