நற்றிணை – அரிய
செய்தி – 22 - 24
சங்கு முழங்கும்
வீரை வேண்மான் வெளியன் தித்தன்
முரசுமுதற் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோ டியம்ப நுண்பனி அரும்பக்
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து
உறையூர் முதுக்கூத்தனார். நற் . 58 : 5 - 8
தித்தன் நகர்க்கண் முரசு இருக்கும் கட்டிலிடத்தே வரிசையாக ஏற்றப்பட்டிருக்கும்
விளக்குகளின் வரிசைக்கு – கடற்கரையில் வரிசையுறக் கிடந்த முழங்கும் சங்குகள் உவமம்.
நாட்காலையிலும் அந்தி மாலையிலும் செல்வ நகரங்களில் சங்கு முழக்குவது பண்டை நாளை மரபு.
இவ்வழக்கம் இன்றும் உண்டோ ? ஆய்க.
நற்றிணை – அரிய
செய்தி – 23
நன்பில் கானவர்
புலியொடு பொருத புண்கூர் யானை
நற்கோடு நயந்த நன்பில் கானவர்
கபிலர் . நற். 65 : 5 – 6
புலியொடு போருடற்றி
அதனை வென்று உடம்பெங்கும் புண்ணுற்று
வருகின்ற யானையைக்கண்டு; அதன் வீரம் செறிந்த
நல்ல மருப்புக்களைப் பெறவிரும்பிய நற்பண்பில்லாத வேட்டுவர். ( விலங்கு வேட்டை அன்றும் கொடிது )
நற்றிணை – அரிய
செய்தி – 24
உகாஅய் மரம்
மிளகுபெய் தனைய சுவைய புன்காய்
உலறுதலை உகாஅய்ச் சிதர்சிதர்த் துண்ட
மிளைக்கந்தன் நாகனார். நற். 66 : 1-2
புல்லிய அடியையும் உலர்ந்த கோடுகளையும் உடைய உகாய் மரத்தின்
; மிளகைச் சுவைத்தாற் போன்ற சுவை உடைய காய். குயிலின் கண் போற் சிவந்து மணிக்காசு போன்று
இருக்கும் . புறாக்கள் அக் காயைச் சிதைத்து
உண்ணும். ( உகாய் மரத்தின் நிறமும் புறாவின் நிறமும் ஒத்திருத்தலின் அஃது அம் மரத்தின்கண் இருப்பது அதற்குக் காப்பாகும்.
உகா மரம் – ஓமை மரம் - பாலை நிலத்தது)மேலும்
காண்க: குறுந். 274 . 363.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக