சனி, 19 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 74 - 76

நற்றிணை – அரிய செய்தி – 74 - 76
புணர்ச்சி அழகூட்டும்
…………………….. நன்மலை நாடன்
புணரின் புணருமார் எழிலே பிரியின்
மணிமிடை பொன்னின் மாமை சாய என்
அணிநலம் சிதைக்குமார் பசலை ……..
மாறோக்கத்து நப்பசலையார். நற். 304 : 4 – 7
  தோழி ! தலைவன் வந்து புணர்ந்த பொழுதெல்லாம் எனக்கு நல்ல அழகு உண்டாகியது; அவன் என்னைப் பிரிந்த பொழுது நீலமனி இடையே இருக்கும் பொன்னைப் போல மாந்தளிர் நிறம் போன்ற என் மேனியின் அழகு அனைத்தும் கெடுமாறு பசலை நோய் படர்ந்தது.
நற்றிணை – அரிய செய்தி – 75
பொறி அழி பாவை
 …………………………. நல்வினைப்
 பொறி அழி பாவையின் கலங்கி நெடிது நினைத்து
ஆகம் அடைந்தோளே …………..
எயினந்தை மகன் இளங்கீரனார் . நற். 308 : 6 – 8
 அவள் சிறந்த சித்திரத் தொழில் அமைந்த பாவையொன்று இயந்திரம் அற்று விழுந்தாற் போலக் கலங்கி நெடும்பொழுது நினைந்து நின்று என் மார்பின் மீது சாய்ந்து விழுந்தாள். ( இயந்திரம் அமைக்கப்பெற்ற (பொம்மை) பாவையா?
நற்றிணை – அரிய செய்தி – 76
இளமை திரும்புமா..?
 முதியோர் இளமை அழிந்தும் எய்தார்
வாழ்நாள் வகை அளவு அறிஞரும் இல்லை
முப்பேர் நாகனார். நற். 314 : 1 – 2

 ஒரு காலத்தே முதுமையை அடைந்தவர் மறுபடியும் அழிந்த இள்மையை எய்துவது என்பது இல்லை ; அதைப்போலத் தம் வாழ்நாள் கால அளவு இன்னதென்பதையும் வரையறுத்துக் கூறுவார் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக