வியாழன், 7 மார்ச், 2019

திருக்குறள் -சிறப்புரை :1156


திருக்குறள் -சிறப்புரை :1156

பிரிவுரைக்கும் வன்கண்ண ராயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை. ------ ௧௧௫௬

நம் அன்பின் அருமை அறியாத காதலர், தாமே நம் முன்னின்று  தம் பிரிவினை உணர்த்தும் கொடுமை செய்யும் நெஞ்சினை உடையாராயின்  பிரிந்துசென்று மீண்டும் அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றதாகும்.

““பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காம்மொடு
உடனுயிர் போகுகதில்ல கடனறிந்து
இருவே மாகிய உலகத்து
ஒருவே மாகிய புன்மை நாம் முயற்கே.” ----குறுந்தொகை.

தமக்கிடையே பூ ஒன்று இடைப்புகுந்து, ஒன்றையொன்று காணமுடியாமல் மறைப்பதாயினும் ஓர் ஆண்டு கழிந்தது போல, நீரில் வாழ்கின்ற மகன்றில் பறவைகளின் சேர்க்கை விளங்குவதாகும். ஓருயிர் இரண்டு உடல்களில் வாழ்வதுபோல் நாங்கள் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தலைவன் பிரிந்தபோது, அவரின் வேறாக, ஓர் உயிர், ஓர் உடலில் வாழ்வது போன்ற இழிவு நேர்ந்துவிடும், அவ்விழிவினின்றும் நீங்குவதற்காகப் பிரிதற்கு அருமையுடைய, துய்த்தல் அடங்காத காமத்துடன் கடப்பாடு அறிந்து, காதலர் பிரிந்தவுடன் என் உயிரும் உடன் நீங்குவதாகுக, அதுவே என் விருப்பமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக