வெள்ளி, 28 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :529

திருக்குறள் – சிறப்புரை :529
தமராகித் தற்துறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும். ----
  தமக்குச் சுற்றமாக இருந்தவர் தம்மைவிட்டு நீங்கிச் சென்றாராயினும் பின்னர் அவ்வருத்தம் நீங்கித் தாமேவந்து கூடிக்கொள்வர். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லையே.”
” பைஆர் அகல் அல்குல் பைந்தொடி எக்காலும்
 செய்யார் எனினும் தமர் செய்வர் பெய்யுமாம்
 பெய்யாது எனினும் மழை.” – பழமொழி.

பாம்பின் படம் ஒத்த அகன்ற அல்குலையும் பொன் வளையலையும் உடையாய்,  மழை பருவத்தில் பெய்யவில்லையானாலும் பிறகேனும் பெய்யும் அதுபோல, எப்பொழுதும் எதுவும் செய்யார் என்று எண்ணியிருந்தாலும் உற்ற நேரத்தில் உறவினரே உதவி செய்ய வல்லார்.

வியாழன், 27 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :528

திருக்குறள் – சிறப்புரை :528
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். ---
வேந்தன், எல்லோரையும் பொதுவாக நோக்காது  அவரவர் தகுதி அறிந்து சிறப்புச் செய்தால், அச்சிறப்பினை எதிர்நோக்கிச் சுற்றமாகச் சூழ்ந்து வாழும்  சான்றோர் பலராவர்.
“ பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே” – புறநானூறு.

வேந்தே (மலையமான் திருமுடிக்காரி) புலவர்தம் புலமைத்திறம் காணாது எல்லோரையும் பொதுவாக நோக்குதலைத் தவிர்ப்பாயாக. புலமைத்திறம் அறிந்து போற்றுக.

புதன், 26 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :527

திருக்குறள் – சிறப்புரை :527
காக்கை கரவா கரைந்துன்னும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள. ---
காகம், கிடைத்தவற்றை மறைத்துத் தான் மட்டும் உண்ணும் வழக்கம் உடையதன்று ;  தன் இனத்தைக் கூவி அழைத்து உண்ணும் பண்புடையது.  சுற்றம் சூழ வாழும் அத்தகைய பண்புடையோர்க்கே ஆக்கமும்  உளதாகும்.
“ பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல்பட
அகல் அங்காடி அசைநிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை “ --- நற்றிணை.
வந்த விருந்தினரைப் போற்றுவதற்காகப் பொன்னாலாகிய தொடியுடைய மகளிர் உணவு சமைத்தனர், அவ்வுணவில் ஒரு கவளம் எடுத்து முற்றத்தில் பலியாக இட்டனர். கொக்கின் நகம் போன்ற சோற்றைப் பசிய கண்ணையுடைய காக்கை உண்ணும்.


செவ்வாய், 25 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :526

திருக்குறள் – சிறப்புரை :526
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல். ---
ஒருவன் பெரும் கொடையாளியாகவும் சினம் கொள்வதை விரும்பாதவனாகவும் இருப்பானாகில் அவனைவிடச் சிறந்த சுற்றம் உடையவர், இவ்வுலகில் வேறு எவரும் இலர்.
“ ஈரநல் மொழி இரவலர்க்கு ஈந்த
 அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல் தொடித் தடக்கைக் காரி..—சிறுபாணாற்றுப்படை.

பரிசில் பெற வருவோரிடம் இனிமையாகப் பேசிக் கொடை வழங்கி, ஒளி பொருந்தியதும் பகைவர்க்கு அச்சத்தைத் தரக்கூடியதுமான வேலைத் தாங்கிய, கழல்தொடியணிந்த கையை உடையவன் காரி.

திங்கள், 24 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :525

திருக்குறள் – சிறப்புரை :525
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும். ----
 கொடுத்து மகிழ்தலோடு இன்சொல் வழங்கும் ஆற்றலும் உடைய ஒருவனை  வழி வழியாகச் சுற்றத்தினர் சூழ்ந்து நிற்பர்.
“ ஒன்றுபோல் உள்நெகிழ்ந்து ஈயின் சிறிது எனினும்
  குன்றுபோல் கூடும் பயன்:” --- சிறுபஞ்சமூலம்.
 இல்லார்க்கு மனம் இரங்கிக் கொடுக்கும் பொருள் சிறிதாயினும் அதனால் வரும் பயன் குன்றுபோல் மிகப் பெரிதாம்.


ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :524

திருக்குறள் – சிறப்புரை :524
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன். ----
உற்றார், உறவினர், நண்பராகிய சுற்றத்தினர் சூழ்ந்து கொள்ளுமாறு அன்போடு இன்புற்று வாழ்வதே, ஒருவன் செல்வத்தைப் பெற்றதால் பெற்ற பயனாகும்.
“ உப்பு இலிப் புற்கை உயிர்போல் கிளைஞர் மாட்டு
 எக்கலத்தானும் இனிது.: -- நாலடியார்.

 தன்னை உயிர்போல நேசிக்கின்ற உறவினர் இடும் உப்பில்லாத புல்லரிசிக் கூழ், எந்தப் பாத்திரத்தில் கிடைப்பதாயினும் அது இனிமை உடையதாம். 

சனி, 22 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :523

திருக்குறள் – சிறப்புரை :523
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. -----
சுற்றத்தினரோடு மகிழ்ச்சியுடன் கலந்து உரையாடி உறவாட வாய்ப்பில்லாதவன் வாழ்க்கை, கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போன்று -- பயனற்றதாம்.
“ கெட்டார்க்கு நட்டாரோ இல்” – பழமொழி.

வாழ்ந்து கெட்டவர்க்கு நட்புடையார் என்று ஒருவரும் இல்லை.