வியாழன், 31 மார்ச், 2022

தன்னேரிலாத தமிழ் –425 : பெருமழைப் புலவர் உரைவளம்.

 

தன்னேரிலாத தமிழ் –425 : பெருமழைப் புலவர் உரைவளம்.

 சொற்பொருள் அறிவோம்.

“கம்மென.” நறுமணங் குறிக்கும் குறிப்பு மொழி.

 விரைவுக் குறிப்பென்று கொண்டு கம்மெனக் கழிந்தனராயின் என இயைப்பர்பழைய உரையாசிரியர். எம்மொடு கழிபவர் விரையக் கழிதல் வேண்டும் என்று தலைவி கூறவேண்டாமையின் அதற்கு யாம் கூறுவதே பொருத்தமான பொருளாதலறிக.” ----- ---ஒளவையார்,அகநானூறு:11.

செவ்வாய், 29 மார்ச், 2022

 தன்னேரிலாத தமிழ் –424: பெருமழைப்புலவர் உரை வளம்.

” ஆகவன முலை யரும்பிய சுணங்கின்

மாசில் கற்பின் புதவன் றாயென”  அகம்.

ஆகம் - மார்பு, சுணங்கிந்தாய்- கற்பின் தாய், புதல்வன் தாய் எனத் தனித்தனி கூட்டுக. ஆகவனமுலை அரும்பிய சுணங்கின் தாய் என்றது எழில் நலம் பாராட்டியது. கற்பின் தாய் என்றது குணநலம் பாராட்டியது, புதல்வன் தாய் என்றது உரிமைச் சிறப்புப் பாராட்டியது என்க.”



ஞாயிறு, 27 மார்ச், 2022

தன்னேரிலாத தமிழ் –423: பெண்டிர்க்குரிய குணநலன்கள்..!

 

தன்னேரிலாத தமிழ் –423: பெண்டிர்க்குரிய குணநலன்கள்..!

பெண்ணிற் சிறந்தாளுக்கு…..

“இனித் தலைமகட்கு நாண், மடம், அச்சம், பயிப்பென்பன குணம். அவற்றுள், நாணென்பது பெண்டிர்க்கு இயல்பாக உளதொரு தன்மை. மடமென்பது கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை. அச்சமென்பது பெண்மையிற் தான் காணப்படாதோர்  பொருள் கண்டவிடத்து அஞ்சுவது. பயிர்ப்பென்பது பயிலாத பொருட்கண் அருவருத்து நிற்கும் நிலைமை. இந்நான்மையும் புனல் ஓடுவழிப் புல் சாய்ந்தாற்போல வேட்கையான் மீதூரப்பட்டுச் சாய்ந்து கிடக்கும்.” (கொளுத்தல் – கற்பித்தல்)

 

சனி, 26 மார்ச், 2022

தன்னேரிலாத தமிழ் –422: “சமக்கிருதம்” தமிழின் தொன்மை அறிவோம்.

 

தன்னேரிலாத தமிழ் –422:  “சமக்கிருதம்” தமிழின் தொன்மை அறிவோம்.

“சமக்கிருதம் என்பதற்கு நன்றாகச் செய்யப்பட்டது என்பது பொருள். சமக்கிருதத்துக்கு வட தமிழ் என்பது இன்னொரு பெயர்.வடக்கே அதிக பிராகிருதச் சொற்களை ஏற்று வழங்கிய தமிழே நன்றாகச் செய்யப்பட்டுச் சமக்கிருதம் என்னும் பெயர் பெற்றதென்பது அறிஞர் கருத்து. சட்டாம்பி சாமி என்னும் சிறந்த ஆராய்ச்சி அறிஞர், சமக்கிருதத்துக்கு அடிப்படை தமிழே எனக்கூறியுள்ளார்.” – அறிஞர் ந.சி.கந்தையாபிள்ளை.தமிழ் ஆராய்ச்சி, ப.7.

வெள்ளி, 25 மார்ச், 2022

 

தன்னேரிலாத தமிழ் –421: சிவனைத் தமிழால் வழிபடு....!

சிவனைத் தமிழால் வழிபடு....!

வில்வம் அறுக்குக்கு ஒவ்வா மென்மலர்கள் நால்வர் எனும்

நல்ல அன்பர் சொற்கு ஒவ்வா நான் மறைகள் மெல்லிய நல்லாய்

ஆமந்திரம் எவையும் ஐந்தெழுத்தை ஒவ்வாவே

சோமசுந்தரற்கு என்றே சொல்.” –நீதி வெண்பா.

சோமசுந்தரக் கடவுளுக்கு எல்லா மலர்களுமே வில்வத்திற்கும் அறுக்குக்கும் இணையாக மாட்டா ; ரிக், யசுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் இயற்றிய தேவார திருவாசகங்களுக்கு இணையாக மாட்டா; மந்திரம் எதுவும் திரு ஐந்தெழுத்திற்கு (நமசிவாயா) ஒப்பாகா. எனவே வில்வமும் அறுகும் கொண்டு வழிபாடு செய்து தேவார திருவாசகங்கள் ஓதி, ஐந்தெழுத்தை நினைந்து இறைவணை வணங்குதல் வேண்டும்.

வியாழன், 24 மார்ச், 2022

தன்னேரிலாத தமிழ் –420: குறள் கூறும் ”பொருள்” பெறுக

 

தன்னேரிலாத தமிழ் –420: குறள் கூறும்பொருள்பெறுக

463

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை

ஊக்கார் அறிவுடை யார்.


மேலும் மேலும் செல்வம் சேர்க்க வேண்டும் என்று கருதிப் போட்ட முதல் அழியத்தக்க செயல்களைச் செய்வாரை, அறிவுடையார் எவரும் ஊக்கப்படுத்த மாட்டார்கள்.


அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்

  பிறிதினால் மாண்டது எவனாம்…”பழமொழி, 271.


அறிவினால் பெருமை பெறாத ஒருவன், பிற செல்வம், குலம் முதலானவற்றால் பெருமை பெறுதல் இல்லை.

 

புதன், 23 மார்ச், 2022

திங்கள், 21 மார்ச், 2022

தன்னேரிலாத தமிழ் –419: குறள் கூறும் ”பொருள்” பெறுக

 

தன்னேரிலாத தமிழ் –419: குறள் கூறும்பொருள்பெறுக

 

452

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு.


நீர் எவ்வகையான நிலத்தில் வந்து சேர்கிறதோ அந்நிலத்தின் தன்மைக்கேற்ப திரிந்து வேறுபடும். அதுபோல் மக்களும் தாம் சேர்ந்த இனத்தின் இயல்புக்கேற்பவே அறிவைப் பெறுவர்.


ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்

 மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க…..” – நன்னெறி, 22.


மக்களுள் உயர்வையும் தாழ்வையும் அவரவர் கொண்டிருக்கும் அறிவினால் மதிப்பிட வேண்டுமே அல்லாமல், பிறப்பால் / சாதியால் அறிய முற்படுதல் தவறாகும்.

 

சனி, 19 மார்ச், 2022

தன்னேரிலாத தமிழ் –417: குறள் கூறும் ”பொருள்” பெறுக

 

தன்னேரிலாத தமிழ் –417: குறள் கூறும்பொருள்பெறுக


451

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

சுற்றமாச் சூழ்ந்து விடும்.


பெருமை உடையவர்கள் சிறுமைக்குணம் கொண்டவர்களோடு சேராது விலகியே இருப்பார்கள் ; அற்பர்களோ அவர்களையே தமது சுற்றமாகக் கொள்வார்கள்.


பொய்ப் புலன்கள் ஐந்தும் நோய் புல்லியர்பால் அன்றியே

 மெய்ப் புலவர்தம்பால் விளையாவாம்துப்பின்

 சுழற்றுங்கொல் கல் தூணைச் சூறாவளி போய்ச்

  சுழற்றும் சிறுபுள் துரும்பு.” --- நன்னெறி, 11.


சுழன்று வீசும்  சூறாவளிக் காற்று, எடை குறைவான பொருள்களையும் வலிமையற்ற தூசுகளையும் கவர்ந்துகொண்டு செல்லும், அது தன்னுடைய வலிமையினால் கல்லால் ஆன தூணைச் அள்ளிச் செல்ல இயலாது அதுபோல, மாயையில் உழலும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் புலன்கள் ஐந்தும் குறைந்த அறிவு உடையவர்களை மட்டுமே துன்புறுத்தும் தன்மையன. அவை சான்றோர்களிடம் சென்று துன்பங்களை விளைவிக்கும் தன்மையற்றனவாகும்.

வெள்ளி, 18 மார்ச், 2022

தன்னேரிலாத தமிழ் –417: குறள் கூறும் ”பொருள்” பெறுக

 

தன்னேரிலாத தமிழ் –417: குறள் கூறும்பொருள்பெறுக

 

430

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

என்னுடைய ரேனும் இலர்.


அறிவுடையார் எவ்வகையான செல்வம் இல்லாதவராக இருந்தாலும் எல்லாம் உடையவர் ஆவர் ; அறிவிலார் எல்லாச் செல்வங்களையும் பெற்றிருந்தாலும் ஒன்றும் இல்லாதவரே !


தேடிப் பெறவேண்டிய அரிய செல்வம் அறிவே என்றறிக.


தத்தம் நிலைக்கும் குடிமைக்கும் தப்பாமே

ஒத்த கடப்பாட்டில் தாள் ஊன்றி எய்த்தும்

அறங்கடையில் செல்லார் பிறன்பொருளும் வெஃகார்

புறங்கடையது ஆகும் பொருள்.”நீதிநெறிவிளக்கம், 65.


தத்தமக்கு உரிய தகுதிகளுக்கும் உயர்குல ஒழுக்கங்களுக்கும் கேடு நேராமல், உலகத்தோடு ஒட்டி ஒழுகும் உறுதியை மேற்கொண்டு, தவறியும் அறநெறிகளினின்றும்  விலகிச் செல்லாமல், மாற்றார் பொருளையும் விரும்பாமல் வாழ்பவர்களின் தலைவாயிலில், செல்வம் தானே வந்தடையும்.