புதன், 12 நவம்பர், 2025

தமிழமுது –170 – தொல்தமிழர் இசை மரபு:...தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். ..

 

தமிழமுது –170 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 30.

தமிழால் வீடுபேறு

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

 

நிலையாமை என்பது வாழ்க்கையைச் செயலற்ற தன்மை ஆக்குவதற்கு அல்ல. காலத்தின் விரைவு கருதி அறத்தின் வழியில் செயல்களை விரைந்து செய்வதற்கே….!

 

“நல்லதோர் வீணை செய்தே அதை

நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ ?”

 

 என்று பாரதி கேட்டதைப்போல,  வாழ்க்கைய மதிக்காத போக்கிற்கு விடை கொடுக்கத்தான்.

வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின் என்று வலியுறுத்தியது தமிழர் சமய நெறி.

 

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

 வாழத்தான் வேண்டும்!

வாழ்வதற்கு என்ன தேவை ?

மாடமாளிகை கூட கோபுரங்களா?

வங்கியின் மூலதனமா..?

 

 ”வாழ்க்கைக்குப் பொருள் தேவை ! அதைப்போல நாம் வாழ்வதிலும் பொருள் தேவை” நான் வாழ்ந்தால் போதாது. நாம் வாழவேண்டும் என்ற எண்ணம் இதயத்தில் வேண்டும்.  வீட்டிற்கும் வீதிக்கும் இணைப்பு இருத்தல் வேண்டும். தன் வாழ்க்கை தன்னல வட்டத்தில் அமைந்துவிடக் கூடாது. தன்னல் வட்டத்தில்  அமைந்த வாழ்க்கை  நன்மை எது ? தீமை எது ? என்று தெரியாத தடுமாற்றத்தில் தீமையை நன்மையாகக் கருதி, விட்டில் பூச்சி, ,விளக்கொளியில் மடிவதுபோல் முடிந்து போகும்.

 

 யானே பொய் ; என் நெஞ்சகம் பொய்; என் அன்பும் பொய், ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமோ ?” என்று அழுது அழுது ஆண்டவனைத் தொழுவார் மணிவாசகப் பெருமான்.

 “ ஏசிடினும் யான் உன்னை ஏத்தினும் என்பிழைக்கே குழைந்து  வேசறுவேனை விடுதி கண்டாய்.” என்று போற்றிடினும் புழுதி வாரித் தூற்றிடினும் என் பிழை களைந்திடும் பெருமான் ..” என்று போற்றுவதன் மூலம் இறையருளின் தாயன்பை உணரமுடிகிறது.

பண் சுமந்த பாடல்களுக்காய் மண் சுமந்தான் அவன் தன் பொன்மேனி புண் சுமந்து ; இனிய தீந்தமிழ் பாடல் நாளும் பொற்காசு கொடுத்து விரும்பிக் கேட்டான்.

 

 “ பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்

பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்

விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்தீசன்

 கண் சுமந்த  நெற்றிக் கடவுள் கலிமதுரை

மண் சுமந்து கூலி கொண்டு அக்கோவால் மொத்துண்டு

புண் சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்.”

 

 ஊன் உருகும், உயிர் உருகும் திருவாசகத்தை இறைவன் தாமே தம் கைப்பட் எழுதிக்கொண்டான் என்பார்கள்.

 

ஜி.யு. போப் எந்தக் கடிதம் எழுதும் பொழுதும் திருவாவகத்தை மேற்கோள் காட்டி எழுதுவாராம். அப்படி எழுதும் பொழுது திருவாசகம் உயிரின் உணர்வினைத் தட்டி எழுப்பியதால், ஊற்றெழும் அன்பினால் கண்ணீர்த் துளிகள் சொரியும், விழுந்த கண்ணீர்த்துளிகள்  கடிதத்தில் சில எழுத்துக்களையே அழித்து விடுமாம் , ஜி.யு. போப் கண்ணீர்த்துளியால் கரைந்த எழுத்துக்களோடு கடிதத்தை அனுப்புவாராம். கண்ணீர்த்துளிகளால் கரைந்த எழுத்துக்கள் உள்ள கடிதத்தை மாற்றி வேறு கடிதம் அனுப்ப மனமில்லை “ திருவாசகத்தால் எழுந்த கண்ணீரும் புனிதத் தன்மை வாய்ந்த்து.” என்பதால் கடிதத்தை அப்படியே அனுப்பியுள்ளேன் என்பாராம் ஜி.யு.போப்.

 

 மணிவாசகர் இறைவனோடு……..தொடரும்……………….


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக