செவ்வாய், 2 ஜூன், 2015

மனவளக் கலை -- யோகம் …………………………………………… தொடர்ச்சி

மனவளக் கலை --    யோகம்
                        …………………………………………… தொடர்ச்சி
யோக நிலை
 நெறிவழியே சென்று நேர்மை உள் ஒன்றித்
 தறி இருந்தால் போல் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் துண்ணென்று உணராக்
குறி அறிவாளர்க்குக் கூடலும் ஆமே – 1457  என்றார் திருமூலர்.
                       மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்கள் வழியாகப் பிராணனை மேலே செலுத்தி நெற்றிக்கு நேர் புருவ மத்தியில் மனத்தை ஒன்றி நிற்கச் செய்து அடித்த கட்டுத்தறிபோல் ஒரே இடத்தில் அசைவற்றுத் தம் உடலை இருக்கச் செய்து – பிறர்வந்து உடலைச் சொறிந்தாலும் அடித்துத் துன்புறுத்தினாலும் இவை எதையும் உணராது அடைய வேண்டிய இலட்சியமே குறியாக இருந்து தியானம் செய்பவருக்கு யோகம் எளிதாகக் கைகூடும்.  
                       யோகநிலை உலக அளவில் அறிவியல் ரீதியாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது . டிஸ்கவரி-தமிழ் தொலைக்காட்சியில் சூப்பர் ஹியுமன்ஸ் நிகழ்ச்சியில்  உலகின் தலை சிறந்த யோகக் கலை வல்லுநர்கள் வலி உணரா நிலையை மெய்ப்பித்துக் காட்டினர்.
                        வாழும் கலையில் வல்லவராகவும் குங்ஃபூ கலையில் கைதேர்ந்தவராகவும் விளங்கி உலகப் புகழ் பெற்ற புரூஸ்லீ – 1940 – 1973 ; வாழும் கலைக்குப் புதிய இலக்கணம் வத்தவர். இவரால் வாழும் கலை உலகை வலம் வந்தது; புரூஸ்லீயின் கலை அலை உலகைத் தாக்கியது. புரூஸ்லீ யோகக் கலையில் வல்லவராக அரிய அளப்பரிய ஆற்றலை வெளிப்படுத்தும் ஞானத்தைக் கைவரப்பெற்றவராகத் திகழ்ந்தார். யோகக் கலை குறித்து ஆராய்ச்சியும் செய்துள்ளார். அவர் தன்னுடைய நாட்குறிப்பேட்டில்  - யோகக் கலை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வந்தது என்று குறிப்பிட்டுள்ளார். ஐயாயிரம் ஆண்டுகட்கு முந்தைய இந்தியா என்பது பண்டைய தமிழ் நிலமே ! புரூஸ்லீ- யோகக் கலையில் உடல் உள்ளம் – உடற் பயிற்சி ஆகியவற்றோடு உணவும் சிறப்பிடத்தைப் பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
                             நவீன அறிவியலுக்குச் சவால்விடும் அளவுக்கு மனவளக் கலை விளங்குவதை டிஸ்கவரி – தமிழ் ஒளிபரப்பில் காணமுடிந்தது—
மன வலிமை மரணத்தை வெல்லுமா..?
மரணமிலாப் பெருவாழ்வு வாய்க்குமா..?
வள்ளலார் வாக்கு மெய்ப்படுமா …?
                          இக் கேள்விகளுக்கு விடை அளித்தது அந்நிகழ்ச்சி…..
கரணம் தப்பினால் மரணம் . 30 மீட்டர் உயரம் – 11 வது மாடி கைப்பிடிச் சுவரின் விளிம்பில் நின்று உடற்பயிற்சி செய்தார் – மனத்தை ஒரு நிலைப் படுத்தி. இன்னொருவர் 300 மீட்டர் உயர மலை உச்சியின் விளிம்பில் தியானமும் உடற்பயிற்சியும் செய்தார். அவர் சொன்னார் “ மரண பயம் நீங்கும்போதுதான் மனிதன் வாழத் தொடங்குகிறான் “- என்றார். அடுத்து பனி மனிதன் (ஐஸ் மேன்)  வெற்றுடம்போடு உறைபனியில் ஆசனம். மனத்தைத் தன்வயப்படுத்தி உடற்பயிற்சி. பனிமலையில் வெறுங்காலால் மாரத்தான் ஓட்டம். நம்பமுடிகிறதா..?
                        சுவரில் துளையிடும் மின் துரப்பனத்தை வயிற்றிலும் நெற்றிப் பொட்டிலும் அழுத்தி இயக்கினார்; வலி உணரா நிலை இவருக்கு எப்படி வாய்த்தது என்று அறிவியல் வியந்து போயிற்று.
                          மேற்கூறியவை எல்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை ; யோகக் கலைக்கு உட்பட்டவை. இவர்களுடைய மன வலிமையை – விஞ்ஞானிகள் அறிவியல் ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்து – ”இவர்கள் உண்மையிலேயே சூப்பர் ஹுயுமன்ஸ் என்று சான்றளிக்கிறார்கள்.

இன்ப நிலை
                              மனவளக் கலை மரண பயத்தை நீக்கும் என்பது அறிவியல் ஒப்புக்கொண்ட உண்மையாகும். அன்றாடம் பயிலும் யோக் கலையின் நிறைவு நிலை – இன்ப நிலை – சாந்தி ஆசனம்.
                       “ கை கால்களை நீட்டிச் சாதாரண நிலையில் படுத்து கண்களை மூடி மனத்தை ஒரு நிலைப்படுத்தினால் – மனம் சலனமில்லா இன்ப நிலைபெறும்.”  கி.து. வாண்டையார் – இன்ப வாழ்வு ப.87
                        சாந்தி ஆசனம் – மனத் தடுமாற்றங்களை மாய்க்கும் ; நாள் முழுதும் மனத்தில் அமைதி நிலவும் ; அந்த அமைதியைத்தான் ஐயா அவர்கள் இன்பநிலை என்று கூறுகின்றார்கள். “ நிறைவான இன்பம் அமைதியான வாழ்வில் விளைகின்றது.அமைதியான வாழ்வு நல்ல பண்பாட்டில் பயனாக வாய்ப்பது. அமைதியை நாடுவதே சிறப்பு; அதனால்தான் யோகம் தியானம் ஆகியவற்றைப் பயிற்றுவிக்கும் குருமார்கள் – ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !! என்று கூறுகின்றனர்.” (மேலது)
                                  மனித மனம் நிலையற்றது ; மனத்தை ஒரு நிலைப்படுத்தித் தன்வயப்படுத்தினால் மனிதம் தழைக்கும்.
ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும்
வென்றான் தன் வீரமே வீரம் – என்றானும்
                           சாவாமற் கற்பதே கல்வி தன்னைப் பிறர்
ஏவாமல் உண்பதே ஊண் – (தனிப்பாடல்)
என்பது ஒளவையார் கூற்று.
ஒன்றே இறை – சிவன்; ஐம்புலன் அடக்கல் – திண்மை; சாகா கல்வி – மரணமிலாப் பெரு வாழ்வு . தாயுமானவர் வள்ளலார் வழிநின்று மேலும் அறிக.
 நாபியகத்தே நலனுற நோக்கிடில்
சாவது மில்லை யுடம்பு (233) என்கிறது ஒளவைக் குறள்.
                          யோக நெறியில் செம்பொருளைச் சிந்தித்து உணரும் பயிற்சியினால் இறவாப் பெரு நிலையை அடைவதே சாகா கல்வியாகும்.
 சாதலால் வரும் துன்பத்தினை மன உணர்வு உடைய மாந்தர்கள் தாம் மேற்கொண்டு ஒழுகும் தவத்தின் ஆற்றலால் மாற்ற- இவ்வுலகில் இறவாநிலையை அடைதல் கூடும் என்னும் உண்மையினை வள்ளுவர்-
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு – 269
                           இந்நிலை எய்துதல் எவர்க்கும் எளிதன்று. அந்நிலை அடைதல் அரிய தவத்தின் பாற்பட்டது. அரிய தவத்தொடு தானம் செய்வாரின் தலைசிறந்தாரை
  மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
  தானஞ் செய்வாரின் தலை – 292 – என்று குறிப்பார்.
                         உள்ளத்தால் பொய்யாது ஒழுகி உலகியலில் அரிய ஆற்றுவாரைச் சான்றோர் என்பர் ; இதனால் அரிய ஆற்றல் மனத்தொடு பொருந்துகிறது. ஒரு மனிதனை மாவீரனாக்குவதும் அவ்வாற்றலே ; இஃதே இறை ஆற்றல் என்பதாம்.
                                     மனவளக் கலை கற்றார் பலரே; கைவரப் பெற்றார் சிலரே; ஆற்றவல்லார் வெகுசிலரே – அவ்வகையில் ஐயா அவர்கள் கற்றும் கைவரப் பெற்றும் ஆற்றவும் வல்லவராகத் திகழ்கிறார்கள். மதிப்புமிக்க மனித உயிர்கள் நோயில் நலியாது; பாயில் படுக்காது; வாழும் காலம் வசந்த காலமாகத் திகழ ஐயா அவர்கள் ஆற்றிவரும் அரும்பணிகள் யாவும் பொருள் நோக்கு உடையதன்று; அருள் நோக்கு உடையன என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ..?
                          சிந்தை தெளிய – சித்தர் வாழ்வறியோம்; செப்பும் பொருள் அறியோம்; மன மாசு அகற்றும் மந்திரம் அறியோம் ! நாடெங்கும் நாடின் இவை யாவும் அருள்வார் திருமுகம் தேடின் வாழும் கலை வழங்கும் வள்ளல் ஐயா அவர்கள் நம் கண் முன் தோன்றுகிறார்கள். கரும்பிள்ளைப் பூதனார் கூறியவாறு ….
இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன்
நல்லது வெஃகி வினை செய்வார் ---- என்று ஐயா அவர்களின் இறைஆற்றல் சிறந்தமை கண்டு தெளிந்தனம்.

அறிவியல் ஆய்வு முடிவு
FOR MIND POWER – DO -20 MIN. OF YOGA
A single  20 minute session of Yoga can significantly improve brain function – a new study led by an Indian origin researcher has found.
Yoga is an ancient Indian science and way of life that includes not only physical movements and postures  but also regulated breathing and meditation ; said Neha Gothe – who led the study while a graduate  student  at the university  of Illinois at Urbana – champaign – TOI_9/6/13.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக