செவ்வாய், 17 ஜனவரி, 2017

முதலில் இந்தியன்

முதலில் இந்தியன்
இரண்டாவதாக, தமிழன்
மூன்றாவதாக…… வேண்டாம்
” முதலும் முடிவுமாக..” தமிழனாக இரு…!
ஆழிப் பேரலை என ஆர்ப்பரித்து எழுந்த புரட்சிப் போராளிகளே.. விழிப்புடன் இருங்கள்..!.
அரசியல் சாக்கடை யில் விழுந்து விடாதீர்கள்.
               ஒரு தாயின் போர்க்குரல்….. !
   தமிழினத்தின் மானங்காக்க, காளை ஒருவனை ஈன்று புறந்தந்து போர்க்களத்து விடுத்த அலங்காநல்லூர் அன்னை கூறினார் “ காளை எங்கள் குலதெய்வம்..” என்று  கேட்டுக்கொண்டிருந்த எனக்கு உடல் சிலிர்த்தது.. குருதி கொதித்தது.. அப்படியே உறைந்து போனேன். காவல் துறையினர் காளையைக் சிறைப்ப்டுத்தி வதைப்பதாக குமுறினர் மக்கள்.
                  தமிழ் மக்களின் தன்மான உணர்வு மங்கிவிடவில்லை ; மழுங்கி விடவில்லை… உச்ச நீதி மன்றம் உரசிப்பார்த்தது… மான உணர்வின் மாற்றுக் குறையவில்லை. என்பதை இப்போதாவது உணர்ந்திரூக்குமா..?
                   தொல்பழங்காலத் தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும்  பன்னெடுங்காலப் பண்பாட்டுப் பெருமையும் கொண்டு உலகம் முழுதும் விழுதுவிட்டு… தமிழகத்தில் வேரூன்றி நிற்கும் ஆலமரத்தை அசைத்துப் பார்ப்பதற்குமுன் அறிவுக் கண்கொண்டு ஆராய்ந்து பார்த்திருக்க  வேண்டும்.
 எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தடை போடுவதும் கண்டும் காணாமலும்  ஆள்வோர் இசைவளிக்க அசைய மறுப்பதும்.. கொடுமை.
                                தமிழினத்தை ஆராய்வதற்கு மிகவும் வளமான அறிவு வேண்டும், அது உங்களுக்கு ஒத்து வராது, விட்டுவிடுங்கள்…. சல்லிக்கட்டுக்குத் தடை கோரி வழக்குத் தொடுத்த அமைப்புகள் பற்றியும் அவற்றின் பின்புலம் பற்றியும்.. இப்படி ஒரு வழக்கை முன்வைக்க பீட்டா போன்ற அமைப்புகள் தகுதியுடையனவா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா..?
                      எந்த முட்டாளாவது பசுவை வீட்டு விலங்காக வைத்துக்கொண்டு காளையை வனவிலங்காக்க ஒப்புக்கொள்வானா..? காளைக்கு எத்தனை கால்கள் என்று தெரியாதவனெல்லாம் காளையைப் பற்றிப் பேசுகிறான்.  வரி.. வரி.. என்று வாரிக் குவிக்க வாய்கிழிய முழங்கும் உங்களுக்கு எங்கள் உரிமையை வழங்க உங்கள் வாய் திறக்காதா..?
   அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டில் மிகக் கேவலமான, அருவருக்கத்தக்க, இழிவான  செயலானது, மக்கள் ஏதாவது ஒரு கோரிக்கையை வைத்துப் போராடினால்.. மக்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிய அரசியல் பொறுப்பாளர்களோ, அரசு அதிகாரிகளோ வருவதில்லை மாறாக அவ்விடத்திற்குக் காவல் துறையினர் வந்து விடுகின்றனர், அவர்களே மக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் (குடிநீர் கேட்டு, சாலை வசதி கோரி, மணல் கொள்ளையைத் த்டுக்கக் கோரி)  நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளிக்கின்றனர்… அரசும்  துறைசார்ந்த அதிகாரிகளும் உல்லாச புரியில்..!
                         நீ…  முதலும் முடிவுமாகத் தமிழனாக இரு…!  நீ .. தலைவர், எம்.எல்.ஏ. ; எம்.பி. ; அமைச்சர்.. எனும் பட்டம் பதவிகள் எல்லாம் கொள்ளை அடிப்பதற்குக் கொடுக்கப்பட்ட உரிமம்  அல்ல. பதவிகளைத் துக்கி எறிந்து எழுந்து வா  உன்னை சந்தனம் பூசி வரவேற்கிறேன்.. பதவியும் பணமும்தான் தேவை என்றால் தொலைந்துபோ… உன் சாம்பலிலும் சாக்கடை மணக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக