ஞாயிறு, 3 மே, 2015

நல்லாதனார்-- நன்மொழி

நல்லாதனார்-- நன்மொழி

திரிகடுகம்
கல்லார்க்கு இனனாய் ஒழுகலும் காழ்கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும் – இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலும் இம்மூன்றும்
அறியாமையான் வரும் கேடு
                                                                       திரிகடு. 3
கல்லாத மூடரோடு சேர்ந்திருப்பதும் கற்புடைய மனைவியைக் கம்பால் அடித்தலும் சிற்றறிவினரை வீட்டிற்கு அழைத்து வருதலும் ஆகிய இம்மூன்று செயல்களும் அறியாமையால் வரும் கேடுகளாம்.
                                                                                                  
பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும் பேணார்
திறன் வேறு கூறின் பொறையும் – அறவினையைக்
கார் ஆண்மை போல ஒழுகுதலும் இம்மூன்றும்
ஊர் ஆண்மை என்னும் செருக்கு
                                                                               திரிகடு. 6
பிறர் புகழ்ந்து பேசும் பொழுது தனக்கு இது தகாது என்று நாணுதலும் பிறர் தன்னை இகழும் பொழுது  பொறுத்தலும் மேகத்தைப் போல்  கைம்மாறு கருதாமல் பிறர்க்கு உதவி செய்தலும்  ஆண்மைக்குரிய செல்வங்களாம்.
                                                                                                 
கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கு அறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக் களனும் – பாத்து உண்ணும்
தன்மை இலாளர் அயல் இருப்பும் இம்மூன்றும்
நன்மை பயத்தல் இல
                                                                                        திரிகடு. 10
கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊரில் இருப்பதும் வழக்கைத் தீர்க்கும் திறமில்லாதவர் சபையில் இருப்பதும் பகுத்து உண்ணும் பண்பு இல்லாதவர் பக்கத்தில் இருத்தலும் ஆகிய இந்த மூன்றும் நன்மை தருவன அல்ல.

தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்
வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்
                                                                                          திரிகடு. 12 : 1, 2
ஊக்கம் உடையவன் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் கடன்படாமல் வாழ்பவனே ; பிறர்க்கென வாழ்பவன் என்பான் வந்த விருந்தினர் பசித்து இருக்கையில் தனித்து உண்ணாதவன்.

இழுக்கல் இயல்பிற்று இளமை ...
                                                                            திரிகடு. 14 : 1
இளமைப் பருவம், தவறு செய்தலை இயல்பாக உடையது
                                                                                             
நிறை நெஞ்சு உடையானை நல்குரவு அஞ்சும்
                                                                                 திரிகடு. 72 : 1
ஒழுக்கம் நிறைந்த உத்தமனைக் கண்டு வறுமை அஞ்சும்.
                                                                                       
உப்பின் பெருங்குப்பை நீர்படின் இல்லாகும்
நட்பின் கொழுமுளை பொய் வழங்கின் இல்லாகும்
                                                                              திரிகடு. 83 : 1, 2
உப்புக் குவியலில்  நீர் புகுந்தால்  ஒன்றும் இல்லாமல்போகும் ; வளர்ந்துவரும் நட்பாகிய மொட்டில் பொய்யாகிய நெருப்பைப் பெய்தால் நட்பு அழிந்துபோகும்.
                                                                                                    
ஈதற்குச் செய்க பொருளை
                                                                                  திரிகடு. 90 : 1
இயலாதவர்க்குக் கொடுப்பதற்கே பொருளைத் தேடுக.
                                                                                    

                                                  முற்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக