சனி, 4 ஜூலை, 2015

புறநானூறு – அரிய செய்தி - 36-40

புறநானூறு – அரிய செய்தி - 36
                                        கால் கழி கட்டில்பிணம்வெள்ளாடை
.................... என் சிறுவனைக்
கால்கழி கட்டிலில் கிடப்பி
தூய வெள் அறுவை போர்ப்பித்திலதே
                                           ஒளவையார், புறநா.286 : 3-5
 என் மகனைக் கால் இல்லாத கட்டிலாகிய பாடையில் கிடத்தித் தூய வெள்ளாடையை அவன்மீது இன்னும்  போர்த்திலையே.
அனைவரினும் மேலாக அரசனால் மதிக்கப்பட்ட தன் மகன், நன்றிக்கடனாக இன்னும் தன் உயிரைத் தருவதற்குரிய காலம் வரவில்லையே என்று மறக்குடி மகள் ஒருத்தி ஏங்குவதாக இப்பாடல் அமைகிறது.
புறநானூறு – அரிய செய்தி - 37
                                                  புலையன், இழிசினன்
துடி எறியும் புலைய
எறிகோல் கொள்ளும் இழிசின
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயற் கெண்டையின் வேல் பிறழினும்
பொலம் புனை ஓடை அண்ணல் யானை
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லாப் பீடுடையாளர்
                                            சாத்தந்தையார், புறநா.287 : 1 – 7
 துடிப் பறை கொட்டும் புலையனே, குறுந்தடியைக் கையில் கொண்டு பறையை முழக்கும் பறையனே ! கார் காலத்து ம்ழைபோல் அம்புகள் உடலில் வந்து தைத்தாலும் வயல்களில் பிறழும் கெண்டை மீன்கள் போன்ற வேல்கள் வந்து பாயினும், பொன்னால் ஆக்கப்பட்டு முகபடாம் போர்த்தப்பட்ட பெருமைமிக்க யானைத் தன் வெண்மையான கூரிய கொம்புகளைக் கொண்டு குத்தினாலும் அஞ்சிப் புறங்கொடுத்து ஓடாத ஆண்மை மிக்க மறவர்கள் நீங்கள்.

புறநானூறு – அரிய செய்தி - 38
                                              போர் முரசு
மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின்
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண்பிணி முரசம் இடைப் புலத்து இரங்க
                                         கழாத்தலையார், புறநா. 288:  1 – 4
காளை, மண்ணைக் குத்துவதால் உண்டான கோடுகளோடு
கூடிய கூரிய கொம்புகளை உடையது. இவற்றில் பெருமை மிக்க நல்ல ஆனேறு இரண்டினைத் தம்முள் சண்டையிடச் செய்வர், அவற்றில் வென்ற காளையினுடைய தோலை மயிர் சீவாது போர்த்தி உறுதியாய்க் கட்டப்பட்ட போர் முரசைச் செய்வர். இத்தகைய முரசு போர்க்களத்தின் நடு இடத்தில் முழங்கும்.
பசும் பொன் மண்டைபசிய பொன்னால் செய்யப்பட்ட கள் பெய்த கலம்-
 புறநா. 289 : 6
290 – பனை ஓலைக் குடை ,. உறைப்புழி ஓலை போலபுறநா. 290 : 7 மழைத்துளிகள் மேலே விழாதபடி காக்கும் பனை ஓலைக் குடை போல.
புறநானூறு – அரிய செய்தி - 39
                                                                பாம்பு மணி உமிழுமா?
அரவு உமிழ் மணியின் குறுகார்
நிரை தார் மார்பின் நின் கேள்வனை பிறரே
                           பெருந்தலைச் சாத்தனார், புறநா.294 :8,9
பெருந்தலை ஊர்கோவைமா
நாகப் பாம்பு உமிழ்ந்த மணியை யாரும் அணுகாது  போலப் பகைவரும் அவனை நெருங்கவில்லை. ( நாகப் பாம்பு மணியை உமிழ்ந்து அதன் ஒளியில் இரை தேடிச் சென்று அதனையே நினைந்திருக்கும் யாரேனும் மணியை அணுகினால் துன்புறுத்தும் என்பது நம்பிக்கை    நாம நல்லராக் கதிர்பட உமிழ்ந்த மேய்மணி விளக்கின், அகநா. 72., 138.
மேய்மணி இழந்த பாம்பின், அகநா. 372. அருமணி இழந்த நாகம் போன்றுசிலம்பு.புறஞ்..கா.58.
  அருமணி இழந்த நாகம் போன்றுசிலம்பு.புறஞ்..கா.58 காண்க.)
முதன்மை நோக்கு : அறிவியல் அணுகுமுறை
புறநானூறு – அரிய செய்தி - 40
                                    முதியவள்வற்றிய முலையில் பால் சுரந்தது
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
கிடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய
சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி
வாடுமுலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே
                                  ஒளவையார், புறநா.295 : 4 – 8
போர்க்களத்தில் படைத் திரளின் இடையில் வெட்டுண்டு உடல் சிதைந்து வேறுபட்டான். பின்னிட்டு ஓடாத கொள்கையினை உடைய காளைக்குத் தாயாகிய இவள், சிறப்புக்குரிய தன் மகனின் மறமாண்பு கண்டு அன்பு மேலிட அத்தாயின் வற்றிய முலைகளில் பால் ஊறிச் சுரந்தன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக