ஞாயிறு, 31 மார்ச், 2024

தமிழாய்வுத் தடங்கள் -9 – இசை மருத்துவம் (Music that heals)

 தமிழாய்வுத் தடங்கள் -9 – இசை மருத்துவம் (Music that heals)


தமிழாய்வுத் தடங்கள் -9 – இசை மருத்துவம் (Music that heals)

இசை மருத்துவம்இசை மருத்துவம் இன்று நேற்றல்ல தொல்பழங்காலந்தொட்டே தமிழர்கள் இசை மருத்துவத்தைக் கையாண்டுள்ளனர்இன்றுங்கூட ஊர்ப்புறங்களில் அம்மை நோய்க்கு மாரியம்மன் தாலாட்டுப் பாடல்களைப் பாடுவதும் வீட்டின் முன் வேப்பிலைசெருகி வைத்தலும் உண்டு.இன்று அறிவியல் ஆய்வில் இம்மருத்துவத்தின் சிறப்பு வளர்ந்துவருகிறது. இசை மன நோய் மருத்துவத்தில் சிறப்பிடம் பெற்றுவருகிறது. குறிப்பாக மன வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மனக்கவலையால் வாடும் முதியவர்கள், பொதுவான மனவளக்கலை இன்னபிற  நோய்களுக்கும் மருந்தாக இசை அமைகிறது.

 இசைக்கு மயங்காத உயிர்கள் உண்டோ..?

சங்கப்புலவர் பார்வையில்:

பேராசான் வள்ளுவர் திருக்குறளில் மருந்து என்றொரு அதிகாரத்தில் ….

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல் .” என்கிறார்.

சங்கப்புலவர் “நீரும் சோறும் மருந்தாகும்” என்கிறார் (நற்றிணை.53.)

”போரில் பெரும் புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்வோர், மனையைத் தூய்மை செய்து ஒப்பனை செய்வதும் இனிய இசை பாடுதலும் நறிய மணப்பொருள்களைப் புகைத்து எங்கும் நறுமணம் கமழுமாறு செய்வதும் பண்டைய தமிழ் மக்கள் மரபு.”(ஒளவை சு. துரைசாமி.)

“தீங்கனி இரவமொடு வேன்புமனைச் செரீஇ

வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்

கைபயப் பெயர்த்து மையிழு திழகி

ஐயவி சிதறி யாம்ப லூதி

இசைமணி யெறிந்து காஞ்சி பாடி

நெடுநகர் வரைப்பிற் கடிநறை  புகைஇ

………………………………………… (அரிசில் கிழார், புறநானூறு: 281 ,1-6)




சனி, 30 மார்ச், 2024

தமிழாய்வுத் தடங்கள் -8- அன்றில்.

 

தமிழாய்வுத் தடங்கள் -8- அன்றில்

 

அன்றில் பறவை:” இருவாய்க் குருவி ; இப்பறவை நீண்ட காலம் வாழக்கூடியது. வாழ்நாள் ஐம்பது ஆண்டுகள். இந்தப்பறவை ஒரு பேரலகின் மற்றொரு பேரலகைத் தலைகீழாகக் கவிழ்த்து ஒட்டினாற்போல் இருப்பதால்தான் தமிழில் இருவாய்க் குருவி என்னும் விந்தைப் பெயரால் அழைக்கப்படுகிறது. ஆண், பெண் சேர்ந்துவாழும் பெரும்பாலும் அந்த இணை சாகும்வரை பிரிவது கிடையாது. இந்திய சாம்பல் இருவாச்சி (Indian Grey Hornbill )இஃது ஒரு மரம் வாழ் பறவையாகும்.

சங்கப்புலவர் பார்வையில்:

“நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்

இறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு

தடவின் ஓங்குசினௌக் கட்சியில்… “ – மதுரை மருதனிள நாகனார், குறுந்தொகை 160.

தோழி, நெருப்பைப் போன்ற சிவந்த தலையையுடைய ஆண் அன்றில் பறவை, இறால்மீனைப் போன்ற வளைந்த அலகினையுடைய தன் பெண் அன்றிலுடன் தடா மரத்தின் உயர்ந்த கிளையின்கண் உள்ள தன் கூட்டிலிருந்து தம் காதலரைப் பிரிந்தோர்க்குச் செயலறவு தோன்றும்படி ஒலிக்கும். அன்றில் ஆணும் பெண்ணுமாய் இணைந்து வாழ்வதால் புணர் அன்றில் எனப்பட்டது.

( மேலும் காண்க: நற்றிணை, 303 , 152, 124; குறிஞ்சிப்பாட்டு, 219-220.)

 

வியாழன், 28 மார்ச், 2024

தமிழாய்வுத் தடங்கள் -7-இமய மலை உச்சியில் பறக்கும் அன்னப்பறவை. Highest Flying Bird Found ; Can Scale Himalaya.

 

தமிழாய்வுத் தடங்கள் -7-இமய மலை உச்சியில் பறக்கும் அன்னப்பறவை.

Highest Flying Bird Found ; Can Scale Himalaya.



””நிலந்தாழ் மருங்கின் தெண்கடல் மேய்ந்த

இலங்குமென் தூவிச் செங்கால் அன்னம்

பொன்படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி

வானரமகளிர்க்கு மேவல் ஆகும்

வளராப் பார்ப்பிற்கு அலகி இரை ஒய்யும்.” (பரணர், நற்றிணை:356.)

(மேலும் காண்க : கலித்தொகை: 92. புறநானூறு: 67.)

 

நிலம் தாழ்ந்த இடத்தையுடைய, தெளிவான கடல் அருகில் அழகிய சிறகையும் சிவந்த காலினையும் உடைய அன்னப்பறவை இரை தேடியது. இமயமலையின் உச்சியில் இருக்கும் வானர மகளிர் மகிழ்ந்து விளையாடுவதற்குரிய இடத்தில் வளராத இளம் குஞ்சுகளுக்கு, அன்னம் தன் வாயில் சேமித்த இரைகளைக் கொண்டுசென்று கொடுக்கும்.

பரணர், அன்னப்பறவையின் தோற்றத்தை மிக நுண்மையாக நோக்கிப் பதிவு செய்துள்ளார். (மேலும் காண்க : கலித்தொகை: 92. புறநானூறு: 67.)

 வாண் வெளியில் மிக உயரத்தில் உயிர்வளி மிகக் குறைவாகவே கிடைக்கும் நிலையிலும் அன்னப்பறவை அதிவேகத்தில் பறக்கும் ஆற்றலுடையது என்று அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Highest Flying Bird Found ; Can Scale Himalaya.

The bar – headed goose can reach nearly 21,120 feet, a new study shows.

By KerThan, for National Geographic News.

The world’s highest flying bird is an Asian goose that can fly up and over tha Himalaya in only about eight hours, a new study finds.

 


புதன், 27 மார்ச், 2024

தமிழாய்வுத் தடங்கள் -6.ஐந்தறிவில் ஆறறிவு : குரங்கு.

 தமிழாய்வுத் தடங்கள் -6.ஐந்தறிவில் ஆறறிவு : குரங்கு.

கிளி, யானை, குரங்கு முதலியன ஆறறிவு உடையன என இளம்பூரணர் குறித்துள்ளார்.

ஐந்தறிவில் ஆறறிவு : குரங்கு.

கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்

கைம்மை உய்யாக் காமர் மந்தி

கல்லா வன்பறழ் கிளை முதற் சேர்த்தி

ஒங்குவரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்.” (குறுந்தொகை:69.)

 

ஆண் குரங்கு இறந்தது அறிந்து, கைம்மைத் துன்பத்தைப் போக்கமாட்டாத விருப்பத்தையுடைய பெண் குரங்கானது, மரமேறுதல் முதலிய தொழிலைக் கல்லாத வலிய குட்டியை, சுற்றத்தாரிடம் ஒப்படைத்து, ஓங்கியமலைப் பக்கத்தில் தாவி உயிரை மாய்த்துக்கொள்ளும். என்று குரங்கின் ஆறறிவுத் திறனைக் காட்டியுள்ளார் புலவர்.

காட்டில் விலங்குகள் நீருண்ணக் கிடக்கும் நீர் நிலை வற்றிப்போக அதில் கிடக்கும் முதலைகள் சேறுடன் கலங்கிய குட்டையில் உழன்று கொண்டிருக்க, மான், குரங்கு முதலிய விலங்குகள் முதலைக்கு அஞ்சி உயிரைப் பணையம் வைத்து நீர் அருந்த முயல…… குரங்கு தன்னையும் தன் இனத்தையும் காப்பாற்றிக்கொண்டு நீர் அருந்துவதற்கு முதலையின் தாக்குதலிலிருந்து தப்பிப் பிழைக்க, சேற்று நீர்க் குட்டையின் சற்றுத் தொலைவில் ஊற்று தோண்டி நீர் அருந்திய செயல் குரங்கு ஆறறிவு உடையது என்பதற்குத் தக்க சான்றாகும். (Nat-Geo. Tamil Channel. 27/01/ 17.)




செவ்வாய், 26 மார்ச், 2024

 

தமிழாய்வுத் தடங்கள் -5.ஐந்தறிவில் ஆறறிவு : யானை.

மேற்கு வங்க மாநிலம் புரிலியா ஊரில் ஒரு காட்டுனை கடந்த ஆண்டு மூவரைக்  கொன்றது. இவ்வாண்டு ஓர் ஏழையின் வீட்டை இடித்துத் தள்ளியது. வீட்டின் இடிபாடுகளிடையே ஒரு பத்து மாத குழந்தையின் அழுகுரல் கேட்ட யானை இடிபாடுகளைப் மெல்ல மெல்ல அகற்றி குழந்தையைக் காப்பாற்றிவிட்டு அவ்விடத்தைவிட்டுச் சென்று விட்டது. யானையின் ஆறறிவுத் திறனை அறிய மேலும் காண்க: அகநானூறு, 392. புறநானூறு, 17.



திங்கள், 25 மார்ச், 2024

 





தமிழாய்வுத் தடங்கள் -4

மக்கள் தாமே ஆறறி வுயிரே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.”  (தொல்.1524)

ஒருசார் விலங்கும் உளவென மொழிப.” (தொல்.1525).

ஆறாவது அறிவாகியமனம்என்னும் சிறப்பினைப்பெற்ற மக்கள் ஆறறிவு உடையோர் ஆவர்,  “பிறவும் என்றதனால், குரங்கு முதலாகிய விலங்கினுள் அறிவுடையன எனப்படும்மன உணர்வு உடையன உளவாயின் அவையும் ஈண்டு ஆறறிவுயிராய் அடங்கும்.”(பேராசிரியர்)

விலங்கினுள் ஒரு சாரனவும் ஆறறிவுயிராமென்றவாறு ; அவையாவன கிளியுங் குரங்கும் யானையும் முதலாயின.” (இளம்பூரணர்.)

 ஐந்தறிவில் ஆறறிவு - கிளி





ஞாயிறு, 24 மார்ச், 2024

 தமிழாய்வுத் தடங்கள் -3. “பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி ; வாலெயிறு ஊறிய நீர்.”(குறள்: 1121.)



சனி, 23 மார்ச், 2024

தமிழாய்வுத் தடங்கள் - 2 திருக்குறள் அறிவியல்.

  தமிழாய்வுத் தடங்கள் - 2 திருக்குறள் அறிவியல்.

“சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 

ஏமப் புணையைச் சுடும். குறள் : 303

 


திங்கள், 18 மார்ச், 2024

சனி, 16 மார்ச், 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…100.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…100.

..

உலகநாதர் இயற்றிய உலகநீதி

நெஞ்சே…..!

”ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி

        அருந்தமிழால் ஆறுமுகனைப் பாட வேண்டி

ஓதுவித்த வாசகத்தால் உலக நாதன்

        உண்மையாய்ப் பாடிவைத்த உலகநீதி

காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்

        கருத்துடனே நாடோறும் களிப்பி னோடு

போதமுற்று மிகவாழ்ந்து புகழுந் தேடிப்

        பூலோகம் உள்ளளவும் வாழ்வார் தாமே.”

நெஞ்சே…!

தமிழே அன்னையாய் விளங்கப் பற்பல வகையால் சான்றோர் நூல்களைக் கற்று, அவை கூறும் பொருளும் முழுதறிந்து, அருந்தமிழால் ஆறுமுகனைப் பாட விரும்பி “உலகநீதி’  என்னும் நூலை இயற்றினேன்.

 ”உலகநாதன்” எனப் பெயர்கொண்ட யான் பாடிய இந்நூலைக் கற்றவர்களும்,   களிப்புடன்  பிறர் பாடும்பொழுது  காது கொடுத்துக் கேட்டவர்களும் நல்லறிவும் நலம்ஓங்கும் நல் வாழ்வும்  பெற்று  மகிழ்ச்சியுடன் புகழ் விளங்க  நீடூழி வாழ்வார்கள்.   

…………………………….முற்றிற்று……………………………………………..

வெள்ளி, 15 மார்ச், 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…99..

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…99..

உலகநாதர் இயற்றிய உலகநீதி

நெஞ்சே…..!

“கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்

        கொண்டைமேல் பூத் தெரிய முடிக்க வேண்டாம்

தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்

        துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்

வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்

        வெற்றுயுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்

மாறான குறவருடை வள்ளி பங்கன்

        மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.”

நெஞ்சே….!

ஒரு வீட்டில் ஒற்றுமையாய் வாழும் நல்ல குடும்பத்தை இல்லாததைச் சொல்லி அவர்களுக்குள்ளே வேற்றுமையை வளர்த்துப் பிரித்துக் கொடுத்துவிட வேண்டாம்.

 

மகளிர் பூச் சூடும் முறையறிந்து பூச் சூட வேண்டும் ;  எவரும் ஏறிட்டுப் பார்த்து ஏளனம் செய்யாதவாறு கொண்டைக்கு மேல் பூத் தெரியும்படி முடிய வேண்டாம்.

 ஊரில் ஒழுக்கமுள்ளவனாக வாழ்வதே பெற்றோர்க்கு நாம்  பெருமைப்படுத்த செய்ய வேண்டிய செயலாகும் . அதனை விடுத்துப் தேவையில்லாமல் பிறர்மீது பழியைச் சுமத்தி அல்லல் பட்டு அலைய வேண்டாம்.

 

கேடுகெட்ட குணமுடைய மூர்க்கர்களோடு  நட்புடன் பழக வேண்டாம்.

 

மக்கள் உண்மையான பக்தியுடன் வணங்கும்  பெருமை மிகுந்த தெய்வத்தை இகழ்ந்து பேசிப் பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

 

வாழ்வாங்கு வாழ்ந்து ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் பெரியோர்களை வெறுத்துப் பேச வேண்டாம்.

 

மாறுபாடு உடைய சூழலில் பிறந்து சிறந்து விளங்கும் பெண்ணாகிய வள்ளியின் கணவனாகிய முருகனைப் போற்றி வாழ்த்தி வணங்குவாயாக.

புதன், 6 மார்ச், 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…98..

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…98..

உலகநாதர் இயற்றிய உலகநீதி

நெஞ்சே…..!

”புறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்

        வாதாடி வழக்கழிவு செய்ய வேண்டாம்

திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்

        தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்

இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

        ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்

குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்

        மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.”

 

கண்டு ஒன்று கணாமல் ஒன்று  என்று புறம் பேசும் மூடர்களோடு சேர வேண்டாம்.

வேண்டாத வம்புகளில் சிக்கி  விதண்டாவாதம் செய்து குடிப்பெருமையை அழித்துவிடாதே.

எல்லாம் எனக்குத் தெரியும் என்று திமிராகப் பேசித் திரிந்து, எவரையும் மதிக்காது அடக்கமின்றி அலைந்து கலகம் செய்ய வேண்டாம்.

உயிர்கள்  மீது கருணைகொண்டு ஒழுக்கமுடன் வாழ இறைவனை நாள்தோறும் வழிபட மறக்க வேண்டாம்.

விளையாட்டாகக்கூடப் பொய்சொல்லக்கூடாது; ஒருவேளை உயிரே போகும் நிலைவரினும் அந்நிலையிலும் பொய் சொல்ல வேண்டாம்.

உன்னை இகழ்ந்து பேசியவர் உன் நெருங்கிய உறவினராயினும்   அவருடன் தன் மானம் இழந்து உறவு கொள்ள வேண்டாம்.

  குறி சொல்லும் குறவர் குடியில் பிறந்த பெண்ணின் பெருந்தகையாள் வள்ளியின் கணவனாகிய முருகப்பெருமானின் பெயரைச் சொல்லி நாள்தோறும் வழிபடுவாயாக.

 

செவ்வாய், 5 மார்ச், 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…97.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…97.

உலகநாதர் இயற்றிய உலகநீதி

நெஞ்சே…..!

“சேராத இடந்தனிலே சேர வேண்டாம்

        செய்ந்நன்றி ஒரு நாளும் மறக்க வேண்டாம்

ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்

        உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்

பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்

        பிணைபட்டுத் துணைபேசித் திரிய வேண்டாம்

வாராரும் குறவருடை வள்ளி பங்கன்

        மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.”

நெஞ்சே…..!

சேரத்தகாதவர்களோடு நட்புக் கொள்ள வேண்டாம்; சிற்றினம் சேராமை நன்று.

ஒருவர் செய்த உதவியை எந்நாளும் மறக்க வேண்டாம் ; செய்ந்நன்றி கொன்ற குற்றத்திற்கு ஆட்படாதே.

ஊராரைப் புரிந்து கொள்லாமல் ஒருவரைப்பற்றி இன்னொருவரிடம் கோள் மூட்டி ஊராரைப் பகைத்துக் கொள்ளாதே.

 வாழ்க்கையில் நன்மை தீமைகளில் உடன் நிற்கும் பண்புடைய உற்றார், உறவினர்களை மதித்துப் போற்றாது இழிவாகப் பேச வேண்டாம்.

பெயர் விளங்கும்படியான செயல்களைச் செய்யத் தவற வேண்டாம்.

ஆழம் தெரியாமல் காலை விடுவது போன்று நல்லவர் என நினைத்துப் பொறுப்பேற்று மாட்டிக்கொண்டு அலைந்து அல்லல்பட வேண்டாம்.

 பெருமை பொருந்திய குறவர் குலமகள் வள்ளியின் கணவன் முருகனை வணங்கி வாழ்த்துவாயாக.

 

திங்கள், 4 மார்ச், 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…96.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…96.

உலகநாதர் இயற்றிய உலகநீதி

நெஞ்சே…..!

“ கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்

       கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்

பொருவார்தம் போர்க்களத்தில் போகவேண்டாம்

       பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்

இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்

       எளியாரை எதிரியிட்டுக் கொள்ள வேண்டாம்

குருகுஆரும் புனம் காக்கும் ஏழை பங்கன்

       குமரவேல் பாதத்தைக் கூறாய் நெஞ்சே.”

எண்ணித்துணிக கருமம் என்றதற்கு இணங்க எச்செயலைச் செய்யத்துணிந்தாலும் நன்றாகச் சிந்திக்காமல் செய்ய வேண்டாம்.

 அன்றே செய்திருக்கலாம் ; செய்யாமல் விட்டுவிட்டேனே…! என்று இறந்தகாலத்தை எண்ணி வருந்திப் பேச வேண்டாம்.

 ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளும் இடத்திற்குப் போக வேண்டாம்.

உனக்கு உரிமையில்லாத பொது இடத்தைக் கள்ளத்தனமாகக் கவர்ந்து அதில் குடியிருக்க வேண்டாம்.

ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உயர்ந்த ஒழுக்கத்தைக் கைவிட்டு இரண்டாவதாக ஒருத்தியை மனைவியாக்கிக் கொள்ள வேண்டாம்.

 தன் மானத்துடன் வாழும்  எளியவர்களை  அவர்கள் ஏதும் இல்லாத ஏழைகள்தானே என்று இழிவாக நினைத்து அவர்களைப் பகைத்துக் கொள்ளாதே; சாது மிரண்டால் காடு கொள்ளாது.

 நெஞ்சே….!பறவைகள் நிறைந்த தினைப்புனத்தைக் காக்கும் வள்ளியின் கணவனாகிய முருகனின் திருவடியைப்புகழ்ந்து போற்றிச் செல்வாயாக.

ஞாயிறு, 3 மார்ச், 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…95.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…95.

உலகநாதர் இயற்றிய உலகநீதி

நெஞ்சே…..!

”வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்

        மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்

மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்

        முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்

வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்

        வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்

சேர்த்த புகழாளனொரு வள்ளி பங்கன்

        திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே.”

நெஞ்சே…..!

வேலையற்ற வீணர்களின் பேச்சைக்கேட்டுத் திரிய வேண்டாம்.

உற்றார் உறவினர், எவராயினும் உன்னை மதிக்கவில்லை என்றால் அவர் வீட்டு வாசலை மிதிக்காதே.

அறிவிற் சிறந்த பெரியோர் கூறும் அறிவுரைகளை ஒருபோதும் மறக்க வேண்டாம்.

எதற்கெடுத்தாலும் கோபம் கொண்டு கடிந்து கொள்வாரோடு நட்புடன் பழக வேண்டாம்.

அறிவூட்டும் ஆசிரியரின் ஊதியத்தைக் காலம் தாழ்த்தாமல் கொடுத்துவிட  மறக்க வேண்டாம்.

வழிப்பறி செய்யும் கயவர்களோடு  நட்புக் கொள்ள வேண்டாம்.

சிறந்த புகழ் உடையவனும் ஒப்பற்ற வள்ளியின் கணவனுமாகிய முருகனின்  அருள்திறத்தை நாளும் சொல்லி மகிழ்வாயாக.

சனி, 2 மார்ச், 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…94.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…94.

உலகநாதர் இயற்றிய உலகநீதி

நெஞ்சே…..!

“வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்

        மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்

வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்

        வெஞ்சமரில் புறங்கொடுத்து மீள வேண்டாம்

தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்

        தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

வாழ்வான குறவருடை வள்ளி பங்கன்

        மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

 

நெஞ்சே…! மனைவியாக வாழவந்த பெண்ணை வாழவிடாமல் செய்துவிடாதே.

கட்டிய மனைவியிடம் வம்பளந்து குறைகளைப் பெரிதுபடுத்திக் குற்றம் சொல்லாதே.

 கண்ணிருந்தும் குருடனாகி தீவினைகளைச் செய்து படுகுழியில் வீழ்ந்து அழிய வேண்டாம்.

 வீரனாகப் போர்க்களம் புகுந்து கோழையாகப் புறமுதுகிட்டுத் திரும்பி வர வேண்டாம்.

 பழி, பாவங்களுக்கு அஞ்சாத கேடுகெட்டவர்களோடு சேர வேண்டாம். 

எவரையும் எத்திப் பிழைக்காது மானம் காத்து உழைத்து வாழும் ஏழை எளியவர்களை இகழ்ந்து பேச வேண்டாம்.

 ஒழுக்கத்தைப் பேணி வாழ்ந்துவரும் குறவர் குல மகளான வள்ளியின் கணவன் முருகனைப் போற்றி வணங்குவாயாக.

 

வெள்ளி, 1 மார்ச், 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…93.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…93.

உலகநாதர் இயற்றிய உலகநீதி

நெஞ்சே….!

“குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்

        கொலை களவு செய்வாரோடு இணங்க வேண்டாம்

கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்

        கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்

கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்

        கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

மற்றுநிகர் இல்லாத வள்ளி பங்கன்

        மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.”

தன் குற்றம் மறைத்து பிறர் குற்றங்களைப் பலரிடத்தும் சென்று சொல்லாதே. 

கொலை, களவு இன்னபிற கொடும் குற்றச் செயல்கள் செய்பவரோடு சேர்ந்து 

இருக்காதே. கற்பொழுக்கம் பேணும் பெண்டிரைக் கண்டு காம வயப்படாதே. 

நாட்டை ஆளும் அரசனே அனைவர்க்கும் முதல்வர் ஆவார் என்பதைக் கருத்தில் 

கொண்டு அரசரோடு எதிர்வாதம் செய்யாதே. கோயில் இல்லா ஊரில் 

குடியிருக்காதே. ஈடுஇணையில்லாத ஆற்றல் உடைய வள்ளியின் கணவனாகிய 

முருகனை வணங்குவாயாக.