புதன், 15 ஜனவரி, 2025

பொங்கல் சிறப்பு மலர் .

 

பொங்கல் சிறப்பு மலர் .

 தமிழ் மொழியின் சிறப்பினை நாவலர் பலவாறாக விளக்கியுள்ளார். தமிழானது பகுத்தறிவுடைய மக்கள் முதலிய உயிரை உயர்திணை என்றும் பகுத்தறிவில்லாத உயிரையும் உயிரில் பொருளையும் அஃறிணை என்றும் அறிவு பற்றிப் பாகுபாடு செய்திருப்பதுபோல வடமொழி செய்யவில்லை. வேறு எம்மொழியும் செய்யவில்லை. இவ்விருவகைப் பெயர்களே தமிழ் மக்களின் உயரிய அறிவையும் கொள்கையையும் தமிழின் தனி மாண்பினையும் விளக்கப் போதியனவாகும்.”  (நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாட்டாரியம் ப.81.)

தமிழர் வழிபாடு:

புறநானூற்றிற் கண்ட சில பழைய வழக்குகளும் வரலாறுகளும்என்ற ஆய்வுக்கட்டுரை பழந்தமிழர்களின் வழிபாடு மற்றும் நம்பிக்கைகளை விவரிப்பதோடு போரில் சிறந்தவர்களுக்குச் செய்யும் சிறப்புகளையும் பட்டியலிடுகின்றது.  மேலும்  மழைவரத்துக் குறித்த நம்பிக்கையையும் தெய்வமுறையும் இடங்கள் குறித்த மக்களின் நம்பிக்கையையும் இலக்கிய மேற்கோள்கள் வழியாக நாவலர் விளக்கியுள்ளார். நன்னாளில் கதிர் கொய்து வந்து புதிது உண்டல், நீர் விளையாட்டு, மழக்கான மக்களின் வழிபாடு, புலி இடப்பக்கத்து வீழ்ந்த விலங்குகளை உண்ணாது என்னும் கருத்து, செத்தோரைப் பேராந்தை அழைக்கும் என்பது ஆகிய நம்பிக்கை வழக்காறுகளை விளக்கியுள்ளார்.” (மேலது. .92.)

 

பொங்கல் திருநாள்.

நன்னாளில் கதிர் கொய்து வந்து புதிது உண்டல்;

நல்நாள் வருபதம் நோக்கிக் குறவர்

உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறுதினை

முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார். ”(கதம்பிள்ளைச் சாத்தனார். புறநானூறு, 168. 5-7.)

நல்நாள் நோக்கிக் குறவர்,விதைத்தற்கும் விளைந்த கதிர்களைக் கொய்து உண்பதற்கும் நல்ல நாள் பார்ப்பது  பண்டைத் தமிழரின் வழக்கமாகும், இதனை நன்னாள் வருபதம் நோக்கி என்றும் நல்லநாள் பார்த்து , சிறுதினை முந்து விளைந்த புதிய தினை அரிசியைக் கொணர்ந்து உண்பர்.

சருக்கரைப் பொங்கல்:

செந்தீ அணங்கிய செழுநிணக் கொழுங்குறை

மென் தினைப் புன்கம் உதிர்த்த மண்டையொடு

இருங்கதிர் அலமரும் கழனிக் கரும்பின்

விளைகழை பிழிந்த அம்தீம் சேற்றொடு

பால்பெய் செந்நெல் பாசவல் பகுக்கும்” (தாயங்கண்ணனார், அகநானூறு, 237. 8 -12.

சிவந்த தீயில் சுட்ட கொழுத்த வளம் பொருந்திய கறித்துண்டுகளை மெல்லிய தினைச் சோற்றில் சொரிந்த உண்கலத்தோடு, முற்றிய கருப்புச் சாறாகிய பாகுடன்  பால் கலந்து பசிய செந்நெல் அவலைத் தன் சுற்றத்தாரோடு பகிர்ந்துண்ணும் வளமுடைய உறையூர்.

புதிது உண்ணல் இன்று நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளாகும்.

உழவர் திருநாள் :

பாண்டியன் நெடுஞ்செழியனுக்குக் குடபுலவியனார் என்னும் புலவர் என்னும் புலவர் பின்வறுமாறு அறிவுறுத்துகின்றனர். “ கடல் சூழ்ந்த உலகம் முழுவதையும் தமது முற்சியால் கைக்கொண்டு புகழை உலகத்தில் நிறுத்தி ஆட்சிபுரிந்த  வலியோரிடைய வழியில் வந்தோனே! நீ மறுமை உலகத்தின்கண் நுகரும் செல்வத்தை விரும்பினும், ஏனை மன்னரை யெல்லாம் வென்று நீயே தலைவனாதலை விரும்பினும், நல்ல புகழை இவ்வுலகத்தே நிலை பெறுத்தலை விரும்பினும் அதற்குத் தக்க செய்கையைக் கேட்பாயாக, உடம்புகளெல்லாம் உணவை நிலைக்களனாகவுடையன ; ஆதலின் நீரை இன்றியமையாத அவ்வுடம்புக்கு உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே ; உணவெனப் படுவது நிலத்தொடு நீரே ; அந்நீரையும் நிலத்தையும் ஒருவழிக் கூட்டினவர்கள்  இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவராவர் ; விதையை விதைத்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் புன்புலம் எத்துணை இடமகன்றதாயினும் அது அரசனது முயற்சிக்குப் பயன்படாதது ; ஆதலின்  இவ்வுண்மையைக் கடைப்பிடித்து, ஏரி, குளம் முதலிய நீர்நிலைகள் மிகும்படி செய்தோரே மறுமைச் செல்வம்  முதலிய மூன்றினையும் தம் பெயருடன் இவ்வுலகத்தில்  இசையச் செய்தோராவர்.” ((மேலது. .518புறநானூறு -18. )   

உழவர் பெருமை:

உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதுஆற்றாது

எழ்வாரை எல்லாம் பொறுத்து. குறள் -1032.

 உழுதொழில் செய்யமாட்டாது பிற தொழில்களை மேற்கொள்வோர் யாவரையும் காப்பாற்றும் வல்லமை உடைய உழவர் உலகத்தாராகிய தேர்க்கு அச்சாணியாவர்.

 

‘ இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்

 உழவிடை விளைப்போர் ….. (சிலப்பதிகாரம்- 10;)

 இரந்து வாழ்வோர் சுற்றமும்  அவர்க்குப் பொருள் கொடுத்துப் பாதுகாக்கும்கொற்றமும் உழவர் நிகழ்த்தும் உழவுத் தொழில் வழியே சிறப்படையும்.

ஓத்திர நெல்:

ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி

மாய வண்ணனை மனன் உறப் பெற்று

ஓத்திர நெல்லின் ஓகந்தூர் ஈத்து… (பதிற்றுப்பத்து.)

பல யாகங்களையும் பெரிய அறச் செயல்களையும் செய்து முடித்தவன் சேரன் வாழியாதன் . கரிய நிறமுடைய திருமாலைத் தன் மனத்துப் பொருந்தப் பெற்றவன். அத்தெய்வத்திற்கு ஓத்திர நெல் என்னும் ஒருவகை உயர்ந்த நெல் விளையும் ஓகந்தூர் என்னும் ஊரினைக் கொடையளித்தவன். ( ஓத்திர நெல் – இராச அன்னம் ; இந்நெல் ஒரு பறவையின் பெயர் பெற்றதாம் ; இதனை மின்மினி நெல் என்றும் கூறுவர்.)

ஏறுதவுதல் :

கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்

புல்லாளே ஆயமகள் . “ கலித்தொகை- 103.

கொல்லுகின்ற கொம்பினையுடைய  காளையைக் கண்டு அஞ்சுகின்ற ஆண்மகனை  மறுபிறப்பிலும் தழுவி மகிழ விரும்ப மாட்டாள்.

(ஏறு தழுவுதல் , முல்லை நிலத்தின் வீர விளையாட்டு ;   ஏறு தழுவிய பின்னர்க் குரவைக் கூத்து நிகழும் ; தெய்வ வாழ்த்தும் இடம் பெறும்.)

தொல்பழங்காலந்தொட்டே ஏறுதழுவுதல் நிகழ்ந்துவருகிறது. இவ்வீர விளையாட்டு சிந்து வெளி மக்களிடையே இருந்ததாக அங்கு அகழாய்வில் கிடைத்த முத்திரை ஒன்றால் அறியப்படுகிறது.

………………சித்தர்கள் ………..திருமூலர் ……தொடரும்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக