திங்கள், 18 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :910


திருக்குறள் -சிறப்புரை :910
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.--- ௯௧0
சிந்தனைத் தெளிவும் செயல் திறனும் உடையார்க்கு, எக்காலத்தும் பெண்ஏவல் வழிநின்று நடக்கவேண்டிய அறியாமை இருப்பதில்லை.
“ இரை சுடும் இன்புறா யாக்கையுள் பட்டால்
 உரை சுடும் ஒண்மை இலாரை…” –நான்மணிக்கடிகை.
நோயுள்ள உடம்பில் சேரும் உணவு செரிக்காமல் துன்புறுத்தும் ; அறிவு இல்லாதவரை அவர்தம் வாய்மொழியே துன்புறுத்தும்.

ஞாயிறு, 17 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :909


திருக்குறள் -சிறப்புரை :909
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்கண் இல்.--- ௯0௯
அறச் செயல்கள் ஆற்றலும் வாழ்க்கைக்குத் தேவையான பொருள் ஈட்டலும் பொதுத் தொண்டாகிய பிற நற்செயல்கள் செய்தலும் பெண் ஏவல் செய்பவர்களிடத்தில் இல்லை.
“ முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
 வார் இருங் கூந்தல் வயங்கு இழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே.” ---பட்டினப்பாலை.
நெஞ்சே…! அரிய பெரிய சிறப்பு வாய்ந்த காவிரிப் பூம்பட்டினத்தைப் பெறுவதாயிருந்தாலும் நீண்ட கரிய கூந்தலையும் ஒளி பொருந்திய அணிகலன்களையும் உடைய என் காதலியைவிட்டுப் பிரிந்து பொருள் தேடச் செல்ல மாட்டேன்……வாழிய என் நெஞ்சே.-தலைவன்.

சனி, 16 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :908


திருக்குறள் -சிறப்புரை :908
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.---- ௯0௮
(நன்று ஆற்றார்; நல் நுதலாள்)
மனைவியின் விருப்பப்படியே நடக்கின்றவர்கள் நண்பருக்கு நேர்ந்த குறையை நீக்க இயலாதவர்களாகவும் அறவழியில் நல்லன செய்ய முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.
“ செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு
 உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்
இல் இருந்து அமைவோர்க்கு இல்….” –அகநானூறு.
தம் பகைவர் செருக்கினை ஒழித்தலும் தம்மைச் சேர்ந்தோர்க்கு ஊறு (துன்பம்) நேர்ந்தவிடத்து உதவி செய்தலாகிய ஆண்மையும் வீட்டில் சோம்பி இருப்போர்க்கு இல்லை.


வெள்ளி, 15 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :907


திருக்குறள் -சிறப்புரை :907
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து. ---- ௯0௭
( பெண் ஏவல் )
பெண்டிர் இடும் கட்டளைக்கு இணங்கிச் செயல்படும் (இழிந்த) ஆண்மையைவிட நாணத்தை நற்குணமாகக் கொண்ட பெண்மையே பெருமை உடையது.
“ மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம்
சுற்றிச் சுழலும் என் நெஞ்சு.” ---கலித்தொகை.
மெல்லியல்புகள் மிக்க ஆயமகளே..! தயிர்க் குடத்தின் மத்தைச் சுற்றிய கயிறுபோல், நின் அழகைச் சூழ்ந்து சுற்றுகின்றது என் நெஞ்சு.---தலைவன்.

வியாழன், 14 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :906


திருக்குறள் -சிறப்புரை :906
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர். ---- ௯0௬
  மனைவியைத் தழுவி இன்புறும் காம விருப்பினால் அவளுக்கு அஞ்சி நடப்பவர்கள், இந்திரர் போன்று குறைவற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வாராயினும் அவர்கள் பெருமைக்கு உரியவர் அல்லர்.
“முந்திரிமேல் காணி மிகுவதேல் கீழ் தன்னை
இந்திரனாக எண்ணி விடும்.” –நாலடியார்.
முந்திரியின் அளவுக்கு மேல் காணி அளவு செல்வம் மிகுந்து விடுமாயின், கீழ்மைக் குணம் படைத்தவன் தன்னை இந்திரன் போன்று எல்லாச் செல்வங்களும் பெற்றவனாக நினைத்துக் கொள்வான்.


புதன், 13 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :905


திருக்குறள் -சிறப்புரை :905
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல். ---- ௯0௫
மனைவிக்கு அஞ்சி அடங்கி நடப்பவன்  எக்காலத்தும்  நல்லவர்களுக்குக்கூட நன்மையானவற்றைச் செய்ய அஞ்சுவான்.
இவன், நல்லவர்கள் போற்ற வாழும் தகுதியற்றவனாவான்.
“ பொய்யாற்று ஒழுக்கம் பொருள் எனக் கொண்டோர்
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ.” –மணிமேகலை.
பொய்யான நெறியில் ஒழுகும் ஒழுக்கத்தையே நோக்கமாகக் கொண்டவர்கள் துன்பத்தினின்று நீங்கித் தப்பித்தார் என்பதும் உண்டோ..? இல்லையே.

செவ்வாய், 12 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :904


திருக்குறள் -சிறப்புரை :904
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்தல் இன்று.--- ௯0௪
( மறுமை இலாளன் ; வீறு எய்தல்)
மனைவிக்கு அஞ்சி ஒடுங்கி நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவன் செய்யும்  எந்த ஒரு செயலும் வெற்றி பெறாது.
வாழும் போதே பெருமையுடன் வாழாதவன் இறந்தபின் பெருமை பெறுவானோ.. அவனே -- மறுமைப் பயன் இல்லாதவன்.
மனைவிக்கு அஞ்சி நடப்பவன் பிறர் போற்றும்படியான செயல் எதனையும் செய்ய இயலாதவன் ஆம்.
“ நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும்
ஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉ
ஒருபதி வாழ்தல் ஆற்றுபதில்ல
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய
மென்முலை முற்றம் கடவாதோர்…” அகநானூறு.
நெஞ்சே…! காம இன்ப நுகர்ச்சியைவிட்டு நீங்காத நெஞ்சினால் பொருள் ஈட்டாது சோம்பி இருப்போர், நண்பரும் சுற்றத்தாரும் துன்புறுதலையும் பகைவர் பெருமையுடன் வாழ்தலையும் கண்டபிறகும் அவர்களோடு ஓரிடத்திலே வாழ்தலைப் பொறுத்திருப்பர். –தலைவன்.திங்கள், 11 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :903


திருக்குறள் -சிறப்புரை :903
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.----- ௯0௩
ஆண்மகனுக்குரிய இயல்புக்கு மாறாக மனைவியிடத்து அஞ்சி நடக்கும் தன்மை ஒருவனிடத்தில் இருக்குமானால் அவன் நல்லவர்கள் முன் தோன்றுவதற்கே வெட்கப்படுவான்.
“ மாண்ட மனையாளை இல்லாதான் இல்லகம்
காண்டற்கு அரியது ஓர் காடு.” –நாலடியார்.
விரும்பத்தக்க பண்புகளை உடைய நல்ல மனைவியைப் பெறாதவன் வீடு, கண்கொண்டு பார்க்க முடியாத ஒரு பாழும் காடாகும்.

ஞாயிறு, 10 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :902


திருக்குறள் -சிறப்புரை :902
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும். ----- ௯0௨
ஒருவன், தனக்குரிய கடமைகளைப் பேணாது, மனைவியின் பெண்மை இன்பத்தினையே விரும்பியிருப்பவன் நிலைமை,  அவனுக்குத் தலை குனிவை ஏற்படுத்தும் ; பிற ஆடவர்க்கும் வெட்கத்தைத் தரும்..
“பெண்டிரும் உண்டியும் என்று உலகில்
கொண்டோர் உறூஉம் கொள்ளாத் துன்பம்.” –சிலப்பதிகாரம்.
இவ்வுலகில் பெண்டிரும் உணவும் என்ற இரண்டு மட்டுமே இன்பம் என்று வாழ்வோர் முடிவில் அளவற்ற துன்பத்தினையே அடைவார்கள்.


சனி, 9 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :901


91. பெண்வழிச் சேறல்
திருக்குறள் -சிறப்புரை :901
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது. – ௯0௧
மனைவியிடத்து மிகுந்த காம இச்சைகொண்டு, அவள் விருப்பத்திற்கிணங்க நடக்கின்றவர் வாழ்வில் பெருமை அடைய மாட்டார். கடமையிற் சிறந்தோர் விரும்பாத பொருளும் அதுவே.
“ நீர் ஓரன்ன சாயல்
தீ ஓரன்ன உரன் அவித்தன்றே.” ---குறுந்தொகை.
தலைவியின் நீரை ஒத்த சாயல், என்னுடைய தீயை ஒத்த மன வலிமையை அவித்து விட்டது. –தலைவன்.

வெள்ளி, 8 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :900


திருக்குறள் -சிறப்புரை :900
இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.---- ௯00
மனிதருள் யாவரும் போற்றத்தக்க சிறப்புகள் உடைய சான்றோரின் சீற்றத்திற்கு ஆட்பட்டவர், எவ்வளவு பெரிய படை வலிமை பொருந்தியவரானாலும் தப்பிப் பிழைக்க முடியாது.
“மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது
அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ.”—புறநானூறு.
 தலைவனே…! மக்களைக் காக்கும் பொறுப்பினை உணராது, அன்பின்றி அறமற்ற முறையில் நீயும் நும்மை ஒத்தாரும் ஆட்சி செய்வார்களானால் எம்மைப் போன்றோர் இவ்வுலகில் பிறவாதிருத்தலே நன்று.


வியாழன், 7 ஜூன், 2018


திருக்குறள் -சிறப்புரை :899


திருக்குறள் -சிறப்புரை :899
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.---- ௮௯௯
போற்றிப் புகழத்தக்க அறிவுடைய சான்றோர் வெகுண்டெழுந்தால் நாட்டை ஆளும் அரசனாயினும் அப்பொழுதே அவன் மணிமுடி இழந்து ;அரசையும் இழந்து அழிவான்.
“ பெரிய ஓதினும் சிறிய உணராப்
பீடு இன்று பெருகிய திருவின்
பாடு இல் மன்னரைப் பாடன்மார் எமரே.” –புறநானூறு.
பலவாறு எடுத்துக்கூறினாலும் சிறிதளவாயினும் உணரும் உணர்ச்சி இல்லாத, பெருஞ் செல்வத்தைப் பெற்றுள்ள பெருமை இல்லாத மன்னர்களைப் புலவர்கள் பாடாதிருப்பார்களாக.

புதன், 6 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :898


திருக்குறள் -சிறப்புரை :898
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து. ------ ௮௯௮
நல்லொழுக்கத்தால் மலைபோல் உயர்ந்த சான்றோர்கள், தம்மை இகழ்வாரை அழிக்க நினைத்துவிட்டால் . உலகில் வளம்பல பெற்று, நிலைத்து நிற்பாராயினும் அவர்கள் கூடக் கெட்டு  அழிந்துபடுவார்கள்.
“கல்வியான் ஆய கழி நுட்பம் கல்லார்முன்
சொல்லிய நல்லவும் தீய ஆம்…” –பழமொழி.
கற்றறிந்த சான்றோர், கல்லாதாரிடத்துச் சொல்லிய நல்லனவும் தீயனவாம்.

செவ்வாய், 5 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :897


திருக்குறள் -சிறப்புரை :897
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.---- ௮௯௭
அறிவிற்சிறந்த நல்லொழுக்கமுடைய சான்றோர்,      தீயோரைச் சினந்து நோக்கின் ,  எல்லாவகையானும் சிறப்புடைய வாழ்க்கையும் அளவற்ற செல்வமும்    அவர் பெற்றிருந்தாலும் அவற்றால் யாதொரு பயனும் இல்லையாம்.
“ ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளைப்
போக்குவர் புல்லறிவினார்…” ---நாலடியார்.
அறிவற்றவர்கள் செல்வத்திலே மயங்கித் தம் வாழ்நாளை வீணே கழிப்பர்.

திங்கள், 4 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :896


திருக்குறள் -சிறப்புரை :896
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். ---- ௮௯௬
தீயால் சுடப்படினும் ஒருவேளை உயிர் பிழைத்தல் கூடும் ஆனால் நல்லொழுக்கமுள்ள பெரியோர்களுக்குத் தீமை செய்பவர்கள் ஒருகாலும் உயிர் பிழைத்தல் முடியாததாகும்.
” இம்மையால் செய்ததை இம்மையே ஆம் போலும்
உம்மையே ஆம் என்பார் ஓரார்…” – திணைமாலை நூற்றைம்பது.
ஒருவன், இப்பிறப்பின்கண் செய்த தீவினை இப்பிறப்பிலேயே அவனை அடைந்து வினைப்பயன் கொடுக்கும் ; இதனை நன்கு ஆராயாத அறிவிலிகளே மறுபிறப்பில்தான் அத்தீவினைப் பயன் கொடுக்கும் என்று கூறுவார்கள்.


ஞாயிறு, 3 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :895


திருக்குறள் -சிறப்புரை :895
யாண்டுச்சென்று  யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர். ---- ௮௯௫
(உளர் ஆகார் ; வெந் துப்பின் )
மிக்க வலிமையுடைய அரசனின் சினத்திற்கு ஆட்பட்டவர்கள் எங்கு சென்றாலும் எவ்விடத்தில் இருந்தாலும் அவர்கள் தப்பிப் பிழைக்க மாட்டார்கள்.
“ துஞ்சு புலி இடறிய சிதடன் போல
 உய்ந்தனன் பெயர்தலோ அரிதே…” --- புறநானூறு.
சோழன் நலங்கிள்ளியை எதிர்ப்போர், உறங்கும் புலியைக் காலால் இடறிய பார்வையற்றவன் போல, உயிர் பிழைத்தல் அரிது.

சனி, 2 ஜூன், 2018

திருக்குறள் -சிறப்புரை :894


திருக்குறள் -சிறப்புரை :894
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். ---- ௮௯௪
ஆற்றல் இல்லாதார் சான்றோரை இழித்தும் பழித்தும் துன்புறுத்துவது,  இறுதிக்காலத்தில் தானேவரும் இயமனை முன்னதாகவே கை தட்டி அழைப்பது போன்றதாகும்.
“ அருமை உடைய அரண் சேர்ந்தும் உய்யார்
  பெருமை உடையார் செறின்.” ----நாலடியார்.
பெருமை உடைய சான்றோர் சினந்தால், பிழை செய்தவர் புகுதற்கு அரிய கோட்டைக்குள் புகுந்தாலும் தப்பிப் பிழைத்தல் இயலாது.

வெள்ளி, 1 ஜூன், 2018

மடகாசுகர் – சல்லிக்கட்டு--4


மடகாசுகர் – சல்லிக்கட்டு--4

காளையாடல்
மடகாசுகர் பழங்குடி மக்கள் ஏறுதழுவலை “ காளையாடல்” அஃதாவது காளையைக் கட்டித்தழுவி அதனோடு நடனமாடுதல் என்று பொருளுரைக்கின்றனர். இவர்களும் காளையின் திமிலைப் பிடித்துத் தொங்கியபடியே விளையாடுகின்றனர். இளஞர்களுக்குக் காளையோடுஆடச்  சிறப்பான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்மகனும் தன் வாழ்நாளில் ஏறு தழுவலை நிகழ்த்தியே ஆகவேண்டும். சிறுவர்களுக்குப் பத்து வயது தொடங்கிய நாளிலிருந்து காளையத் தழுவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. சேறு நிறைந்த வயலில் காளைகளைவிட்டுச் சிறுவர்கள் களமிறக்கப்படுகிறார்கள். சேறு நிறைந்த வயல், காளைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதால் சிறுவர்கள் எளிமையாகப் பயிற்சி பெறுகின்றனர்.
நிகழ்த்துக் களம்
ஏறுதழுவல், வட்டமான களத்தில் சுற்றிலும் பாறைக்கற்கள்நடப்பட்டு மண்கொண்டு மெழுகி வைத்துள்ளனர். இக்களம் நிலையானது.வாடிவாசல் போன்ற ஒரு வழியும் உண்டு. ஒரே நேரத்தில் ஐந்தாறு காளைகளை உள்ளேவிட்டு ஏழெட்டு இளைஞர்கள் களத்தில் இறங்கிக் காளையின் திமிலைப் பிடித்து, காளை துள்ளிக் குதித்துச் சுற்றி சுற்றி ஓடிவர, இளஞர்களும் காளையை விடாது பற்றிச் சுற்றிவருகின்றனர். ஒரு காளைக்கு ஓர் இளைஞர் என்ற விதியும் உண்டு. காளையைத் தழுவும் இளைஞர்கள் களத்தில் இறங்குவதற்குமுன் தலைமைப் பூசாரியிடம் அருள் பெறுகின்றனர். ஓர் ஆண்மகணை ஆண்மகன் என்று அடையாளப்படுத்துவதற்கே ஏறுதழுவல் நடபெறுகிறது. இவ்விடத்தில் மேற்குறித்துள்ள சங்க இலக்கியச் செய்யுட்களை நோக்குங்கள்.
முடிவுரை
 சல்லிக்கட்டு, தென் குமரியில் கடல்கோள் நிகழ்வதற்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்துவந்துள்ளது என்றே  கொள்ளவேண்டியுள்ளது. இதனால் தமிழர்தம் வரலாறு, கடல்கொண்ட தென்னாட்டில் தோன்றி, உலகம் முழுதும் பரவிக்கிடக்கிறது என்ற உண்மையும் தெளிவாகிறது.


திருக்குறள் -சிறப்புரை :893


திருக்குறள் -சிறப்புரை :893
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.---  ௮௯
செய்ய விரும்பிய செயல் கெட்டுப்போக வேண்டுமானால் அறிவுத்திறன் மிக்க பெரியாரிடத்தில் அறிவுரை பெறாமல் செய்க ; தனக்கே கேடு வரவேண்டுமானால் அப்பெரியாரை இகழ்ந்து விட்டுப்போ.
“தேவரே கற்றவர் கல்லாதார் தேருங்கால்
பூதரே முன் பொருள் செய்யாதார் ஆதரே. ---சிறுபஞ்சமூலம்.
கற்றவர் உயர்ந்தோர் ; கல்லாதார் பூதபசாசுகள் ; இளமையிலேயே பொருள் தேடாதவர் அறிவிலார்.