ஞாயிறு, 31 ஜனவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 10

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 10
ஓரி
………………….. நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து
குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரை காரியொடு மலைந்த
ஓரிக் குதிரை ஓரியும் …..
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 107 – 111
                       செறிந்த கொம்புகளில் நறுமணம் மிக்க பூக்கள் நிறைந்த சுரபுன்னைகளையும் குறிய மலைகளையும் உடைய நல்ல நாடுகளைக் கூத்தாடுவோர்க்குக் கொடுத்தவனும் –  காரி என்னும் பெயர்பெற்ற குதிரையை உடைய காரி என்பானோடு போர் செய்தவனும் ஆகிய ஓரி என்னும் வள்ளலும்…..
 ஈண்டுக் குறிப்பிட்ட -  பேகன். பாரி. காரி. ஆய். அதிகன். நள்ளி. ஓரி ஆகியோர் கடையெழு வள்ளல்கள் ஆவர். 

சனி, 30 ஜனவரி, 2016

நள்ளி -9

நள்ளி
…………………… கரவாது
நட்டோர் உவப்ப நடைப்பரி காரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கை
துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு
நளிமலை நாடன் நள்ளியும் ………
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 103 – 107
                       தன்மனத்து நிகழ்கின்றவற்றை மறைக்காது கூறித் தன்னை நாடி வந்தவர் மனம் மகிழ – அவர் இல்லத்திற்கு இயன்ற பொருள்களைக் குறிப்பறிந்து வழங்குபவனும்  மழை வளமிக்க நெடிய குவடுகளை உடைய மலை நாட்டை உடையவனும் போர்த் தொழில் வல்லவனும் ஆகிய நள்ளி என்னும் வள்ளலும்…..

வெள்ளி, 29 ஜனவரி, 2016

அதிகன் - 8

அதிகன்
…………………….. மால்வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீம்கனி ஒளவைக்கு ஈந்த
உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக் கடல்தானை அதிகனும் ……..
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 99 – 103
                            பெரிய மலையினது சாரலில் நின்று – அழகுபெற்ற நெல்லியினது அமிழ்தத் தன்மையுடைய கனியைத் தான் நுகர்ந்து ; தன் உடம்பிற்கு ஆக்கம் செய்து கொள்ளாமல் ஒளவைக்குக் கொடுத்தவனும் -  கொற்றவையின் சினம் திகழும் ஒளிமிக்க வேலையும் ஆரவாரிக்கின்ற கடல்போன்ற படையினையும் உடைய அதிகன் என்னும் வள்ளலும்…… 

வியாழன், 28 ஜனவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 7

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 7

ஆய்
………………………. நிழல்திகழ்
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும் ……
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 95 – 99

                        ஒளிமிக்க நீல மணியினையும் நாகம் கொடுத்த கலிங்கத்தையும் விருப்பத்தோடு ஆலின் கீழிருந்த இறைவனுக்குக் கொடுத்தவனும் – வில்லேந்திய சந்தனம் பூசிப் புலர்ந்த தோளையுடையவனும் – ஆர்வமிக்க மொழிகளைப் பேசுபவனும் ஆகிய ஆய் என்னும் வள்ளலும்…. 

புதன், 27 ஜனவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 6

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 6

காரி
……………………………. கறங்குமணி
வாள் உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல்தொடித் தடக்கை காரியும் …………
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 91 – 95
                         மணியையும் தலையாட்டத்தினையும் உடைய குதிரையோடு அருள் நிறைந்த சொற்களையும் உலகத்தவர் கேட்டு வியக்குமாறு இரவலர்க்குக் கொடுத்த வேலையும் தொடியணிந்த கையினையும் உடைய காரி என்னும் வள்ளலும்…… 

செவ்வாய், 26 ஜனவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 5

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 5
பாரி
 …………………………… சுரும்பு உண
நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான் பாரியும் ……
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 8 7– 91
                     சுரும்புகள் உண்ணும்படி தேன் வழங்கும் சுரபுன்னை மரங்கள் நிறைந்த நெடிய வழியின்கண் – தனது தேரைத் தடுத்த முல்லைக்கொடி – அதனை விரும்பியதாகக் கருதி அதற்குத் தனது பெரிய தேரை அளித்தவனும் வெள்ளிய அருவி வீழும் பறம்பு மலைக்கு அரசனுமாகிய பாரி என்னும் வள்ளலும்….

திங்கள், 25 ஜனவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 4 ஏழு வள்ளல்கள் இதன்கண் – பேகன் முதலிய ஏழு வள்ளல்களின் ஈகைத் தன்மையை எடுத்துக்கூறி – இந்நாள் அவர்தம் ஈகைத்தன்மையை நல்லியக்கோடன் ஒருவனே தாங்குகின்றான் என அவனைப் புகழ்ந்துரைக்கின்றார். பேகன் வானம் வாய்த்த வளமலைக் கவாஅன் கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் பெருங்கல் நாடன் பேகனும் ….. இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 8 4 – 87 பருவமழை பொய்யாது பெய்தலால் வளமிக்க மலைப்பக்கத்துக் காட்டில் திரிந்த மயில் அகவியதனைக் கேட்டு – அது குளிரால் நடுங்கி அகவியது எனக் கருதி இரக்கமுற்றுத் தனது போர்வையைக் கொடுத்த வலிகெழுமிய வடிவமுடைய ஆவியர் குடியில் தோன்றிய பெருந்தகையாகிய பெரிய மலை நாட்டை உடைய பேகன் என்னும் வள்ளல்.

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 4

ஏழு வள்ளல்கள்
இதன்கண் – பேகன் முதலிய ஏழு வள்ளல்களின் ஈகைத் தன்மையை எடுத்துக்கூறி – இந்நாள் அவர்தம் ஈகைத்தன்மையை நல்லியக்கோடன் ஒருவனே தாங்குகின்றான் என அவனைப் புகழ்ந்துரைக்கின்றார்.
 பேகன்
வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும் …..
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 8 4 – 87
                        பருவமழை பொய்யாது பெய்தலால் வளமிக்க மலைப்பக்கத்துக் காட்டில் திரிந்த மயில் அகவியதனைக் கேட்டு – அது குளிரால் நடுங்கி அகவியது எனக் கருதி இரக்கமுற்றுத் தனது போர்வையைக் கொடுத்த வலிகெழுமிய வடிவமுடைய ஆவியர் குடியில் தோன்றிய பெருந்தகையாகிய பெரிய மலை நாட்டை உடைய பேகன் என்னும் வள்ளல். 

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 3

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 3
தமிழ் நிலைபெற்ற மதுரை
தத்துநீர் வரைப்பின் கொற்கைக் கோமான்
தென்புலம் காவலர் மருமான் ஒன்னார்
மண்மாறு கொண்ட மாலை வெண்குடை
கண்ணார் கண்ணி கடுந்தேர்ச் செழியன்
தமிழ் நிலைபெற்ற தங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை…………..
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 62  – 67

கொற்கை நகருக்கு வேந்தனும் தெற்கில் உள்ள பாண்டி நாடு முழுமையும் காவல் செய்யும் பாண்டியர் மரபில் தோன்றியவனும் கண்ணி உடையானும் விரைந்து செல்லும் தேரினை உடையானும் ஆகிய செழியனின் தலைநகராகிய – தமிழ் வீற்றிருந்த மனமகிழ்ச்சியைத் தோற்றுகின்ற தெருக்கள் கொண்ட மதுரை ……
முச்சங்கங்கள் நிறுவித் தமிழாய்ந்த பெருமையும் நிலந்தருதிருவிற் பாண்டியன் முதலான மன்னர்கள் அச்சங்கங்களின் வளர்ச்சிக்கு ஆவன செய்து செந்தமிழை வளர்த்தமையானும் தமிழ் வளம்பெற்று அழியாது நிலவுவதற்கு இடமாக அமைந்த மதுரை.
( தத்துநீர் வரைப்பின் கொற்கை – கொற்கைத் துறைமுகப் பட்டினம்)

மதுரை – “ முத்தும் முத்தமிழும் தந்து முற்றுமே “ – கம்பன். ..தொடரும்….. 

சனி, 23 ஜனவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 2

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 2
இமயத்தில் வில் பொறித்த….
குடபுலம் காவலர் மருமான் ஒன்னார்
வடபுல இமயத்து வாங்குவிற் பொறித்த
எழிஉறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 47 – 49
இயற்கை வளம் செறிந்த  மேற்றிசைக்கண் உள்ள சேர நாட்டின் அரசர் குடியில் பிறந்தவனும் கணைய மரத்தை ஒத்த திண்ணிய தோளையுடையவனும் குட்ட நாட்டிற்குத் தலைவனுமாகிய மன்னன்…
சேரர் ஆணை இமயம் வரை சென்றமையை –
( மருமான் – மரபில் தோன்றியவன் ; ஒன்னார் – பகைவர் ; வாங்குவில் – வளைந்த வில் – இலச்சினை ;  வருபுனல் – ஆற்று நீர்.)
வடதிசை எல்லை இமயமாகத்
தென்னங் குமரியோடு ஆயிடை அரசர்
முரசுடைப் பெருஞ்சமந் ததைய ஆர்ப்பெழ
…………………………. குட்டுவ.  என்கிறது பதிற்றுப்பத்து.
குமரியொடு வட விமயத்து
ஒருமொழிவைத் துலகாண்ட
சேரலாதன் …….  என்கிறது சிலப்பதிகாரம்… தொடரும்……….. 

வெள்ளி, 22 ஜனவரி, 2016

3. சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி

3.  சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி
               ஆசிரியர் : இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
சிறுபாணாற்றுப்படை – ஒய்மாட்டு நல்லியக்கோடனிடம் பரிசில் பெற்று மீளும் சிறுபாணன் ஒருவன் வழியில்கண்ட  வறுமையுற்ற பாணன் ஒருவனை ஆற்றுப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது.
சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 1
நட்ட பாடை  - பண்
பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்
இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை
கைவல் பாண்மகன் கடன் அறிந்து இயக்க
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 34 - 37
பொற்கம்பியையொத்த முறுக்கு அடங்கின நரம்பினது இனிய ஓசையையுடைய  சிறிய யாழை இடப்பக்கத்தே தழுவி  நட்டபாடை என்னும் பண்ணைப் பாலை யாழில் இசைக்கவல்ல பாணன் முறைமை அறிந்து இசைக்க…
( சீறியாழ் – சிறிய யாழ் ; நைவளம் – நட்டபாடை என்னும் பண் ; பழுநிய – முற்றுப்பெற்ற ; கடனறிந்து – முறைமையறிந்து.) ..தொடரும்….

வியாழன், 21 ஜனவரி, 2016

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 8 காவிரியில் கல்லணை….

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 8
                                      காவிரியில் கல்லணை….

தானிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை
                                                    ---- மணிமேகலை. பதிகம் : 24 – 25
வாழியவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி
ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவிரி
ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் உயிரோம்பும்
ஆழி யாள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி
                                                        ----- சிலப்பதிகாரம் . கானல்வரி : 27
காவிரிப் புரப்பதற்குக் காரணம் கரிகால்வளவனின் செங்கோலே எனச் சிறப்பித்தார் இளங்கோவடிகள் –      
  “ கரிகால்வளவன் ஈழத்தினின்று பன்னீராயிரம் மக்களைச் சிறை பிடித்துக்கொணர்ந்து காவிரிக்குக் கரை கட்டுவித்தான். இராசேந்திரச் சோழன் சோழகங்கம் என்னும் ஏரியை வெட்டினான். ‘முடிகொண்டான்’ ஆறும் இவனால் வெட்டப்பட்டது போலும் ! காவிரிக் கல்லணை கி.பி. 1068இல் வீரராசேந்திரனால் வெட்டப்பட்டதாகத் தெரிகின்றது. “ – பாவாணர்.         
மேற்சுட்டிய சான்றுகளாலும் காவிரியில் கல்லணை இருந்ததென்றும் அதனைக் கட்டியவன் கரிகாலன் என்பதும் தெற்றென விளங்கும்.

(முடத்தாமக்கண்ணியாரின் போற்றற்குரிய புலமைத் திறத்தை – “ பாலை யாழின் அமைப்பு. பாடினியின் தோற்றப் பொலிவு. அரசனின் விருந்தோம்பல் பண்பு –வெண்ணிப் போர் வெற்றி – கரிகாலன் கொடைச் சிறப்பு – சோழ நாட்டின் வளமும் வனப்பும்” ஆகியவற்றை மூலநூலில் கண்டுணர்க .) தொடரும் ………

புதன், 20 ஜனவரி, 2016

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 7

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 7
                                      காவிரியில் கல்லணை….
                                     கரிகாலன் காவிரியின் குறுக்கே அணை கட்டியதற்கான சான்று யாண்டும் காணப்படவில்லை - ஆயின் மேற்சுட்டிய கருத்துக்களைக் கொண்டு பார்க்கும்பொழுது - கடுங்கோடையிலும் நீர் நிலைகள் நிரம்பியிருந்தன விளைநிலங்கள் செழித்திருந்தன -  காவிரி ஆற்றின் வளம் முழுவதையும் கரிகாலனே கொண்டிருந்தான் என்பதால் காவிரியைக் காத்துச்( அணை கட்டி) சோழ நாட்டை வளமாக்கினான் என்பது சொல்லாமலே விளங்குமன்றோ..! 
 காவிரி யாற்றின் சிறப்பு
வசையில் புகழ் வயங்கு வெண்மீன்             
திசை திரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப்பு யன்மாறி
வான்பொய்ப்பினுந் தான்பொய்யா
மலைத் தலைய கடற் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்
                        -- பட்டினப்பாலை : 1 – 7
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பிற் கடுங்குர லேற்றோடும்
சூன்முதிர் கொண்மூப் பெயல் வளஞ் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பஃ றாரமொடு
கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓவிறந் தொலிக்கு மொலியே ….
காண்க:  வாய்த்தலை – நீரைத் தேக்கும் தலை மதகு (உழவர் வழக்கு)
  --- சிலப்பதிகாரம் : 10 : 102  –  109
 இதன் பொருளாவது – கோள்களிற் சனிக்கோள் இடபம் சிங்கம் மீனமென்னு மிவற்றினோடு மாறுபடினும், ஆகாயத்தே தூமக்கோள் எழினும், விரிந்த கதிரையுடைய வெள்ளிக்கோள் தென்றிசைக்கண்ணே பெயரினும் காற்றுப்பொரும் குடகவரையினது உச்சிக்கண்ணே கடிய குரலையுடைய உருமேற்றோடு சூன்முதிர்ந்த பருவப்புயல் தன்பெயலாகிய வளத்தைச் சுரத்தலானே அவ்வரையிற்பிறந்த பல பண்டத்தோடு கடுகிவருதலையுடைய காவிரியினீர், முகத்தைக் குத்தியிடிக்குங் கடல் தன் வளத்தைக் கொண்டு எதிர்தலானே தேங்கி, வாய்த்தலைக்கிட்ட கதவின் மீதெழுந்து குதிக்கின்ற அப்புதுப்புன லொலியல்லது ஆம்பி முதலாயின ஒலித்தல் செல்லாவென்க.
கோள்நிலை திரிந்து கோடை நீடினும் … 

செவ்வாய், 19 ஜனவரி, 2016

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 6

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 6
பொருநராற்றுப்படை -  கரிகால்பெருவளத்தானை முடத்தாமக்கண்ணியார் பாடியது .

