புதன், 6 மார்ச், 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…98..

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…98..

உலகநாதர் இயற்றிய உலகநீதி

நெஞ்சே…..!

”புறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்

        வாதாடி வழக்கழிவு செய்ய வேண்டாம்

திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்

        தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்

இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

        ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்

குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்

        மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.”

 

கண்டு ஒன்று கணாமல் ஒன்று  என்று புறம் பேசும் மூடர்களோடு சேர வேண்டாம்.

வேண்டாத வம்புகளில் சிக்கி  விதண்டாவாதம் செய்து குடிப்பெருமையை அழித்துவிடாதே.

எல்லாம் எனக்குத் தெரியும் என்று திமிராகப் பேசித் திரிந்து, எவரையும் மதிக்காது அடக்கமின்றி அலைந்து கலகம் செய்ய வேண்டாம்.

உயிர்கள்  மீது கருணைகொண்டு ஒழுக்கமுடன் வாழ இறைவனை நாள்தோறும் வழிபட மறக்க வேண்டாம்.

விளையாட்டாகக்கூடப் பொய்சொல்லக்கூடாது; ஒருவேளை உயிரே போகும் நிலைவரினும் அந்நிலையிலும் பொய் சொல்ல வேண்டாம்.

உன்னை இகழ்ந்து பேசியவர் உன் நெருங்கிய உறவினராயினும்   அவருடன் தன் மானம் இழந்து உறவு கொள்ள வேண்டாம்.

  குறி சொல்லும் குறவர் குடியில் பிறந்த பெண்ணின் பெருந்தகையாள் வள்ளியின் கணவனாகிய முருகப்பெருமானின் பெயரைச் சொல்லி நாள்தோறும் வழிபடுவாயாக.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக