வியாழன், 31 டிசம்பர், 2015

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி 1

பத்துப்பாட்டு – அரிய செய்தி
(நூல் வரலாறு – முன்பதிவுகளில் காண்க.)
திருமுருகாற்றுப்படை – இயற்றியவர் – மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
உரையாசிரியர் – முனைவர் இரா. மோகன்.
 -திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி  1
1.  திருப்பரங்குன்றம்
முருகப் பெருமான்
மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்து
கரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தட்
பெருந்தண் கண்ணி மிளைந்த சென்னியன்
நக்கீரர். திருமுரு. 1: 42 – 44
           முருகன் குறிஞ்சி நிலத் தெய்வம் ; ஆதலின் அவனது கண்ணியாகிய செங்காந்தளின் சிறப்புரைக்கப்பெற்றது .
            குரங்குகளும் முற்றிலும் ஏறிப் பயின்று அறியா மரங்கள் நெருங்கிச் செழித்துள்ள பக்க மலைச் சாரலில் உள்ள – வண்டுகளும் மொய்க்காத – சுடர்போலச் சிவந்த காந்தள் பூக்களால் தொடுத்துக் கட்டிய குளிர்ந்த பெரிய மாலையை அணிந்த திருமுடியை உடையவனாக விளங்குகிறான் முருகன். 

புதன், 30 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 44

பரிபாடல் – அரிய செய்தி - 44

தமிழ் வழங்கும் நாடு தாழாது
தண் தமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்
நின்று நிலைஇப் புகழ் பூத்தல் அல்லது
குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்றம் உண்டாகும் அளவு
……………. பரிபா. திரட்டு.  8.
மீன் கொடி பறக்கும் தேரினை உடைய பாண்டிய மன்னனின் பொதிய மலை இருக்கும் காலம்வரை – அவன் தலைநகரமாகிய மதுரை நகரம் – கேடின்றி நின்று நிலைத்து – குளிர்ந்த தமிழ் மொழியையே எல்லையாக  உடைய தமிழ் நாடெங்கும் புகழ் பரப்பிப் பொலிவதன்றி – தனது சிறப்பின்கண் சிறிதும் குறைதல் உண்டாகுமோ …? உண்டாக மாட்டாது.
( தமிழ் மொழி வழங்கும் பரப்பினையே எல்லையாக உடையது தமிழ் நாடு என்க. எனவே இப்புலவர் பெருமான் ஒரு நாட்டிற்கு எல்லை  அம்மொழி வழங்கும் பரப்பேயாகும் என நுண்ணிதின் ஓதியது உணர்க.)
தமிழ் வழங்கும் நிலமாவன : செந்தமிழ்ப் பாண்டிநாடும் .கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டுமாம் – இவற்றை
சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியும்
சவுந்தர பாண்டியன் எனும்தமிழ் நாடனும்
சங்கப் புலவரும் தழைத்தினி திருக்கும்
மங்கலப் பாண்டி வளநா டென்ப.
எனவும் –
தென்பாண்டு குட்டங் குடங்கற்கா வேண்பூழி
பன்றி அருவா அதன்வடக்கு – நன்றாய
சீத மலாடு புன்னாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டென்” என வரும்  செய்யுட்களால் உணர்க.
பொதியில் செந்தமிழ் இலக்கணம் கண்ட அகத்தியனாரும் . மதுரையில் சங்கம் நிறுவி  அச்செந்தமிழ் ஆராய்ந்த சான்றோரும் இருத்ததால் – நின்று நிலை இப் புகழ் பூத்தலால் அல்லது குன்றுதல் உண்டாகாது என்றவாறு. இதனோடு –
“ பொதியிலாயினும் இமய மாயினும்
……………………………………………
நடுக்கின்றி நிலைஇய என்ப தல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே –
எனவரும் இளங்கோவடிகள் கூற்றினை ஒப்பநோக்குக.
இன்றுவரை….!
  எட்டுத் தொகை நூல்களாகிய நற்றிணை . குறுந்தொகை. ஐங்குறுநூறு. பதிற்றுப்பத்து. பரிபாடல் . கலித்தொகை. அகநானூறு. புறநானூறு ஆகிய நூல்களிலிருந்து அரிய – ஆய்வுக்குரிய செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளித்தோம். மேலும் பல உள என்பதறிந்து கற்றுணர்க.
எட்டுத்தொகை நூல்களில் அரிய – ஆய்வுக்குரிய செய்திகள் முற்றின.

பத்துப்பாட்டு –அரியசெய்திகள் …. தொடரும்…….

செவ்வாய், 29 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 43

பரிபாடல் – அரிய செய்தி - 43
பார்ப்பார் – அந்தணர் – ஐயர்
ஈப்பாய் அடுநறாக் கொண்டது இவ் யாறு எனப்
பார்ப்பார் ஒழிந்தார் படிவு
மைந்தர் மகளிர் மணவரை தூவிற்று என்று
அந்தணர் தோயலர் ஆறு
வையை தேம் மேவ வழுவழுப்பு உற்றென
ஐயர் வாய் பூசுறார் ஆறு
……………. பரிபா. திரட்டு. 2  : 57  – 62

பார்ப்பனர் – இவ்வையைப் புதுவெள்ளம் ஈக்கள் மொய்ப்பதற்குக் காரணமான சமைக்கப்பட்ட கள்ளைத் தன்னிடம் கொண்டு தூய்மை ஒழிந்தது என்று கருதி அந்நீரில் நீராடுதலைத் தவிர்த்தனர் ;  அந்தணர் – வையை நீரில் குளித்த ஆண்களும் பெண்களும் அணிந்திருந்த நறுமணப் பொருள்கள் தூவப் பெற்றுத் தூய்மை இழந்தது என்று நீராடாது சென்றனர்; ஐயர் – வையை நீரில் தேன் கலக்கப் பெற்று வழுவழுப்பு உடையதாயிற்று என்று கருதி நீரினாலே வாய் பூசுதலையும் செய்யாது ஒழிந்தனர். ( ஆற்று நீரை மாசு படுத்தல் அறமன்று என்பதறிக.) 

திங்கள், 28 டிசம்பர், 2015

நீரங்காடி

நீரங்காடி
வையை ஆற்றின் புதுப் புனலில் நீராட மக்கள் குவிந்தனர் – மக்கள்  –
ஊர் அணி கோலம் ஒருவர் ஒருவரின்
சேர் அணிகொண்டு நிறம் ஒன்று வெவ்வேறு
நீர் அணி கொண்ட நிறை அணி அங்காடி
ஏர் அணி கொண்டார் இயல்பு
……………. பரிபா. திரட்டு. 2 : 7  – 10
அப்புதுப் புனலில் நீராடும் இன்பத்தை விரும்பி  - தூசிபடையினது இயல்பினைப் போன்ற மகிழ்ச்சியுடன் – ஒவ்வொருவரும் தத்தம் இயற்கை அழகிற்குப் பொருத்தமான ஒப்ப்னைகளால் அழகு செய்துகொண்டு – நல்ல நிறம் பொருந்திய – நீராட்டிற்குரிய நெட்டி முதலியவற்றால் செய்த  பல்வேறு வகையான அழகுப் பொருள்கள் கொண்ட – நிறைந்த நீரங்காடியில் சென்று – தங்கள் இயற்கை அழகுடன் அவ்வங்காடியில் உள்ள பொருள்களாலும் அழகு செய்து கொண்டனர். (நீரங்காடி – நீராடுவோர்க்கு வேண்டிய பொருள்கள் விற்கும் கடைத் தெரு – நெட்டியால் செய்தவையும் பொன்மீன் . பொன் நண்டு. மாலை . மணப் பொருள்கள் இன்னபிறவும் . இவ்வங்காடி -  ஊரங்காடி ……..  பெருங்கதையில் இடம்பெற்றுள்ளது.) 

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 41

பரிபாடல் – அரிய செய்தி - 41
குடியும் கூத்தும்
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப்
புரியுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற
சூடு நறவொடு காமம் முகிழ் விரிய
சூடா நறவொடு காமம் விரும்ப
                        ……………. பரிபா. திரட்டு. 1 : 53  – 56
பூமுடி நாகர் கோயிலில் – செவ்வரியும் கருவரியும் படர்ந்த மை தீட்டப்பட்ட கண்களை உடைய விறலியரும் கூத்தரும் கூடி – காண்பார் அனைவராலும் விரும்பப்படும் பாட்டினைப் பாடி – ஆடலையும் செய்தனர் – சூடுதற்குரிய நறவ மொட்டுடன் அதனைச் சூடிய மைந்தர் மகளிரின் காமப் பண்பும் அரும்பி மலர்ந்து நின்றது – அத்தகைய ஆடவரும் மகளிரும்  கள்ளோடு காம இன்பத்தையும் விரும்பினர். ( கள் காம இன்பத்தை மிகுவித்தலின் கள்ளொடு காமம் விரும்ப என்றார். சூடு நறவு -  சூடும் நறவ மொட்டு ; சூடா நறவு – கள் . நறவ மொட்டு அலரும் போதே  மைந்தர் – மகளிர் உள்ளத்தே காமம் முகிழ்த்தது.) 

சனி, 26 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 40

பரிபாடல் – அரிய செய்தி - 40
கடைத் தெரு
இருந்தையூர் திருப்பதியில் வணிகர் தெரு -               
ஆங்கு ஒருசார் உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை
மண்ணுவ மணி பொன் மலைய கடல
பண்ணியம் வணிகர் புனை மறுகு ஒருசார்
விளைவதை வினை எவன் மென்புல வன்புலக்
களமர் உழவர் கடி மறுகு பிறசார்
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம்
இயல் கொள நண்ணியவை
                       ……………. பரிபா. திரட்டு. 1 : 22 – 29
ஆங்கு மற்றொரு பக்கத்தில் – உண்பதற்குரியவும் பூசிகொள்வதற்குரியவும் அணிந்து கொள்ளற்குரியவும் உடுத்தற்குரிய உடைகளும் நீராடுவதற்குரிய  பொருள்களும் மணி பொன் முதலான மலைபடு பொருள்களும் கடல் விளை பொருள்களும் மற்றும் பட்டு – பருத்தித் துணி வகைகளும் ஆகிய குற்றமற்ற பயன்படு பொருள்களை உள்நாட்டி லிருந்தும் கொண்டுவந்து தருகின்ற – நடுநிலையுடன் வணிகம் செய்யும் அறச்செயலையும் உடைய  அழகிய வணிகர்கள் தெருக்களும் –
மற்றொரு பக்கத்தில் – விளைபொருள் தொழிலாகிய மருதம் நெய்தல் ஆகிய மென்புல உழவர்களும் – குறிஞ்சி முல்லை ஆகிய வன்புலத் தொழில் புரிவோர் தெருக்களும் – உழுவித்துண்போர் குடியிருக்கும் காவலை உடைய தெருக்களும் உள்ளன. பிறவிடங்களில் தத்தம் அறத்தில் வழுவாது வாழும் மக்கள் வாழ்தலால் – ந்ல்லனவாகிய இன்பம் பலவும் இயல்பாகவே உள்ளன – என்பதாம். ( உண் பொருள்கள் – நெல். முதிரை. நெய். பால். தயிர். காய். கனி. கிழங்கு. இலை. தீஞ்சோறு – பலவகைப்பட்ட பண்ணிகாரம் – நறவு  இன்ன பிறவும்.  பூசுவ – சந்தனம் முதலியவை. பூண்ப – அணிகலன்கள் . மாலைகள். உடுப்பவை – பட்டு . துகில் முதலியன. மண்ணுவ – பத்துத் துவரும் ஐந்து விரையும் 32 ஓமாலிகையும். களமர் – உழுதுண்ணும் வேளாளர். உழவர் – உழுவித்துண்ணும் வேளாளர். )  

வெள்ளி, 25 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 39

பரிபாடல் – அரிய செய்தி - 39
திரு நயத் தக்க வயல்
ஒருசார் சாறுகொள் ஓதத்து இசையொடு மாறுற்று
உழவின் ஓதை பயின்று அறிவு இழந்து
திரிநரும் ஆர்த்து நடுநரும் ஈண்டித்
திரு நயத் தக்க வயல்.
                       ……………. பரிபா. திரட்டு. 1 : 14 - 17
எம்பெருமானே ! நீ எழுந்தருளிய  இருந்தையூரின் மற்றொரு பக்கத்தில் மருத நிலத்தில் உள்ள ஆலைகளில் கரும்பின் சாற்றினைப் பிழிந்து எடுப்பதால் உண்டாகும் இனிய இசையுடன் கூடிய ஆரவாரத்தோடு மாறுபட்டு – உழவர்கள் உழும்போது பாடும் ஏர்மங்கலப் பாடல்களைப் பாடி ஆரவாரத்தை எழுப்பினர் – சிலர் கள் உண்டதால்  அறிவு மயங்கி எங்கும் திரிந்தனர் – உழத்தியர்  குரவை பாடி நாற்று நடுவர் –திருமகளும் விரும்பி வீற்றிருக்கும் தகுதி உடைய வயல்கள் உள்ளன.  

வியாழன், 24 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 38

பரிபாடல் – அரிய செய்தி - 38
பத்தினிப் பெண்டிர்
சிந்திக்கத் தீரும் பிணியாள் செறேர்க
மைந்து உற்றாய் வெஞ்சொல் மடமயிற் சாயலை
வந்திக்க வார் ……
நல்லந்துவனார். பரிபா. 20 : 68 – 70
 கணவனின் கள்வி ( திருடி) யாகிய அப்பரத்தை – தலைவியை நோக்கிச் சில சுடுசொற்களைக் கூற – அதுகண்ட முதுபெண்டிர் -  ஏடி… ! கற்புடைமையால் நினைக்கும் அளவிலே பாவம் நீங்கும் தன்மையை உடைய அக்குலமகளைச் சினவாதே ! நீ கொடுமை மொழி கூறிப் பேதைமை உடையை ஆயினாய் – இப்பாவம் தீரும் பொருட்டு மயில் போலும் சாயலை உடைய – அத்தலைவியை வணங்க வருவாயாக – என்றனர். (பத்தினிப் பெண்டிர் தெய்வத்தன்மை உடையவர் என்பதாம். ) 

புதன், 23 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 37

பரிபாடல் – அரிய செய்தி - 37
பரத்தை படும்பாடு
வையைக் கரையில் – தலைவியிடமிருந்து காணாமல் போன வளையலையும் ஆரத்தையும் – பரத்தை ஒருத்தி அணிந்திருத்தலைக் கண்ட தோழியர் – அவளைத் தொடர்ந்து – ஏசினர்….
 ஆயத்து ஒருத்தி அவளை அமர் காமம்
மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை
…………………………………………………….
நின் மார்பும் ஓர் ஒத்த நீர்மையை கொல் என்னாமுன்
 நல்லந்துவனார். பரிபா. 20 : 48 – 65
யாவராலும் விரும்பப்படும் காம இன்பத்தினை வஞ்சகத்தோடு கூடிய பொய்மொழிகளோடும் சேர்த்துத் தன்னை நாடிவரும் காமுகரை மயக்கும் விலைமகளாம் கணிகையே ! நின் பெண்மையைப் பல ஆடவர்க்கும் பொதுமையாக்கும் தன்மையால் ஓர் ஆடவனால் பேணப்படுதல் இல்லாதவளே!  கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று நுகரும் ஐம்புல இன்பங்களையும் நுகர்வனவாகிய காமுகப் பன்றிகள் நுகர்வதற்குரிய – இரண்டு உதடுகளைக் கொண்ட தொட்டியே ! வனப்பாகிய வயலில் முதிராத நறுமணம் மிக்க கள்ளாகிய நீரைப் பாய்ச்சிக் காமவெறியாகிய கலப்பையை நாட்டி எம்முடைய எருது சோம்பலின்றி உழுகின்ற பழைய படைச் சாலே ! …. இங்ஙனம் மக்கள் முன்னிலையில் அவளைப் பலவாறு திட்டி உரைத்தாள். 
பரத்தை படும்பாடு
வையைக் கரையில் – தலைவியிடமிருந்து காணாமல் போன வளையலையும் ஆரத்தையும் – பரத்தை ஒருத்தி அணிந்திருத்தலைக் கண்ட தோழியர் – அவளைத் தொடர்ந்து – ஏசினர்….
 ஆயத்து ஒருத்தி அவளை அமர் காமம்
மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை
…………………………………………………….
நின் மார்பும் ஓர் ஒத்த நீர்மையை கொல் என்னாமுன்
 நல்லந்துவனார். பரிபா. 20 : 48 – 65
யாவராலும் விரும்பப்படும் காம இன்பத்தினை வஞ்சகத்தோடு கூடிய பொய்மொழிகளோடும் சேர்த்துத் தன்னை நாடிவரும் காமுகரை மயக்கும் விலைமகளாம் கணிகையே ! நின் பெண்மையைப் பல ஆடவர்க்கும் பொதுமையாக்கும் தன்மையால் ஓர் ஆடவனால் பேணப்படுதல் இல்லாதவளே!  கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று நுகரும் ஐம்புல இன்பங்களையும் நுகர்வனவாகிய காமுகப் பன்றிகள் நுகர்வதற்குரிய – இரண்டு உதடுகளைக் கொண்ட தொட்டியே ! வனப்பாகிய வயலில் முதிராத நறுமணம் மிக்க கள்ளாகிய நீரைப் பாய்ச்சிக் காமவெறியாகிய கலப்பையை நாட்டி எம்முடைய எருது சோம்பலின்றி உழுகின்ற பழைய படைச் சாலே ! …. இங்ஙனம் மக்கள் முன்னிலையில் அவளைப் பலவாறு திட்டி உரைத்தாள். 

செவ்வாய், 22 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 36

பரிபாடல் – அரிய செய்தி - 36
வெங்கார் மணம்
மலர் ஆற்றும் தேன் மணமும் செறு வெயில் உறுகால
கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு உதிர்த்த கனி நாற்றம்
நல்லந்துவனார். பரிபா. 20 : 9 – 10
வையை ஆற்றில் – மரங்கள் தரும் மலர் மணமும் – சினந்து சுடும் வெயிலையும் மிக்க காற்றையும் உடையவாகிய காடுகள் தரும் வெங்கார் மணமும் – மரக் கொம்புகள் உதிர்த்த கனிகளின் மணமும்… மணக்க.
( வெங்கார் மணம் – நீண்ட நாள் மழை வறண்டுவிட வெயிலானே பெரிதும் சுடப்பட்ட நிலத்தின் மேல் புதுவதாக மழை பொழிந்தவுடன் அந்நிலத்திலுள்ள வெப்பத்தானே நிலத்தின்கண் இருவகை ஆவி எழுந்து பரவி நிற்கும்  - அந்த ஆவி ஒருவகை மணமும் உடைத்தாம் – அந்த மணமே வெங்கார் மணம் என்று கூறப்பட்டது. இன்றும் கோடைமுடிந்து ஆற்றில் தண்ணீர் வர – காய்ந்து கிடந்த  விளைவயலில் பாய்தலால் –அதனை வெங்கார் பாய்ச்சல் என்பர். அது மணம் உடையது.  இந்த மணம் கற்புடைய மகளிரின் மேனி மணத்திற்கு உவமை கூறப்படுதல் உண்டு – காண்க : சீவக சிந். 2503 .) 

திங்கள், 21 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 35

பரிபாடல் – அரிய செய்தி - 35
பச்சிலை
 ………………………….பாங்கர்
பசும்பிடி இளமுகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல்
நப்பண்ணனார். பரிபா. 19 : 74 – 75

….. அச்சுனையின்கண்ணும் பக்கத்தினும் பச்சிலையின் கொழுந்தும்… மகளிர் வாய்போல் மலர்ந்த அரக்காம்பலும்……
பசும்பிடி – பச்சிலை என்னும் பெயருடைய ஒரு கொடி.  குறிஞ்சிப்பாட்டில் வரும் “பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா” – இதற்குப் “ பச்சிலை” எனப் பொருள் கூறினார் நச்சினார்க்கினியர். ஈண்டு மருக்கொழுந்துபோல இப்பசும்பிடி கொழுந்திலே சிறப்புடையது என்று கருதிப் போலும் பசும்பிடி இளமுகிழ் என்பதற்குப் பச்சிலையது இளைய கொழுந்து எனப் பொருள் கூறினார் பரிமேலழகர். இலையிலேயே மணமுடையது என்பது கருதிப்போலும் இதற்கும் பச்சிலை என்பது பெயராயிற்று; எல்லாவற்றிலும் பசுத்திருத்தலிற் பச்சிலை என்று பெயர் பெற்றது “ என்பார் நச்சினார்க்கினியர். இன்று பச்சிலை என்பது மூலிகையின் பொதுப் பெயராம்.
( மாலை புனையும் தொழில் வகைகள்  - நிணத்தல். தெற்றுதல். கோத்தல். கட்டுதல் என்பன.) 2

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 34

பரிபாடல் – அரிய செய்தி - 34
தொல் தமிழர் வானியல் அறிவு
என்றூழ் உறவரும் இரு சுடர் நேமி
ஒன்றிய சுடர் நிலை உள்படுவோரும்
நப்பண்ணனார் பரிபா. 19 : 46 – 47
திருப்பரங்குன்றத்துத் தெளிந்த ஓவியம் வரைந்து நிற்றலையுடைய மாடத்தின்கண் சென்றாராக -  சிலர் .நாண்மீன்களையும் தாரகைகளையும் உடைய சுடர்ச் சக்கரத்தைக் கண்டு – ஞாயிறு முதலாக வரும் கோள்களினது நிலைமைய விளக்கி – ஆண்டுத் தீட்டப்பட்ட ஓவியத்தைக் கண்டு உணர்ந்து கொள்வர். ( இவ்வாறு ஞாயிறு முதலாகப் பொருந்த இயங்கும் – பண்டைக் காலத்துத் தமிழ்ச் சான்றோர் வானின்கண் உள்ள நாள் கோள் முதலியவற்றை ஆராய்ந்து – அவற்றைப் பொது இடங்களிலே ஓவியமாகவும் வரைந்து – மாந்தர்க்கு அறிவுறுத்தி வந்தமை உணரப்படும்.மேலும் ஓவியங்கள் வாயிலாய் மக்களுக்கு இதிகாச முதலியவற்றையும் உணர்த்தியமை அறிக.) 

சனி, 19 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 33

பரிபாடல் – அரிய செய்தி - 33
மதுரையில் பிறப்பின் …..
புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல்
கலப்போடு இயைந்த இரவுத் தீர் எல்லை
அறம் பெரிது ஆற்றி அதன் பயன் கொண்மார்
சிறந்தோர் உலகம் படருநர் ……
நப்பண்ணனார் பரிபா. 19 : 8 – 11
 பெருமானே ! நின்னை வழிபடும் பொருட்டு அறிவாலும் மறத்தாலும் செய்யும் சொற்போர் – படைப் போர் என்னும் இருவகைப் போரிடத்தும் தோற்றலின்றி வெல்லும் இயல்புடைய – மதுரையின்கண் வாழும் மகளிரும் மைந்தரும் ஆகிய மக்கள் – புணர்ச்சி இன்பத்தோடே வந்து பொருந்திய – அவ்வின்ப இரவு நீங்கிய வைகறைப் பொழுதிலே  விழித் தெழுந்து – இவ்வுலகத்தே பெரிதும் அறத்தைச் செய்து – அவ்வறத்தின் பயனாகிய இன்பத்தை நுகரும் பொருட்டு வானவர் உலகத்திற்கு மகிழ்ந்து செல்வர். ( அறம் செய்தோர் துறக்கம் எய்தி அதன் பயனை நுகர்வர் என்பதும் – தீவினை செய்தோர் நரகம் எய்தி வருந்துவர் என்பதும் மெய்ந்நூற் துணிபு. ) 

வெள்ளி, 18 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 32

பரிபாடல் – அரிய செய்தி - 32
முருகன் – வள்ளி – தேவசேனை
தண் பரங்குன்றத்து இயல் அணி நின் மருங்கு
சாறு கொள் துறக்கத்து அவளொடு
மாறு கொள்வது போலும் மயிற்கொடி வதுவை
நப்பண்ணனார். பரிபா. 19 : 5  - 7
 தண்ணிய திருப்பரங்குன்றத்திலே நீ – ஆடும் அழகிய மயில் போன்ற வள்ளியை மணம் புரிந்தனை – இவ்வருட் செயல்  வானவர் உலகின்கண்ணே நின் பக்கத்தே அமர்ந்து விழாக்கொண்ட வானவர் மகளாகிய தேவசேனையின் திருமணத்தோடு மாறுபட்ட செயல் போலும்.
( விண்ணுலகப் பெண்ணான தேவசேனையை மணந்து அவர்க்கு அருளியது போல் – மண்ணுலகத்தார்க்கும் அருள் செய்ய வேண்டி வள்ளியை மணந்தான். விண்ணுலகத்தோடு ஒத்த மதிப்புடையதாய் மண்ணுலகத்தையும் செய்த இவ்வருட் செயலால் மானுடரும் தேவர்க்கு ஒப்பான சிறப்பெய்தினர் என்பதாம். (மேலும் அறிய : சிலம்பு – குன்றக்குரவைப் பகுதியைக் காண்க.)

வியாழன், 17 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 31

பரிபாடல் – அரிய செய்தி - 31
செவ்வேள்  பூசை
புரியுறு நரம்பும் இயலும் புணர்ந்து
சுருதியும் பூவும் சுடரும் கூடி
எரி உருகும் அகிலோடு ஆரமும் கமழும்
குன்றம்பூதனார். பரிபா.18 : 51 – 53
நினது பூசைக்கண் முறுக்குதல் உற்ற யாழ் நரம்பினது இசையும் – நல்லிசைப் புலவர்கள் இயற்பாடல்களும் பொருந்தி – வேத ஒலியும் உபசாரமாகிய மலர்களும் விளக்குகளும் கூடி – தீயில் இடப்பட்ட உருகும் அகில் புகையும் சந்தனப் புகையும் கமழ்ந்து நிற்கும்.
வேதம் பூ சுடர் முதலியன  பூசையில் இறைவனுக்குச் செய்யப்படும்  (உபசாரங்கள்) பூசை முறைகள் – இவை பதினாறு வகைப்படும் – அவையாவன : ஆவாகநம் . தாபநம். சந்நிதானம். சந்நிரோதனம். அவகுன்டணம். தேநுமுத்திரை. பாத்தியம்.ஆசமநீயம். அருக்கியம். புட்பதாநம். தூபம். தீபம். நைவேத்தியம். பாநீயம். செபசமர்ப்பநை. ஆராத்திகை என்பனவாம். இவை சைவ சமயிகள் கூறும் உபசாரம். இவ்வுபசாரம் சமயங்கள் தோறும் வேறுபடுதலும் உண்டு. 

புதன், 16 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 30

பரிபாடல் – அரிய செய்தி - 30
காமக் கூட்டம்
 தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும்
நாமத் தன்மை நன்கனம் படி எழ
யாமத் தன்மை இவ் ஐ இருங்குன்றத்து
இளம்பெருவழுதியார். பரிபா. 15 : 24 – 26
 மகளிரும் மைந்தரும் தாம் ஒருவரையொருவர் விரும்புதற்குக் காரணமான காமத்தை விதைத்து – அதன் பயனை விளைவிக்கும் கூதிர் யாமத்தைத் தனக்கு இயல்பாக உடைய -  இந்த வியக்கத்தக்க குன்றத்தின் கண்ணே….
( குறிஞ்சிக்கு யாமம் சிறுபொழுது ; கூதிர் – குளிர் – யாமம் – நள்ளிரவு – இதனால் ஆணும் பெண்ணும் கூடி மகிழ்தற்குரிய காலம் – புணரும் காலம் குறித்து அறிவியல் நோக்கில் – ஆய்க .)
இசைக் குறிப்புகள்
பண்ணிய இசையினர் - ஆலாபனம்
 – ”ஆளத்தியால் ஆக்கிய இசையை உடையோராய்” –( பரிபா. 17.)
”மகரத்தின் ஒற்றாற் சுருதி விரவும்
பகரும் குறினெடில்பா ரித்து – நிகரிலாத்
தென்னா தெனாவென்று பாடுவரேல் ஆளத்தி
மன்னாவிச் சொல்லின் வகை .”
முதலிற் பாடுமிடத்து மகரத்தின் ஒற்றாலே நாதத்தை உச்சரிக்கும் மரபு பகரில் பாரித்து முற்கூறிய நாதத்தினைத் தொழில் செய்யுமிடத்துக் குற்றெழுத்தாலும் நெட்டெழுத்தாலும் செய்யப்படும்.
 அவை அச்சு பாரணை என்று பெயர் பெறும்; அச்சுக்கு எழுவாய் குற்றெழுத்து பாரணைக்கு எழுவாய் நெட்டெழுத்து. அச்சு- தாளத்துடன் நிகழும் ; பாரணை- கூத்துடன் நிகழும்.
 ஆளத்தி செய்யுமிடத்துத் தென்னாவென்றும் – தெனாவென்றும் இரண்டசையும் கூட்டித் ”தென்னாதெனா” என்று பாடப்படும்; இவைதாம் –
” காட்டாளத்தி. நிறவாளத்தி. பண்ணாளத்தி. என மூன்று வகைப்படும் என்பார் அடியார்க்குநல்லார். இஃது இக்காலத்தே “ ஆலாபனம்” என்று வழங்கப்படும்.
பாலை அங்குரல் – பாலைப் பண்ணின் அழகிய இசை .
கிழமை நிறை குறை என்பன ஆளத்தியின் பாகுபாடுகள். இதனை “ இசைப் புலவன் ஆளத்தி வைத்த பண்ணீர்மையை முதலும் முறைமையும் முடிவும் நிறைவும் குறைவும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையறையும் நீர்மையும் என்னும் பதினொரு பாகுபாட்டினாலும் அறிந்து “ என்பார் சிலம்பு உரையில் அடியார்க்குநல்லார்.
தாக்கு – இசைத் தொழில் எய்யனுள் ஒன்று ; எடுத்தல் படுத்தல் நலிதல் கம்பிதம் குடிலம் ஒலி உருட்டு தக்கு  என்னுமிவை இசைக் கிரியைகள்.
( மேலும் இசைக் குறிப்புகளைக் காண – பா. 19.) 

செவ்வாய், 15 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி – 28 - 29

பரிபாடல் – அரிய செய்தி – 28 - 29
துறக்கம் – எளிதே கிட்டும்
அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம்
எளிதில் பெறல் உரிமை ஏத்துகம் சிலம்ப
இளம்பெரு வழுதியார். பரிபா. 15 : 17 – 18
பெறுதற்கு அரிதாகிய இருக்கும் துறக்க உலகை எளிதாகப் பெறுவதற்கு உரிமை வழங்கும் சிறப்பினைக் கொண்டது திருமாலிருங்குன்றம் – அக்குன்றத்தை (மதிலின் மேல் ஏறி உரைத்தாற்போல ) பேரொலி செய்து நாம்  தொழுவோமாக.
பரிபாடல் – அரிய செய்தி - 29
முருக வழிபாடு
அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி
நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே
கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை
எழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே
கேசவனார். பரிபா. 14 : 21 – 24
ஆறு முகமும் பன்னிரண்டு கைகளும் உடையாய்ச் சென்று – அழகாலே பிற மகளிரை வென்ற வெற்றியினை உடைய வள்ளியை நயந்தோனே – தலைவியர் தம்மைப் பிரிந்து சென்ற தம் கணவர் விரைந்து வந்து புணர்ந்து – பின்னர் நீங்காமைப் பொருட்டு யாழிசை எழுப்பி – நின்னைப் பரவிப் பாடுகின்ற பாட்டினை விரும்புவோனே .
( மகளிர் தம் கணவர் தம்மைப் பிரியாதிருக்க  முருகனை வேண்டிப் பாடுகின்ற வழக்கத்தைச் சிலப்பதிகாரம் 15 ஆம் காதை  - “ மலைமகள் ….” – “ குறமகள் ….” எனத் தொடங்கும் பாடல்களில்  காண்க. ) 

திங்கள், 14 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 27

பரிபாடல் – அரிய செய்தி - 27
காலக் கூறுகள்
முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும்
 கடந்து அவை அமைந்த கழலின் நிழலவை
நல்லெழுதியார்.பரிபா. 13 : 47- 48
பெருமானே நீ ! தோன்றியதும் இனித் தோன்றுவதும் இப்பொழுது தோன்றியதுமாகிய அம் மூன்று காலக் கூறுபாடுகளையும் கடந்து – அக்காலக் கூறுகள் பொருந்தப் பெற்ற திருவடிகளை உடையை.
 முடிந்தது – இறந்தக்காலம் ; முடிவது – எதிர்காலம் ; முகிழ்ப்பது – நிகழ்காலம் ஆகிய அம்மூன்று காலக் கூறுபாட்டையும் கடந்து மேலும் அவை மூன்றும் தம்கீழ் அமைந்துள்ள அடி என்க.
விளக்கம்
காலம் என்னும் அருவப் பொருள் இறைவன் போன்று அநாதியாக உள்ளது. அக்காலத்தை நிலக் களனாக் கொண்டு இறைவன் படைப்புத் தொழில் முதலிய முத்தொழிலையும் நிகழ்த்துவான்.அங்ஙனம் தொழில் பற்றித் தோன்றிய பொருள்களையே அள்வையாக வைத்துக் காலத்தை உலகியல் நடத்தற் பொருட்டுக் கூறுபட்டதாக வழங்கப் படுவதல்லது – அது தானே கூறுபடாது. இக்கூறுபட்ட முக்காலமும் படைத்தற் தொழிலோடு தொடங்கி அழித்தற் தொழிலோடு முடிவனவாகும். இம்மூன்றையும் கடந்தவன் இறவன்.  கூறுபடாத அருவமாகிய காலம் தானும் இறைவன் படைப்பிற்குத் துணைகாரணமாய் அவன் ஆட்சிக்கு அடங்கி நிற்கிறது. ( காலமே கடவுள் ஆம் தன்மை குறித்து – ஆயக.)  

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 26

பரிபாடல் – அரிய செய்தி - 26
உலகத் தோற்றம்
 விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின்
நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும்
நானிலம் துளக்கு அறமுழு முதல் நாற்றிய
பொலம் புனை இதழ் அணிமணி மடற்பேர் அணி
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி
மூஉரு ஆகிய தலை பிரி ஒருவனை
நல்லெழுதியார்.பரிபா. 13 : 32 - 37
பகைவருடைய மார்பை உழுகின்ற வளைந்த வாயினை உடைய கலப்பையைப் போர்க் கருவியாக ஏந்தியவன் பலராமன் – முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என நான்கு நிலத்தில் வாழும் உயிர்களின் நடுக்கம் தீருமாறு அந்நிலவுலகைக் கடலிலிருந்து வெளியா நெம்பிக் கொண்டுவர – ஆண்பன்றியாக உருக்கொண்டனன்.
 முன்னொரு காலத்திலில் இரணியாட்சகன் என்ற அரக்கன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் ( ஊழிக் காலத்தே) கடலிற் கொண்டுபோகப் பெருமான் வராக (பன்றி) உருக்கொண்டு  - கொம்பால் குத்தி உலகை வெளிக்கொணர்ந்தார்.
( இப் புராணக் கதை உணர்த்தும் உண்மைய அறிதல் வேண்டும். பாய் போல் திரண்டு எழுந்த அலைகள் – கடல் கோளாக உலகை அழித்தது – பின்னர் உலகம் தோன்றியது எனலாம் – சரியான அளவுடைய நெம்பு கோல் கிடைக்குமானால் இந்த உலகத்தையே அசைத்துக் காட்டுவேன் என்றார் ஆர்க்கிமிடிஸ் . )  

சனி, 12 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 25

பரிபாடல் – அரிய செய்தி - 25
வீர மங்கை
அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்ப
 கமழ் கோதைப் புடைத்து தன் மார்பில்
இழையினைக் கையாத்து இறுகிறுக்கி வாங்கி
பிழையினை என்ன பிழை ஒன்றும் காணான்
தொழுது பிழை கேட்கும் தூயவனைக் காண்மின்
 நல்வழுதியார். பரிபா. 12 : 57 – 61
அமிழ்தத்தைப் போன்ற இனிமை நிறைந்த பார்வையாலே யாரோ ஒருத்தி – தன் கணவனைக் கூர்ந்து பார்த்தாள் என்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாத தலைவி ஒருத்தி  -  தனது மார்பில் கிடந்த மணம் வீசும் மாலையை எடுத்து – அம்மாலையையே கோலாக் கொண்டு தன் கணவனை அடித்தாள் – தன் மார்பில் கிடந்த அழகிய  அணிகலனாகிய வடத்தைக் கழற்றி அவனது முன் கைகளைச் சேர்த்துக் கட்டி இறுக்கிப் பிடித்துக் கொண்டு – ஏடா ! நீ குற்றம் உடையவன் என்று கூறினாள்.

அவனோ அவளை வணங்கி – நான் செய்த குற்றம் யாது ? என்று கேட்டான். இக்காட்சியைக் கண்ட பலரும் குற்றமற்ற தூய்மை உடையானைக் காணுங்கள் என்று கூறினர்.

வெள்ளி, 11 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 24

பரிபாடல் – அரிய செய்தி - 24
ஒப்பனை ஊட்டிய மகளிர்
மணமிக்க மலர்கள் போர்த்துப் பெருகிவந்த வையை ஆற்றுப் பெரு வெள்ளத்தைக் காணப் புறப்பட்ட மகளிர்  …..
வாச நறுநெய் ஆடி வான் துகள்
மாசறக் கண்ணடி வயக்கி வண்ணமும்
தேசும் ஒளியும் திகழ நோக்கி
வாச மணத்துவர் வாய்க் கொள்வோரும்
இடுபுணர் வளையொடு தொடு தோள் வளையர்
கட்டுவடக் கழலினர் மட்டு மாலையர்
ஓசனை கமழும் வாச மேனியர்
நல்வழுதியார். பரிபா. 12 : 19 – 25
பொன் அணிகலன்கள் – அகிற்புகை சாந்து – கூந்தலில் மணமிக்க வேர்கள் சூழ்ந்த குழல் – மலர்மாலைகள் சூடி – நீராடுவதற்குரிய புடவை உடுத்தி ………….
சிலர் கண்ணாடியின் அழுக்கு நீங்க நறுமண நெய்யைப் பூசி – வெள்ளிய கல் பொடியிட்டுத் துலக்கி -  அக்கண்ணாடியின்முன் நின்று தமது இயற்கை அழகும் செயற்கை அழகும் காதலருடன் புணர்ந்ததால் உண்டான ஒளியையும் கண்டு இன்புற்றோரும்  – ஐந்து வாசத்தோடு கூட்டி இடித்த பாக்கை வாயில் இட்டு மெல்வோரும் -  ஆணியிடும் இரட்டைவளையல் – தோள்வளை உடையோரும் – கட்டுவடத்தோடு காலாழி (சிலம்பு )  உடையோரும்  - நாற்காவத தூரம் நறுமணம் கமழும் திரு மேனியை உடைய இம்மகளிர்… நீராடும் துறையில் நிறைய……
( வண்ணம் – இயற்கை அழகு ; தேசு – செயற்கை அழகு ; வாசமணத்துவர் – “ தக்கோலம் தீம்பூத் தகைசால் இலவங்கம் கற்பூரம் சாதியோடைந்து “. – துவர் – பாக்கு : ஒளி – கலவியால் வந்த நிறம். )  

வியாழன், 10 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 23

பரிபாடல் – அரிய செய்தி - 23
தை நீராடி வேண்டல்
கிழவர் கிழத்தியர் என்னாது ஏழ்காறும்
மழவு  ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும்
நல்லந்துவனார். பரிபா. 11:  120 – 121
எம் கணவரும் யாமும் கிழவர் கிழவியர் என்று உலகத்தாரால் கூறப்படாமல்  - எமது ஏழாம் பருவத்திற்குரிய ஆண்டு எய்துமளவும் – இப்பருவமே நிலைபெறும்படி இளமையை – இத் தைந்நீர்த் தவம் வரம்
தர -  யாம் செல்வத்தோடும் சுற்றத்தாரோடும் நிலைபெறும்படி அருள்க என்று வேண்டிக் கொள்வாரும்….( இங்ஙனம் வேண்டுவார் மங்கை பருவ மகளிர் ஆகலான் – யாம் எப்பொழுதும் இப் பருவத்திற்குரிய இளமையுடையராக என வேண்டினர்)
(ஏழ் – எழாம் பருவம் ; அஃதாவது பேரிளம் பெண். ஏழு பருவங்களான : பேதை. பெதும்பை. மங்கை. மடந்தை. அரிவை. தெரிவை. பேரிளம் பெண் என்பன .மழவு – இளமை ; மல்லல் – செல்வம் ; கேள் – சுற்றம் ; மன்னுக – நிலை பெறுக. ) 

புதன், 9 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி – 21 - 22

பரிபாடல் – அரிய செய்தி – 21 - 22
வானூர்தி
அம்பி கரவா வழக்கிற்றே ……………..
நல்லந்துவனார். பரிபா. 11:  70 – 71
தேவர்கள் உறைதற்கு இடமான ஒளிமிக்க வானத்தின்கண் – வைமானிகர் ஊர்ந்து செல்கின்ற விமானத்தை – தெளிவாகக் காட்டுகின்ற தெளிந்த நீரோட்டத்தை உடையது வையை .
( வைமானிகர் – விமானம் உடையவர் – தேவரில் ஒரு வகுப்பினர்; ஊர்பு ஆடும் – ஊர்ந்து திரியும்; அம்பி – விமானம் – வானவூர்தி. )
பரிபாடல் – அரிய செய்தி - 22
அறவோர் – பார்ப்பனர்
மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை
விநூல் அந்தணர் விழவு தொடங்க
புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப
நல்லந்துவனார். பரிபா. 11:  77 – 79
மிகப் பெரிய திங்கள் மண்டிலம் தன்னகத்துள்ள களங்கத்தோடே வளர்ந்து நிறைந்த திருவாதிரை நாளின்கண் -  விரிந்த மெய்ந்நூல்களை உணர்ந்த அறவோர் – அத்திருவாதிரைக்குத் தெய்வமாகிய இறைவனுக்குத் ( சிவ பெருமான்) திருவிழாவைத் தொடங்க – முப்புரி நூலாகிய பூணூலை உடைய பார்ப்பனர் அவ்விழவின்கண்- இறைவனுக்குப் பலிப் பொருள் (பூசனைப் பொருள் ) பெய்த பொற்கலங்களையும் பிறவற்றையும் ஏந்தினர்.
( மாயிருந் திங்கள் – முழுமதி ; அந்தணர்  - பொதுப் பெயர் ; விரிநூல் அந்தணர் – அறவோர் ;  அறவோர் – ஆகமங்களை உணர்ந்த பூசகர் ; புரிநூல் அந்தணர் – பார்ப்பனர். ஒப்பு நோக்கு : அந்தணர் என்போர் அறவோர் … குறள் . 30)  

செவ்வாய், 8 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 20

பரிபாடல் – அரிய செய்தி - 20
வையை வளம்
ஆம் நாள் நிறைமதி அலர்தரு பக்கம் போல்
நாளின் நாளின் நளிவரைச் சிலம்பு தொட்டு
நிலவுப் பரந்தாங்கு நீர் நிலம் பரப்பி
உலகு பயம் பகர ஓம்பு பெரும் பக்கம்
வழியது பக்கத்து அமரர் உண்டி’
மதி நிறைவு அழிவதின் வரவு சுருங்க
எண்மதி நிறை உவா இருள் மதி போல
நாள் குறைபடுதல் காணுநர் யாரே ?
நல்லந்துவனார். பரிபா. 11:  31 – 38
பிறை தோன்றிய நாள் தொடங்கி நாளுக்கு நாள் வளர்கின்ற பக்கம் போல நாளுக்கு நாள் பெருகி – அதன் நிலவொளி உலகில் எங்கும் பரவுமாறு போல – செறிந்த மலைச் சாரல் தொடங்கி – நிலமெங்கும் நீரைப் பரப்பி – உலகத்திற்குப் பயனை விளைத்துக் கொடுத்துப் பாதுகாத்து – அவ்வளர் பக்கத்துப் பிற்பக்கமாகிய தேய்பக்கத்து – தேவர்களுக்கு உணவாகிய அத்திங்கள் நாள்தோறும் தனது நிறைவினின்றும் ஒரு கலை அழியுமாறு போல – நீர் வரத்துச் சுருங்குதலானே நாளுக்குநாள் சிறிதுசிறிது வற்றிவருங் காலத்தும் –எட்டாம் நாள் திங்களின் அளவாதலன்றி – அமாவாசையின்கண் திங்கள் முழுதும் தேந்தொழிதல் போன்று  - வையையே நின்னிடத்து நீர் முற்றும் வற்றிய நாளினை – இவ்வுலகில் யாரே காண்கின்றனர் ..? – ஒருவரும் இல்லை என்பதாம்.
( ஆம் நாள் – தோன்றும் நாள் ; அலர்தரு பக்கம் – வளர் பக்கம்; நளி – செறிவு ; சிலம்பு – மலைச் சாரல் ; எண்மதி நிறை -  அட்டமித் திங்கள் அளவு .)  

திங்கள், 7 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 19

பரிபாடல் – அரிய செய்தி - 19
நீர் வழிபாடு
நத்தொடு நள்ளி நடைஇறவு வயவாளை
வித்தி அலையில் விளைக பொலிக என்பார்
கரும்பிள்ளைப் பூதனார். பரிபா. 10 :  85 – 86
வையைப் புது வெள்ளத்தில் பொன்னால் செய்த நத்தை நண்டு காலினை உடைய இறால் மீன் வலிய வாளை மீன் ஆகியவற்றை விட்டு நாட்டில் விளச்சல் பெருக வேண்டும்  அதனால் உலகம் வளமுடன் பொலிய வேண்டும் என்று வேண்டி வாழ்த்தினர். இது பண்டைய தமிழர் மரபு; இன்றும் இவ்வழக்கம் உண்டு – ஆடிப்பெருக்கு – புதுப் புனல் வரவேற்றல்.
 (இறவு – இறாமீன்  இது காலுடைய மீனாதலின் நடை இறவு என்றார். )


ஒப்புமை
இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன்
நல்லது வெஃகி வினை செய்வார்
கரும்பிள்ளைப் பூதனார். பரிபா. 10 :  87 - 88
இல்லாமையால் வாடுவோர் நிலையினை - அவரைப் பார்த்த அளவில் உணர்ந்துகொண்டு – அவர் தம்முடைய வறுமை நிலையை வாய் திறந்து கேட்பதற்கு முன்பே – அறத்தினை விரும்பி நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் -அவர்க்கு வேண்டியவற்றைக் கொடுப்பார்.
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள.  (குறள் . 223) மேலும் காண்க :
 இம்மைச் செய்தது ………………….. புறநா.134.  பேணி யாடும் பெரும்புனல் ………… பெருங். 140 : 234 – 242.

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி – 17-18

பரிபாடல் – அரிய செய்தி – 17-18
கடல் வணிகம்
தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரை சேரும்
ஏமுறு நாவாய் வரவு எதிர் கொள்வார் ….
கரும்பிள்ளைப் பூதனார். பரிபா. 10 : 38 - 39
தம்மால் விரும்பப்பட்ட துறைமுகப் பட்டினத்தை அடைந்து வணிகம் செய்து  அங்கிருந்து மீண்டும் கரையைச் சேர்ந்த – தாம் இன்பம் அடைதற்குக் காரணமான மரக்கலத்தின் வருகையினை விரும்பி எதிர்கொண்டு வரவேற்று மகிழும் வணிகர்.
பரிபாடல் – அரிய செய்தி - 18
கள்ளும் காமமும்
காமம் கணைந்து எழ கண்ணின் களி எழ
ஊர் மன்னும் அஞ்சி  ஒளிப்பாரவர் நிலை
கள்ளின் களி எழக் காத்தாங்கு ……
கரும்பிள்ளைப் பூதனார். பரிபா. 10 : 63 - 65
நெஞ்சத்திலே காமம் மிக்கு எழ – அதானானே தம் கண்களிலே அக்காமக் களிப்புப் புறத்தாற்குப் புலப்படும்படித் தோன்றும் – அதனை அறிந்து ஊரில் உள்ளார் அலர் தூற்றுவாரோ என்று அஞ்சி – காமக் களிப்பினை பிறர் அறியாதபடி மரைக்க முயல்வார் நிலைமை –
 கள் உண்டவர் தம்பால் கள்ளின் களிப்புப் புறத்தார்க்குப் புலப்படத் தோன்றி நிறக  -  தம் மனம் துன்புறும்படி ஊரவர் பழிப்பாரோ என்று அஞ்சி – அதனைப் பிறர் அறியாமல் மறைக்க முயலும் முயற்சியே  - கள் உண்ட களிப்பினை யாவரும் அறியும்படி - தாமே பரப்பி -  பின் உலகம் பழி தூற்றலைக் கேட்டு உள்ளம் நடுங்குவர். தம் கண்ணில் தோன்றும் காமக் களிப்பை மறைப்பவருடை நிலைமை   கள்ளுண்டு அதனால் உண்டாகிய களிப்பை மறைப்பருடைய நிலைமைய ஒக்கும்.
( கணைந்து – மிகுந்து ; மன்னுமஞ்சி – மிகவும் அஞ்சி; உளை – துன்பம் ; களிமதர் – கள் உண்ட களிப்பு. )