காவிரியில் கல்லணை
கருவி வானம் கடற்கோள் மறப்பவும்
பெருவறன் ஆகிய பண்புஇல் காலையும்
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்
துறைதுறை தோறும் பொறை உயிர்த்து ஒழுகி
நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பு அகம்புகு தொறும்
புனலாடு மகளிர் கதுமெனக் குடைய
கூனி குயத்தின் வாய்நெல் அரிந்து
சூடு கோடாகப் பிறக்கி நாள்தொறும்
குன்றுஎனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும்
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாக
காவிரி புரக்கும் நாடுகிழ வோனே
முடத்தாமக்கண்ணியார். பொருந. 2 :  236 – 248
சோழ நாட்டில் – கடுங்கோடையில் பயிர்கள் கருகவும் – அருவி நீர் இல்லாது ஒழியவும் - முகில்கள் கடல் நீரை முகத்தலை மறந்தொழியவும் – இவற்றால் பெரிய வற்கடம் (பஞ்சம்) உண்டாகும் . அத்தகைய காலத்தும் நறைக்கொடியும் நரந்தம் புல்லும் அகிலும் சந்தனமுமாகிய சுமைகளைச் சுமந்து கொணர்ந்து அவற்றை நீர்த்துறைதோறும் இட்டு – இளைப்பாறிப் பின் மேலும் நடந்து செல்லும் இயல்புடையது காவிரி – நுரையைத் தலையிலேயுடைய ஆரவாரம் பொருந்திய தன் வெள்ள நீர் கரை சூழ்ந்த குளங்களிலும் – பிற நீர்நிலைகளிலும் புகுந்தொறும் – நீர் விளையாடலை விரும்பும் மகளிர் விரைந்து சென்று அவற்றில் குடைந்து விளையாடுவர்- உழத்தியர் தம் உடல் வளைந்து குனிந்து நின்று அரிவாளால் முதிர்ந்து விளைந்த நெற்றாளை அரிந்து – தாள் அரிந்து திரட்டிய சூட்டினைச் சுமையாகக் கட்டிக்கொண்டுபோய் மலையாகப் போராக்கி – நாள்தொறும் கடா விட்டு (பிணையலடித்து) மலையெனக் குவிப்பர் – அள்ள அள்ளத் தொலையாத அந்நெற்பொலி நன்கு தைத்த மூடைகளிலே குதிர் முதலியவற்றில் இடமின்மையால் யாண்டும் கிடக்கின்ற செந்நெல் விளைகின்ற வரம்பு கட்டப்பட்ட  - ஒரு வேலி நிலம் ஆயிரங்கல நெல் விளையும்படி காவிரியாற்றால் வளமாக்கப்படுகின்ற நாடு முழுவதும் தனக்கே உரிமையுடையதாய தன்மையன் கரிகாலன்.
 ( எல்லை – பகல் ; பல்கதிர் பரப்பி – கோடைக் காலம் ; குல்லை -கஞ்சங்குல்லை – கஞ்சா செடி : புரத்தல் – உயிர்களை ஓம்புதல் ;  நறை – நரந்தம் – மணமுடைய கொடி – புல் .) தொடரும்…….

திங்கள், 18 ஜனவரி, 2016

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 5

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 5
காக்கைக்குச் சோறிடல்
……………. குடிவயினான்
செஞ்சோற்ற பலி மாந்திய
கருங்காக்கை ………….
முடத்தாமக்கண்ணியார். பொருந. 2 :  182 - 184
மருத நிலத்துக் குடிமக்கள் காக்கைகளுக்கு நாள் தவறாமல் பலி வழங்குவர்.
விருந்துவரக் கரையும்…..
வெண்ணெல் வெஞ்சோறு எழுகலத் தேந்தினும்
சிறிதென் தோழி ………………
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே
 -குறுந். 210 : 3-5. . தொடரும்… 

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

  முகநூலில்
திருக்குறள் அறிவியல் - முற்றும்

திருக்குறள் – பேரறிஞர்கள் ஆய்வுரை …… தொடரும்…………….  Rengasamy Kumaran

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 4

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 4
கரிகால்வளவன்
….. …… ….. வென்வேல்
உருவப் பல்தேர் இளையோன் சிறுவன்
முருகற் சீற்றத்து உருகெழு குரிசில்
தாய்வயிற் றிருந்து தாயம் எய்தி
எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப
பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி
வெவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு
பிறந்துதவழ் கற்றதன் தொட்டு சிறந்தநன்
நாடுசெகிற் கொண்டு நாள்தொறும் வளர்ப்ப
முடத்தாமக்கண்ணியார். பொருந. 2 : 129  – 141
கரிகால்வளவன் – பகைவரை வென்ற வேலினையும் அழகினையும் அச்சம் விளைவிக்கும் பல தேர்களையும் உடைய( உருவப்பஃறேர்) இளஞ்சேட் சென்னியின் மைந்தன் ; முருகக்கடவுளின் சீற்றத்தையும் கண்டார் அஞ்சும் தோற்றப் பொலிவினையும் உடைய சிறந்த தலைவன் ; அவன் தன் தாயின் கருவில்  இருந்தபோதே அரசுரிமையைப் பெற்றான் ; தன் வலியறியாத  பகைவர் பின்னர்த் தன் வலியை அறிந்து ஏவின தொழிலைச் செய்யவும் அங்ஙனம் அறிந்து செய்யாத பகைவரது நாடு மனக்கவலை அடையவும் ; கடலின் மீதே தன் சுடர்களைப் பரப்பித் தோன்றிப் பின்னர் மெல்ல விண்ணிடத்தே  ஞாயிறு சென்றாற் போன்று ; பிறந்து தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கிச் சிறந்த நல்ல நாட்டைத் தன் தோளிலே சுமந்தவன் ….
( உருவம் – அழகு ; பவ்வம் – கடல் ; குரிசில் – தலைவன்.)  ..தொடரும்……….

சனி, 16 ஜனவரி, 2016

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 3

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 3
விருந்து போற்றல்
…….. …….. ……… ஒன்றிய
கேளிர் போல கேள்கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறி
கண்ணில் காண நண்ணுவழி இரீஇ
பருகு அன்ன அருகா நோக்கமோடு
உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ
முடத்தாமக்கண்ணியார். பொருந. 2 : 73  – 78
நான் விரும்பிப் பாடத் தொடங்குவதற்கு முன்பே கரிகாற் பெருவளத்தான் எழுந்துவந்தான் ; தன்னோடு பொருந்திப் பழகிய நண்பரிடம் தன் உறவுடைமையைக் காட்டுவதுபோல் காட்டினான் ; இனிய முகமன் உரைகள் பல கூறினான் ; தன் கண்ணினால் நன்கு காணும்படி  தனக்கு மிக அண்மையான இடத்திலே என்னை அழைத்து உட்கார வைத்துக் கொண்டான் ; என்னைக் கண்ணினால் பருகும் தன்மையை ஒத்த தன் பார்வையினால் என் எலும்புகள் நெகிழ்ந்து உருகும்படி குளிர்ச்சி கொள்ளச் செய்தான்.
( ஒன்றிய கேளிர் – நட்பில் பிணைந்த ; வேளாண் – விருந்து பேணல் ; அருகா நோக்கம் – கெடாத பார்வை.) தொடரும் …………….. 

வெள்ளி, 15 ஜனவரி, 2016

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 2

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 2
 பரிசு பெற்றோன் பெறாதோனை விளித்தல்
பீடுகெழு திருவின் பெரும்பெயர் நோன்தாள்
முரசுமுழங்கு தானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல
பாடல் பற்றிய பயனுடை எழாஅல்
கோடியர் தலைவ கொண்டது அறிந
முடத்தாமக்கண்ணியார். பொருந. 2 : 53  – 57
பெருமைமிக்க செல்வத்தினையும் பெரும் பெயரையும் வலிய முயற்சியினையும் வெற்றி முரசு முழங்கும் படையினையும் கொண்ட சேர சோழ பாண்டியர்கள் தம்மிற் பகைமை நீங்கி ஒருங்கே அரசு வீற்றிருக்கும் தோற்றம் பெருஞ் சிறப்பை நல்குவதாகும். அதுபோல் கூத்தர்களுக்குத் தலைவனே ! நீ மிடற்றுப் பாடலைப் பாடுதலில் வல்லமை உடையாய் ! யாழ் இசைப்பதில் வல்லமை உடையாய் ! அந்த இருவகைப்பட்ட இசைக்கும் ஒப்பக் கூத்து ஆடவும் நீ வல்லாய் ! பாட்டிசையும் யாழிசையும் கூத்தாட்டும் தம்முள் ஒத்து உன்னிடம் இருக்கும் காட்சி – அந்த மூவேந்தரும் ஒருங்கே இருக்கும் காட்சியை ஒத்த இன்பம் தருகின்றது.
( பீடு – பெருமை ; பெரும்பெயர் – உலகறிந்த புகழ் ; தாள் – முயற்சி.) ..தொடரும்……….        

வியாழன், 14 ஜனவரி, 2016

பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 1

2. பொருநராற்றுப்படை -  கரிகால்பெருவளத்தானை முடத்தாமக்கண்ணியார் பாடியது .
பொருநராற்றுப்படை – அரிய செய்தி : 1
பாலை யாழ்
ஆறலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை
முடத்தாமக்கண்ணியார். பொருந. 2 : 21 – 22
பாலைநில வழியே செல்பவரை அலைத்துப் பொருள் பறிக்கு கொடுமையான ஆறலை கள்வர்கூட .தம் கைகளில் உள்ள கொடிய படைக்கலங்களைப் போட்டுவிட்டு அடங்கி நிற்கும்படியன (இனிமை) பண்பு  நிறைந்தது பாலை யாழ்.
இசை – கேட்போர் உள்ளத்தே இன்பம் விளைத்தலோடு உள்ளத்தைப் பண்படுத்தும் ஆற்றல் உடையதும்  என்பதாம். ..தொடரும் ….. 15/1/16


புதன், 13 ஜனவரி, 2016

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
                செஞ்ஞாயிற்றுச் செலவினை அன்றே அளந்தறிந்த தமிழன் உயிர்கள் உறையும் உலகிற்கு ஆதிபகலன் ஆகிய சூரியனே காரணன் எனக் கண்டறிந்தான்.
                          ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இயற்கையின் முதற்பொருளாகிய ஒளியை இறைவழிபாடாகக் கொண்டு,  படைப்பு இயற்கையின் கொடை என்றறிந்து,  படைக்கப்படும் பொருள் யாவும் தென்னை, வாழை, கரும்பு, நெல், அரிசி, இஞ்சி, மஞ்சள், பூ, புல்,  காய், கனி, கதிர் என இயற்கைப் பொருளாய் விளங்க,   கூடி உழைத்துக் கொண்டாடி மகிழ ஊரும் மக்களும் ஆடும் மாடும் கன்றும் கழனியும் மரமும் செடியும்  கொடியும் புல்லும் பூண்டும் பூவும் காயும் கனியும் உறவுகளாய் அமைய  நலமாய் வளமாய் வாழ  அருளும் ஞாயிறு போற்றும் நாளிது…
                           உலகம் உவந்து போற்றும் தமிழனின் இறைவழிபாட்டை இன்று பெற்றனம். இனிதே பொங்கலிட்டு எங்கும் நிறைந்த இறை ஆற்றலைத் தொழுதேத்தினோம் ; ஏற்றருள் புரிந்து என்றும் துணை நிற்க இறைஞ்சினோம் இறைவா…!
                                உலகை வலம்வந்து உயிர்களை வாழவைப்பாயாக.. !
அறுவடைத் திங்களை ஆண்டின் தொடக்கமாகக்கொண்டு எல்லாம் வல்ல முழுமுதற்பொருளாம் சூரியனுக்கு நன்றி பாராட்டும் நன்னாளின்று -  வாழ்த்துவோம் வளம்பெறுவோம்; மகிழ்வோம் மகிழ்விப்போம்  எல்லாவற்றையும் ஏற்றுப் போற்றும் இடமகன்ற உயர்ந்த இடத்தில் இருக்கும் இளங்கதிர்ச் செல்வனே உன்னை வணங்கி மகிழ்கின்றோம்.
எழுந்து வா இளங்கதிரே…. ! இன்று புதிதாய்ப் பிறந்தோம் – புத்தாடை உடுத்தி, புதுப்பானைப் பொங்கலிட்டு உண்ணும் உணவில் ஒன்றுபட்டோம்  உணரும் தமிழ்உறவில் ஒன்றுபட்டு நிற்போம் .. வழிபடுவோம் வல்லமை பெறுவோம்.


என் இனிய முகநூல், வலைப்பூ நண்பர்கள் மற்றும் உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி – 13

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி – 13
முருகனை வழிபடுதல்
ஆடுகளம் சிலம்பப் பாடி பலவுடன்
கோடுவாய் வைத்து கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்த வாறே
                                              நக்கீரர். திருமுரு. 1: 245 – 249
வெறியாட்டுக்களம் ஆரவாரிக்கும்படி  பாடி ஊதுகொம்புகள் பலவற்றையும் சேர ஊதி ; மணியை ஒலித்து ; முருகப் பெருமானுடைய யானையை வாழ்த்தி ; குறை வேண்டினார் தாம் வேண்டியவற்றைப் பெற்றார்போன்று நின்று வழிபாடு செய்ய ; முருகப் பெருமான் அவ்விடங்களில் தங்குதலும் உரியன். ( பிணிமுகம் என்பதற்குப் பெரும்பாலோர் மயில் என்றே பொருள் கூறுவர். பிணிமுகம் என்பது முருகன் ஏறும் யானை ஒன்றற்கே பெயர் என்பாரும் உளர்.)
பி.கு. தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ள  தமிழர்தம் கடவுள் வழிபாடு – புராணங்களில் புனைந்துரைகளாக இடம்பெற்றுள்ளன. ஆரிய மயமாக்கப்பட்ட தமிழர் கடவுள் வழிபாடு குறித்து ஆய்வு நிகழ்த்தப்படுதல் வேண்டும்.  ( சிலம்புதல் – ஒலித்தல் ; கொடுமணி – வளைவு பொருந்திய மணி ; வாய்வைத்து – ஊதி.) தொடரும் ……….. 

செவ்வாய், 12 ஜனவரி, 2016

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி – 12

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி – 12
6. பழமுதிர்சோலை
(மதுரை அழகர்மலை முருகன் – ”பழமுதிர்சோலை இன்ன இடம் என்பது தெளிவாகத் தெரியவில்லை ; மதுரைக்கு ஏறத்தாழ 15கி.மீ. தொலைவில் உள்ள அழகர் கோயில் அல்லது திருமாலிருஞ்சோலை மலையே பழமுதிர்சோலை எனக் கூறுவர் அறிஞர் – ஆனால் அத்தலம் இப்போது வைணவத் திருப்பதியாக விளங்குகின்றது.” )
முருகன் எழுந்தருளும் இடங்கள்
சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
ஊர் ஊர் கொண்ட சீர்கெழு விழவினும்
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும்
வேலன் தைஇய வெறிஅயர் களனும்
காடும் காவும் கவின்பெறு துருத்தியும்
யாறும் குளனும் வேறுபல் வைப்பும்
சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும்
மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்
            நக்கீரர். திருமுரு. 1: 218  – 226
குன்றுதொறும் ஆடற்கண்நிற்றலேயன்றி சிறிய தினை அரிசியைப் பூக்களோடு கலந்து பிரப்பரிசியாக வைத்து மறியறுத்துச் சேவற்கொடி உயர்த்து அவ்விடத்தே அந்த இறைப்பொருள் நிற்பதாக நினைத்து நிறுத்து ஊர்கள்தோறும் எடுக்கின்ற தலைமை பொருந்திய விழாவிடத்தும் முருகப் பெருமான் எழுந்தருளியிருப்பான்.
தன்பால் அன்புடையோர் ஏத்துதலால் மனம் பொருந்தி அவ்விடத்தும் இருப்பான் ; வேலன் இழைத்த வெறியாடு களத்திலும் இருப்பான் ; காட்டிலும் சோலையிலும் அழகுபெற்ற ஆற்றிடைக்குறையிலும் ஆற்றிலும் குளத்திலும் முற்கூறப்பட்ட ஊர்களன்றி வேறுபல ஊர்களிலும் நாற்சந்தியிலும் முச்சந்தியிலும் ஐஞ்சந்தியிலும் புதிதாக மலர்ந்துள்ள கடப்ப மரத்திலும் ஊர்நடுவே மக்கள் குழுமியிருக்கும் மன்றத்து மரத்திலும் ஊரம்பலங்களிலும் அருட்குறியாக நடப்பட்ட தறிகளிலும் முருகன் எழுந்தருளியிருப்பான். ( கல்தறி – இறைவன் அருள் குறித்து நடப்பட்ட கல் –வழிபாடு ; வாரணம் – கோழி ; துருத்தி –ஆற்றிடைக்குறை ; வைப்பு – ஊர்.) தொடரும்………….. 

திங்கள், 11 ஜனவரி, 2016

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி – 11

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி – 11
முருகள் எழுந்தருளல்
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு
செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச்
செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன்
கச்சினன் கழனினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் வியந்தன்
தகரன் மஞ்ஞையன் புகரில் சேவல்அம்
கொடியன் நெடியன் தொடியணி தோளன்
நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல்
மருங்கில் கட்டிய நிலனேர்பு துகிலினன்ஈ
முழவு உறழ் தடக்கையின் இயல ஏந்தி
மெந்தோள் பல்பிணை தழீஇ தலைத்தந்து
குன்றுதொறு ஆடலும் நின்றதன் பண்பே ….
            நக்கீரர். திருமுரு. 1: 205  – 217
முருகன் சிவந்த மேனியன் ; சிவந்த ஆடையை உடையவன் ; அசோகினது  அணிந்தவன் ; வீரக் கழலைத் தரித்தவன் ; வெட்சி மாலையைச் சூடியவன் ; புல்லாங்குழலை இசைப்பவன் ; பெரிய கொம்பை ஊதுபவன் ; வேறுபல இசைக் கருவிகளையும் இசைப்பவன் ; ஆட்டுக்கிடாவை வாகனமாக உடையவன் ; மயிலை ஊர்தியாகக் கொண்டவன் ; குற்றமற்ற சேவல் கொடியை உயர்த்தவன் ; நெடிய உருவம் படைத்தவன் ; தொடி எனும் அணியைத் தோளில் அணிந்தவன் ;இடையில் நறிய மென்மை மிக்கதாகிய ஆடையை நிலத்தளவும் புரளும் வண்ணம் தரித்தவன் ; முழவை ஒத்த பெரிய கைகளால் மான்பிணை போலும் பல மகளிரைத் தழுவிக்கொண்டு  அவர்க்கு முதற்கை கொடுத்து மலைகள்தோறும் சென்று விளையாடுதல் முருகக் கடவுளின் நிலைத்த குணமாகும்.
( தகர் – ஆட்டுக்கிடா ; குல்லை  கஞ்சங்குல்லை ; வாலிணர் – வெள்ளிய பூங்கொத்து ; செய்யன் – சிவந்த மேனியன் .) தொடரும்……. 

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி - 10

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி - 10
5.குன்றுதொறு ஆடல் (மலைகளுக்கெல்லாம் பொதுப் பெயர்)
குறிஞ்சியில் விழா
பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன்
அம்பொதிப் புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன்
நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கண் தேறல்
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை அயர
            நக்கீரர். திருமுரு. 1: 190 – 197
முருகன் பூசை செய்யும் வேலன் – பச்சிலைக் கொடியால் நல்ல மணமுடைய சாதிக்காயை இடையிடையே சேர்த்து அதனோடு அழகிய புட்டிலைப் போன்ற வடிவுடைய தக்கோலக்காயையும் கலந்து – காட்டு மல்லிகையுடன்
வெண்டாளிப் பூவையும் சேர்த்துக் கட்டிய தலைமாலையை உடையவனாய் நிற்க – நல்ல மணங்கமழும் சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினை உடையவரும் – கொடிய தொழிலைச் செய்பவருமான குறவர்கள் – நீண்ட மூங்கில் குழாய்களில் ஊற்றி நெடுநாள் வைத்து முற்றி விளைந்த தேனால் ஆன கள்ளின் தெளிவை  - மலையிடத்துள்ள சிற்றூரில் வாழும் தம் சுற்றத்தாருடன் உண்டு மகிழ்ந்து – தங்கள் குறிஞ்சி நிலத்துக்குரிய ” தொண்டகப் பறையை அடித்து அவ்வோசைக்கேற்பக் குரவைக் கூத்தாட – முருகக் கடவுள்  எழுந்தருளுகின்றான்.
(நறைக்காய் – சாதிக்காய் ; குளவி – காட்டுமல்லிகை ; புட்டில் (போன்ற) – தக்கோலக்காய் ; கேழ் – நிறம்.) 

சனி, 9 ஜனவரி, 2016

4.திருஏரகம்

4.திருஏரகம்
அந்தணர் என்போர்…!
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி இளமைநல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
            நக்கீரர். திருமுரு. 1: 177 – 182
ஓதல் முதலிய அறுவகைத் தொழில்களைச் செய்தலிலே வழுவாமல் – உலகத்தார் மதிக்கின்ற பல்வேறு பழங்குடிப் பிரப்பினராய் – நாற்பத்தெட்டு வருடங்கள் நல்ல இளமைக் காலம் முழுவதும் வேதம் கூறும்வழியில் பிரமசரியத்தைக் கைக்கொண்டு கழித்தவர்களும் -  அதன்பின் இல்லற வாழ்க்கையில் பயின்ற கோட்பாட்டினை உடையவர்களும் – மூன்று வித வடிவுடைய குண்டத்தில் மூன்று வகைத் தீயால் உண்டாகிய செல்வத்தையும்  - இரு பிறப்பினையும் உடைய அந்தணர்கள் தாங்கள் வழிபட வேண்டிய முக்காலமும் அறிந்து பூணூலையும் புலராத ஆடையையும் அணிந்து கொண்டு தலைமேல் குவித்த கையினராய் முருகப் பெருமானைப் புகழ்ந்து துதித்து – சரவணபவ என்னும் வேத மந்திரத்தை நாவால் பலமுறை ஒலித்து வழிபட…
திருவேரகம் – இதனை “மலை நாட்டகத்தொரு திருப்பதி “ என்றார் நச்சினார்க்கினியர். அருணகிரியார் சோழ நாட்டிலுள்ள “சுவாமிமலை” என்னும் தலமே  “ஏரகம் “ என்பார். 
திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி - 8
பாடும் மகளிர் – தோற்றப் பொலிவு
நோயின்று இயன்ற யாக்கையர் மாவின்
அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும்
பொன்னுரை கடுக்கும் திதலையர் இன்நகைப்
பருமம் தாங்கிய பனிந்துஏந்து அல்குல்
மாசுஇல் மகளிரொடு மறுவின்றி விளங்க
நக்கீரர். திருமுரு. 1: 143 – 147
நோயில்லாது இயன்ற நல்ல உடம்பினை உடையவர் ; மாந்தளிரை ஒத்த நிறத்தை உடையவர் ; பொன்னுரை போன்று மிளிரும் தேமலை உடையவர் ; நல்ல ஒளிமிக்க மேகலையை அணிந்த அல்குலை உடையவர்  ஆகிய பாடினியர் இனிய யாழை மீட்டிப் பாடிக்கொண்டே செல்ல ……
( பருமம் – மேகலை வகை ; அவிர்தல் – விளங்குதல் ; திதலை – தேமல்.)
முருகனின் தந்தை – சிவன்..?
முருகப் பெருமானை இடையறாமல் நினைக்கும் முனிவர்கள் முன்னே செல்ல – அவர்களைப்பின்பற்றிக் கந்தருவரும் அவர்தம் மகளிரும் இனிய யாழை மீட்டிப் பாடிக்கொண்டே பின்னால்வர – அவர்களுக்குப் பின்னால் திருமால் சிவபெருமான் இந்திரன் ஆகிய தேவர்கள் தொடர்ந்து செல்கின்றனர்.

புதன், 6 ஜனவரி, 2016

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி - 7

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி - 7
பாடும் ஆடவர் – தோற்றப் பொலிவு
புகைமுகந் தன்ன மாசுஇல் தூஉடை
முகைவாய் அவிழ்ந்த நகைசூழ் ஆகத்து
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின்
நல்யாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேலவர் இன்நரம்பு உளர
நக்கீரர். திருமுரு. 1: 138 – 142
பாலாவியன்ன நுண்ணிய ஆடை அணிந்தவர் ; மொட்டலர்ந்த மாலை சூழ்ந்த மார்பினை உடையவர் ; தமது எஃகுச் செவியால் இசையை அளந்து பண்ணுறுத்திய வார்க்கட்டினையுடைய யாழின் இசையிலே பயின்று பயின்று நன்மையுடைத்தாகிய மனம் கொண்டவர் ; எக்காலமும் இனிய மென்மொழியே பேசும் இயல்பினர் ஆகிய பாடுநர் இனிய யாழ் நரம்பினை இயக்க …
( ஆகம் – மார்பு ; எஃகு – கூர்மை ; யாழோர் – யாழ்ப்பாணர்.)

செவ்வாய், 5 ஜனவரி, 2016

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி - 6

3.திருஆவினன்குடி – பழனி / பொதினி.
திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி - 6
முனிவர் – தோற்றப் பொலிவு
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வால்நரை முடியினர்
மாசுஅற இமைக்கும் உருவினர் மானின்
உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்புஎழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல்
பலஉடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர் மேவரத்
துனிஇல் காட்சி முனிவர் …….
நக்கீரர். திருமுரு. 1: 126 – 137
மரவுரியையை உடுத்தவர் ; வலம்புரிச் சங்கை ஒத்த அழகிய நரைமுடியை உடையவர் ; அழுக்கின்றி விளங்கும் திருமேனியை உடையவர் ; மானின் தோலைப் போர்த்தவர் ; சதை வற்றிய மார்பில் விலா எலும்பிகள் தோன்றியசையும் உடலை உடையவர் ; பல பகற்பொழுதுகள் உண்ணும் உணவை நீக்கியவர் ; பகையைப் போக்கிய மனதை உடையவர் ; கற்றறிந்தவர்க்கும் தாம் எல்லையாகிய தலைமைத் தன்மை உடையவர் ; ஆசையையும் கடுங்கோபத்தையும் நீக்கிய அறிவுடையவர் ; எவரிடத்தும் வெறுப்பு இல்லாத மெய்ஞ்ஞானத்தை உடையவர்  ஆகிய  இவ்வியல்பகளை உடைய முனிவர்கள்.

( சீரை – மரவுரி ; சீர் – அழகு ; உரிவை – தோல் ; இகல்  மாறுபாடு ; செற்றம் – பகைமைக் குணம் ; துனி – வெறுப்பு.)

திங்கள், 4 ஜனவரி, 2016

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி – 5

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி – 5
ஆறுமுகத்தான் ஆற்றும் செயல்கள்
மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்க
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம் ; ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகி
காதலின் உவந்துவரம் கொடுத்தன்றே ஒருமுகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்குமே ஒருமுகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி
திங்கள் போலத்திசை விளக்கும்மே ஒருமுகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கி
கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒருமுகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகைஅமர்ந் தன்றே
ஆங்கு அம்மூஇரு முகனும் முறை நவின்று …..
நக்கீரர். திருமுரு. 1: 91 – 103

ஆறுமுகங்கள் ஆற்றும் அருட் செயல்கள்
பல சுடர்களைத் தோன்றச் செய்தது – ஒரு முகம்
வேண்டும் வரமளிக்கும் – ஒரு முகம்
அந்தணர் வேள்விகளைக் காக்கும் – ஒரு முகம்
வேத நூல்கள் காட்டாத எஞ்சிய பொருள்களைக் கூறும் – ஒரு முகம்
மறக்கள வேள்வியை விரும்பி நிற்கும் – ஒரு முகம்
வள்ளியம்மையுடன் மகிழ்ந்திருக்கும் – ஒரு முகம்
 பன்னிரு கைகள்- ஆற்றும் அருஞ்செயல்களை நூலில் கண்டு கொள்க.