சனி, 18 ஏப்ரல், 2015

சங்க இலக்கியச் செய்திகள்

போர்க் களக் காட்சி
இன்சுடும் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பு ஒதுகின்றே ஒருகால்
வருதார் தாங்கிப் பின் ஒதுகின்றே
நல்கினும் நல்கான் ஆயினும் வெல் போர்ப்
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணை முயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றி
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே
                                         சாத்தந்தையார், புறநா. 80
இனிய கடுமையான கள்ளினை உடையது ஆமூர். அவ்வூரில் வலிமையுடைய மல்லனுடைய மிகுதியான வலிமையை அழித்து நின்றனன் பெருநற்கிள்ளி. அங்ஙனம் பொருதபோது ஒரு காலை மடக்கி மண்டியிட்டு மல்லனின் மார்பில் வைத்தும் மற்றொரு காலை மல்லன் முயலும் தந்திரங்கட்கு விலக்கி முதுகின் பின்னர் வைத்தும் இருந்தனன்.
பசித்து மூங்கிலைத் தின்ன முயலும் யானையைப் போல தலையும் காலுமாகிய இரண்டிடமும் முறியுமாறு மோதினான். களத்தில் போரில் எதிர்ப்பட்ட மல்லனை வென்று கொன்ற நிலையை, வெல்லும் போருடையவனும் போரிடுவதற்கு அரியவனும் கிள்ளியின் தந்தையுமாகிய தித்தன் மனம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காண்பானாக.
இப்பாடல் ஒரு நேர்முக வருணனை. இவ்வகைப் பாடல்களைத் தொகுத்து ஆய்க.
(ஏமாந்த = ஆசைப்பட்ட. 101) சேம அச்சு = ஸ்டெப்னி – 102. குறுமாக்கள் = சிறு பிள்ளை

கள்.104. பவர் = கொடி. 109 பழிச்சி = வாழ்த்தி 113. அல்குல் = உயிர் உறுப்பு, மறை உறுப்பு.116.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக