தமிழமுது –198– தொல்தமிழர் இசை மரபு:58.
4.. பதிற்றுப்பத்து - வீரக்கூத்து:
பதிற்றுப்பத்தில் ஒவ்வொரு செய்யுளின் பின்னும் அமைந்துள்ள துறை, வண்ணம், தூக்கு, பெயர் ஆகிய குறிப்புகளைத் தொல்காப்பியம் வழி அறிந்துகொள்ளலாம்.
சான்றாக இரண்டாம் பத்தில்்(11 ஆம் பாடல்) இடம்பெற்றுள்ள குறிப்புகள். துறை : செந்துறைப் பாடாண்பாட்டு .
செந்துறை:
என்பது உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல் என்பதாம். (தொல். புறத்.27. ) பாடாண்பாட்டு ; ஆன்மகனின் ஒழுகலாறுகளைப் பற்றிப் பாடும் திணையாகும் (தொல்.புறத். 25.) செந்துறைப்பாடாண் என்பது உலகினுள் வாழும் வாழும் இயற்கை வகையான் இயன்ற மன்னர் அல்லது பிற ஆண் மக்கள் , பிறர்தம் ஒழுகலாறுகளைப் பாடுவதாகும்.
வண்ணம்:
ஒழுகு வண்ணம். பாடலின் போக்கு அற்று அற்றுச் செல்லாமல் ஒழுகிய ஓசையுடையதாக அமைவது.
தூக்கு :
செந்தூக்கு என்பது ஆசிரிய அடியையே குறிக்கும் (தொல். செய். 71) வேற்று அடி விரவாது பாட்டு முழுவதும் ஆசிரிய அளவடியாய் வந்திருப்பதனால் செந்தூக்கு ஆயிற்று.
பெயர்: புண்ணுமிழ் குருதி (புண் உமிழ் குருதி) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வேல் அவன் பகை மன்னர்களின் துளத்தற்கரிய மார்பினைத் துளத்ததினால் உண்டான புண்கள் உமிழும் குருதியினால் உப்பங்கழியில் உள்ள நீலமணி போன்ற நீர் தன் நீலநிறம் மாறிக் குங்குமக் கலவை போலச் சிவப்பாயிற்று என்னும் இச்சிறப்புக்கருதிப் பாடலுக்குப் புண்ணுமிழ்குருதி என்பது பெயராயிற்று.
வீரக் கூத்து :
“துளங்கு பிசிர் உடைய மாக்கடல் நீக்கி
கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன்பணை
ஆடுநர் பெயர்ந்து வந்து அரும்பலி தூஉய்
கடிப்புக் கண் உறூஉம் தொடித்தோள் இயவர் .”
-----குமட்டூர்க் கண்ணனார்17: 4-7.
அசைதலையுடைய நீர், துளித்துளியாகச் சிதறும்படி பெரிய கடலைக் கடைந்து அங்குள்ள பகைவரது காவல் மரமாகிய கடம்ப மரத்தினை வெட்டி அம்மரத்தினால் வெற்றி பொருந்திய பெரிய முரசு செய்தான் சேரலாதன். வீர வளையினை அணிந்த தோள்களையுடைய வீரர்கள் வீரக் கூத்தினை ஆடியவாறே அம்முரசத்தின் அருகே சென்று அரிய பலிக்குரிய பொருள்களைத் தூவி வணங்கிப் பின்னர்க் குறுந்தடி கொண்டு அந்த முரசினை அடித்தனர்.
இந்த வீரக்கூத்து, போர்க்கள வெற்றிக்களிப்பின் வெளிப்பாடாகும்.
................................ தொடரும்........................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக