புதன், 8 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ்-30 ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை


தன்னேரிலாத தமிழ்-30
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

தனியன் எனப்படுவான் செய்த நன்று இல்லான்
 இனியன் எனப்படுவான் யார் யார்க்கே யானும்
 முனியா ஒழுக்கத் தவன்.” – நான்மணிக்கடிகை.
 பிறர்க்கு ஒரு நன்மையும் செய்யாதவன் மக்கட் சமுதாயத்தில் தனித்து விடப்பட்டவன் ஆவான் ;  எவராலும்  வெறுக்கப்படாத ஒழுக்கத்தை உடையவன் யாவர்க்கும் இனியவன் ஆவான்.

வெப்பத்தால் ஆய வியாதியை வெல்வதூஉம்
வெப்பமே என்னார் விதி அறிவார் வெப்பம்
தணிப்பதூஉம் தட்பமே தான் செய் வினையைத்
துணிப்பதூஉம் தூய ஒழுக்கு.”---அறநெறிச்சாரம்.

நெறிமுறைகள் அறிந்தவர்கள் வெப்பத்தால் உண்டாகும் நோயைப் போக்குவது வெப்பமே என்று கூறமாட்டார்கள் ; அவ்வெப்பத்தைத் தணிப்பது தண்மையே ; அதுபோல ஒருவன் செய்த தீவினைகளைப் பயன் தராமல் தடுத்து அழிப்பதும் தூய்மையான ஒழுக்கமே ஆம்.

உடைப் பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை
அடக்கம் இல் உள்ளத்தன் ஆகி நடக்கையின்
 ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் குரங்கின் கைக்
 கொள்ளி கொடுத்து விடல்.” --- பழமொழி.

செல்வ வளத்தால் பெருமை பெற்ற ஒருவன் அடக்கமின்றி நடப்பானாயின் அத்தகைய ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்ந்த முதன்மைப் பதவியைக் கொடுத்தால், அது குரங்கின் கையில் கொள்ளிக் கட்டையைக் கொடுத்தலோடு ஒக்கும்.

கூத்தும் விழவும் மணமும் கொலைக் களமும்
ஆர்த்த முனையுள்ளும் வேறு இடத்தும் ஓத்தும்
ஒழுக்கமும் உடையவர் செல்லாரே… ---- ஏலாதி.

கல்வியும் அதற்குத் தகுந்த ஒழுக்கமும் உடைய சான்றோர்கள் கூத்தாடுமிடத்தும் திருவிழா நடக்குமிடத்தும் திருமணம் நிகழுமிடத்தும் கொலைக் களத்தும் போர்க்களத்தும் இவை போன்ற பிறவிடங்களுக்கும் செல்லமாட்டார்கள்.

நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து
 வல்லார் ஆயினும் புறம் மறைத்துச் சென்றோரைச்
சொல்லிக்காட்டிச் சோர்வு இன்றி விளக்கி
 நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கம்.” ---- மலைபடுகடாம்.

தாம் கற்றவற்றை வெளிப்படுத்தும் நாவன்மை மிக்க அறிவுடையோர் பலர் கூடிய அவைக் களத்தில், தாம் கற்றவற்றை மனங்கொளக் கூறாரிடத்தும் அவர்தம் இயலாமையை மறைத்து , இகழாது, எல்லோர் மனங்களிலும் பொருந்துமாறு பொருளுரைத்து, அவர்களை நன்றாக நடத்தும் இயல்பினர். இத்தகைய உயரிய ஒழுக்கமுடைய சான்றோர் சுற்றம் சூழ விளங்குவது நன்னன் அவைக்களம்.

1 கருத்து: