வெள்ளி, 30 செப்டம்பர், 2022

தமிழ் முழக்கம் 10 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 10 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 

இன்று தேசிய மொழிகளின் ஒன்றான எவ்வகையிலும் வளர்ச்சி 

பெறாத இந்தியை வேண்டாத மக்கள் மீது வன்முறையில் 

மறைமுகமாகச் சுமத்தி மக்களிடையே வெறுப்புணர்ச்சியை 

வளர்த்துவருவது நாட்டு நன்மைக்கு ஒத்தது ஆகாது. இந்தியைப் 

பரப்புவதற்காகச் செலவழிக்கப்படும் பொருளையும் காலத்தையும் 

உழைப்பையும் மக்களுக்கு வேண்டப்படும் பிற இன்றியமையாத் 

துறைகளில் ஈடுபடுத்தினால் எவ்வளவோ நன்மைகள் 

விரைவில் விளையும். இந்தி மொழியின் முதன்மையைத் 

தடுப்பதற்கு என நாட்டு மக்களின் ஒரு பகுதியினர் 

அறப்போரில் ஈடுபட்டு அல்லல்பட்டு வருவதும் நின்றுவிடும். ---இலக்குவனார் இதழுரைகள்.

வியாழன், 29 செப்டம்பர், 2022

தமிழ் முழக்கம் 9- பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 9- பேராசிரியர் சி. இலக்குவனார்

 

தமிழ் நாட்டில் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லைஎன்று புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன் கூறியுள்ளமை பொய்யன்று;  ஆரியமும் ஆங்கிலமும் உரையாடல்களிலும் செய்தியிதழ்களிலும் மிகுதியாகக் கலக்கப்படுகின்றமையின் தமிழ்ச் சொற்கள் மறைந்து வருகின்றன. இதே நிலைமை நீடிக்கப்படின் இன்னும் சில ஆண்டுகளில் வடமொழியின் நிலையே தமிழுக்கும் ஏற்படக்கூடும்

செந்தமிழ் என்பது ஏட்டு மொழியாகிப் பின்னர் வழக்கிழந்த மொழியாகிவிடும். தமிழ் மறைந்த பிறகு தமிழர் என்ற பெயர் நமக்கேது?

இந்திய அரசு ஒற்றுமையின் பெயரால் இந்நிலைமையைத்தான் தோற்றுவிக்க விரும்புகிறது.   ---இலக்குவனார் இதழுரைகள்.

புதன், 28 செப்டம்பர், 2022

தமிழ் முழக்கம் 8- பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 8- பேராசிரியர் சி. இலக்குவனார்

தமிழர்களில் கற்றவர்கள் எனப்படுகின்றவர்கள் தமிழினுயர்வை நிலைநாட்ட முயலாது தம்முயர்வை நிலைநாட்டுவதிலேயே காலங் கழித்து வருகின்றனர்.இந்திய மொழிகளின் தாய் எனத் தகும் தமிழ், ஆரியத்தின் கொடுங்கோல் பிடிக்கு ஆளாகாது தப்பித்து உயிர் வாழ்ந்து வருகின்றது. தென்பகுதியில் வாழ்வதால் தென்மொழி எனப்படுகின்றது.

 இத்தென்மொழித் தன்மையும் நீங்கி இல்மொழியாகி விடுமோ என்று அஞ்சத்தகுந்த நிலையில் தமிழர்கள் வாழ்கின்றனர். தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்திடல் வேண்டும் என்றார் பாரதியார், ஆனால் அதன் பிறப்பிடமாகிய இந்நாட்டில் தமிழ் ஓசை மங்கி வருகின்றது.

இலக்குவனார் இதழுரைகள்

செவ்வாய், 27 செப்டம்பர், 2022

தமிழ் முழக்கம் 7- பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 7- பேராசிரியர் சி. இலக்குவனார்

ஆரிய மொழி இன்று வழக்கில் இல்லை; ஒரு காலத்தில்

 

அவ்வாறிருந்தது என்று கூறுவதும் ஆராய்ச்சிக்குரியதாக

 

உள்ளது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் பாடியுள்ள

 

தமிழ்த்தாய் வாழ்த்தில் கன்னடமும் களிதெலுங்கும் கவின்

 

மலையாளமும் துளுவும் உன் உதிரத்துதித்து எழுந்தே ஒன்று

 

பலவாயிடினும் ஆரியம் போல் உலக வழ்க்கழிந்து ஒழிந்து

 

சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து

 

வாழ்த்துதுமே எனக் கூறியுல்ளமை ஆரியத்தின்

 

நிலமையையும் தமிழின் நிலமையையும் தெள்ளத் தெளியக்

 

காட்டுவதாகும்..”  இலக்குவனார் இதழுரைகள்

திங்கள், 26 செப்டம்பர், 2022

தமிழ் முழக்கம் 6- பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 6- பேராசிரியர் சி. இலக்குவனார்

உண்மைக் கூட்டரசு நிலைக்க வேண்டுமானால், எல்லாத் தேசிய மொழிகட்கும் ஆட்சி மன்றத்தில் சமநிலை அளிக்கப்பட வேண்டும்..  பரத கண்டமாம் இப்பெரு நிலப் பரப்பில் அமைந்துள்ள கூட்டரசின் மொழியாக ஒன்றை மட்டும் ஏற்றுக் கொள்வது, அதுவும் எவ்வகையாலும் வளர்ச்சி பெறாத வளமற்ற இந்தியை மட்டும் ஏற்றுக் கொள்வது என்பது, இந்தி மொழிச் செல்வாக்குக்கும் ஏனைய தேசிய மொழிகளின் வீழ்ச்சிக்கும் --- அழிவுக்கும் அடிகோலுவதாகும் என்பதில் எட்டுணையும் ஐயமின்று.”இலக்குவனார் இதழுரைகள்.  

 

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

தமிழ் முழக்கம் 5 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 5  - பேராசிரியர் சி. இலக்குவனார்

உண்மைக் கல்வி உயர்ந்தோங்க  நாட்டு மக்கள் நல்லறிவாளர்களாக விளங்க நம் தாய் மொழியாம் தமிழ்வழியாகப் பயில்வதே துணைபுரியும். ஆகவே, தமிழ் வழியாகவே கற்பிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்துவிடுங்கள்.” ---இலக்குவனார் இதழுரைகள்.  

சனி, 24 செப்டம்பர், 2022

தமிழ் முழக்கம் 4 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 4 - பேராசிரியர் சி. இலக்குவனார்

தமிழைப் பாட மொழியாக்கிக் கொள்ள மாணவர் விரும்பிலர் என்பது உண்மைக்கு மாறுபட்டதாகும் இவ்வாறு கூறுவதுநாணுத்தக உடைத்தன்றோ?’  தமிழ்ப் பாடமொழி வகுப்பில் சேர மாணவர்க்கு விருப்பம் இருந்தும் சேர முடியாதிருக்கும் சூழ்நிலையை அகற்ற உடனே முன்வருதல் வேண்டும்.. ஆங்கில ஆட்சி அகன்ற பிறகும் தமிழை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்ட பின்னரும் இன்றைய மாணவரே நாளைய ஆட்சியாளர் என்பதை அறிந்து வைத்தும் ஆங்கிலத்தையே பாடமொழியாகக் கொள்ளுதல் அறிவுடைச் செயலாகாது.” -- இலக்குவனார் இதழுரைகள்.    

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

தமிழ் முழக்கம் 3 - பேராசிரியர் சி. இலக்குவனார்

 தமிழ் முழக்கம் 3 - பேராசிரியர் சி. இலக்குவனார்

எதனை இழப்பினும் மீண்டும் பெறலாம்; மொழியை இழப்பின் மீண்டும் பெறல் என்றும் இயலாது என்பதனைத் தெளிதல் வேண்டும், தெளிந்து செந்தமிழை அழிக்க வரும் இந்தி மொழிச் செல்வாக்கைத் தடுத்து நிறுத்தல் வேண்டும்.” -- இலக்குவனார் இதழுரைகள்.        

வியாழன், 22 செப்டம்பர், 2022

தமிழ் முழக்கம் 2 - பேராசிரியர் சி. இலக்குவனார்.

 

தமிழ் முழக்கம் 2 - பேராசிரியர் சி. இலக்குவனார்.

யான் சிறையிலிருந்து விடுதலை பெற்றுவிட்டேன். என் இனிய தமிழ்த் தாய் இன்னும் விடுதலை பெற்றிலள். அயல் மொழிகளின் செல்வாக்கு அகலும்வரை தமிழ்த்தாய் விடுதலை பெற்றுவிட்டதாகக் கருத இயலாது. ஆதலின் அயல் மொழிகளின் செல்வாக்கை அகற்றி அன்னைத் தமிழின விடுதலை பெற அயராது உழைப்போம்.”-- இலக்குவனார் இதழுரைகள்.

புதன், 21 செப்டம்பர், 2022

தமிழ் முழக்கம் :1 --பேராசிரியர் சி. இலக்குவனார்

 

தமிழ் முழக்கம் :1 --பேராசிரியர் சி. இலக்குவனார்

தமிழை வளப்படுத்துவதற்கு முதற்படியாகப் பல்கலைக் கழகத்தின் பயிற்சி மொழியாகத் தமிழை ஆக்க வேண்டும் என வலியுறுத்தி அதன் பொருட்டு இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்த் தளையிடப்பட்டுச் சிறை வாழ்க்கையும் பெற்ற ஒரே பேராசிரியர் இலக்குவனாரே…” இலக்குவனார் இதழுரைகள்.