புதன், 13 ஜனவரி, 2016

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி – 13

திருமுருகாற்றுப்படை – அரிய செய்தி – 13
முருகனை வழிபடுதல்
ஆடுகளம் சிலம்பப் பாடி பலவுடன்
கோடுவாய் வைத்து கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்த வாறே
                                              நக்கீரர். திருமுரு. 1: 245 – 249
வெறியாட்டுக்களம் ஆரவாரிக்கும்படி  பாடி ஊதுகொம்புகள் பலவற்றையும் சேர ஊதி ; மணியை ஒலித்து ; முருகப் பெருமானுடைய யானையை வாழ்த்தி ; குறை வேண்டினார் தாம் வேண்டியவற்றைப் பெற்றார்போன்று நின்று வழிபாடு செய்ய ; முருகப் பெருமான் அவ்விடங்களில் தங்குதலும் உரியன். ( பிணிமுகம் என்பதற்குப் பெரும்பாலோர் மயில் என்றே பொருள் கூறுவர். பிணிமுகம் என்பது முருகன் ஏறும் யானை ஒன்றற்கே பெயர் என்பாரும் உளர்.)
பி.கு. தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ள  தமிழர்தம் கடவுள் வழிபாடு – புராணங்களில் புனைந்துரைகளாக இடம்பெற்றுள்ளன. ஆரிய மயமாக்கப்பட்ட தமிழர் கடவுள் வழிபாடு குறித்து ஆய்வு நிகழ்த்தப்படுதல் வேண்டும்.  ( சிலம்புதல் – ஒலித்தல் ; கொடுமணி – வளைவு பொருந்திய மணி ; வாய்வைத்து – ஊதி.) தொடரும் ……….. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக