திங்கள், 28 பிப்ரவரி, 2022

தன்னேரிலாத தமிழ் –399: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –399: குறள் கூறும்பொருள்பெறு.

 

341

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.


ஒருவன் யாதொன்றின் மீது பற்றின்றி விலகியிருக்கின்றானோ அவனுக்கு அஃதொன்றால் துன்பம் விளைவதில்லை. பற்றினால் துன்பம் பற்றும்.


துறவுக்கு முதற்பகை ஆசையே.       


ஆசை என்னும் பெருங் காற்றூடு இலவம் பஞ்சு

 எனவும் மனது அலையும்

 மோசம் வரும்….” தாயுமானவர்.


பெருங்காற்றில் இலவம் பஞ்சு பறப்பது போல் ஆசையுள்பட்ட  மனதும் பறக்கும் ; ஈன வழிகளில் இழுத்துச் செல்லும் ; இறைவனை அடையவொட்டாது தடுக்கும்.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

தன்னேரிலாத தமிழ் –3978: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –3978: குறள் கூறும்பொருள்பெறு.

324

 

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

கொல்லாமை சூழும் நெறி.


நன்னெறி எனப்படுவது யாதெனின், எந்த உயிரையும் கொல்லக்கூடாது  என்னும் உறுதியைக் கொள்கையாகக் கொண்டொழுகுதலே ஆம்.

ஓர் உயிரைக் கொன்று உண்ணல்அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கையாம்.


நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு

இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை….”ஆசாரக்கோவை, 1.


 செய்ந்நன்றி அறிதலும் போற்றாரையும்  பொறுத்துக் கொள்ளும் பெருந்தன்மையும் கனிபோலும் இனிய சொற்களையே பேசுதலும் எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியன  சான்றோர்க்கு உரிய குணங்களாகும்.

சனி, 26 பிப்ரவரி, 2022

தன்னேரிலாத தமிழ் –397: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –397: குறள் கூறும்பொருள்பெறு.

 

319

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா

பிற்பகல் தாமே வரும்.


பிறருக்குத் துன்பம் தரும் செயலை முற்பகல் ஒருவன் செய்தானாகில் அவனுக்கு அக்கேடு செய்ததற்குரிய பலன்  (துன்பம்) பிற்பகலே எவரும் ஏவாமல் தானே வந்துசேரும்.


துன்பத் தீ, மூட்டியவனையே சூழ்ந்து அழிக்கும்.


முற்பகல் செய்தான் பிறன் கேடு தன் கேடு

 பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண்.”சிலப்பதிகாரம், 21.


முற்பகல் பிறருக்குக் கேடு செய்தவன் ; பிற்பகல் தானே அக்கேட்டை அடைவான்.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

தன்னேரிலாத தமிழ் –396: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –396: குறள் கூறும்பொருள்பெறு.


315

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

தம்நோய்போல் போற்றாக் கடை

.

பிற உயிர்கள் படும் துன்பத்தைத்  தமக்கு  நேர்ந்த துன்பமாகக்  கருதி அவ்வுயிர்களைக் காப்பாற்ற முயலவில்லையானால்  ஆறறிவு பெற்றதன் பயன்தான் என்ன..?


எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளந்தான்

சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடமென நான் தேர்ந்தேன்…”

  ---வள்ளலார்


உயிர்கள் அனைத்தும் மண்ணில் வாழப்பிறந்தவையே ; எவ்வுயிரும் தம் உயிர்போல் என்ணிப் போற்றல் நம் கடன். எவ்வுயிர்க்காயினும் இரங்கும் உள்ளம், இறைவன் மகிழ்ந்தினிது உறையும் இடமாகும்

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

 அன்பிற்கினிய நண்பர்களே....!

விரைவில் சந்திப்போம் மகிழ்ச்சியுடன் -முனைவர் இரெ. குமரன்.