செவ்வாய், 17 ஜூலை, 2018

திருக்குறள் -சிறப்புரை :939


திருக்குறள் -சிறப்புரை :939
உடைசெல்வம் ஊணொளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின். --- ௯௩௯
(ஊண் ஒளி)
சூது பலசெய்யும் சூதாட்டத்தை விரும்பி ஒருவன் மேற்கொள்வானாயின் அவனிடத்து, உடுத்தும் உடையும் ; தேடும் செல்வமும் ;  வயிறார உணவும் ; விரும்பும் புகழும் ; வேண்டும் கல்வியும் என்னும் இவ்வைந்தும் சேராது ஒழியும்.
“ தான் படைத்த பொருளனைத்தும் தம்பியர்கள்
       உடன் தோற்றுத் தனையும் தோற்றான்
மீன்படைத்த மதிமுகத்தாள் இவன்படைத்த
       தனமன்றி வேறே கொல்லோ.” –வில்லிபாரதம்.
  சூதில் தருமன், தான் படைத்த பொருள் அனைத்தும் தம்பியர்களோடு தோற்றுத் தானும் தோற்றான்.  அவ்வாறாக, மீன் படைத்த விழியினை உடைய  இத் திரெளபதி அவன் படைத்த பொருளே அல்லாது வேறாகுமோ..?

திங்கள், 16 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -23

மெய்ப்பொருள் காண்பது அறிவு -23
மூச்சுப் பயிற்சி
” தலைவன் இடம்வலம் சாதிப்பார் இல்லை
 தலைவன் இடம்வலம் ஆயிடில் தையல்
 தலைவன் இடம்வலம் தன்வழி அஞ்சில்
தலைவன் இடம்வலம் தன்வழி நூறே.” –திருமந்திரம்.
உயிர்த்தலைவன் பிராணன் (உயிர்வளி) இடமாகவும் வலமாகவும் சென்றுவரச் செய்பவர்கள், பிராணனை இடப்பக்கம் வலப்பக்கமாக உள்ளிழுத்து, நிறுத்தி வெளியிடும் மூச்சுப் பயிற்சியைச் செய்பவர்கள் அதிகம் பேர் இல்லை. காற்றை இடமாக இழுத்து, வலமாக விடப் பழகிக் கொண்டால் சக்தி, ஞானஒளி வெளிப்படும். இடம் வலமாகப் பிராணாயாமப் பயிற்சி செய்பவருக்கு, ஐம்புலன்களும் தம் இச்சைக்கு ஒடுங்கித் தன் இயல்பு அடங்கியிருக்கும். இப்படிப் பிராணாயாமப் பயிற்சி செய்வோர்தம் வாழ்நாள் நூறு ஆகும். (இர. வாசுதேவன்.) 

திருக்குறள் -சிறப்புரை :938


திருக்குறள் -சிறப்புரை :938
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது. --- ௯௩௮
சூது, சேர்த்து வைத்த பொருளை அழிக்கும் பொருள் வேண்டிப் பொய் உரைக்கத் தூண்டும் மனத்தில் இரக்கமே இல்லாது ஒழிக்கும் இன்னபிற  பலவகையான துன்பங்களில் உழலச் செய்யும்.
“கழை சுளிபுகர் முகக் களிறு தேர் பரி
இழை தவழ் இள முலை மகளிர் ஈட்டிய
விழு நிதிக் குப்பைகள் வேலை சூழ் புவி
முழுவதும் தோற்றனன் முழவுத் தோளினான்.” –நைடதம்.
 சூதாடிய நளன், கரும்பை முறிக்கின்ற புள்ளி பொருந்திய முகத்தை உடைய யானையும் தேரினையும் குதிரையும் அழகிய அணிகலன்கள் தவழ்கின்ற  இள முலைகளை உடைய மாதர்களும் ஈட்டிய பெரும் பொருளாகிய செல்வத்தையும் கடல் சூழ்ந்த நிலப் பரப்பையும் மத்தளத்தை ஒத்த தோள்களை உடைய  மன்னன் அனைத்தையும் தோற்றுவிட்டான்.


ஞாயிறு, 15 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -22

மெய்ப்பொருள் காண்பது அறிவு -22
“ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே” ---திருமந்திரம்.
காற்றைப் பிடிக்கும் கணக்கை அறிந்துகொண்டால் எமனையே எட்டி உதக்கலாம்.
காற்றை இடப்புற மூக்கின் வழியாக உள்ளுக்குள் இழுத்து, உள்ளே அடக்கி வைத்திருந்து பின்னர் வலப்புற மூக்கின் வழியாக வெளியிட வேண்டும்.   ஓம் – கொப்பூழுக்குப் பன்னிரண்டு விரல் அளவின் கீழுள்ளது மூலாதாரம் , அந்த மூலாதாரத்தைத் தூண்டித் தொழிற்படுத்தும் மந்திரம் இயற்கைச் செந்தமிழ் மறையாகிய “ஓம்.” ( வல்லுநர் வழிநின்று செய்முறை அறிக.) 

திருக்குறள் -சிறப்புரை :937


திருக்குறள் -சிறப்புரை :937
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.--- ௯௩௭
சூதாடுவதையே தொழிலாகக் கொண்டு, பொழுதைக் கழிப்பவன் தன் குடும்பச் சொத்தை இழந்து கெடுவதோடு, பேணிக் காத்த நற்பண்புகளையும் இழப்பான்.
“ எள்ளுக சூதினை இகலி வென்றதூஉம்
கள்ள மேற்கொடுவலை காந்து வேட்டுவர்
உள்ளுற அமைத்திடும் உணவை ஓர்கிலாப்
புள்ளினம் அருந்தின போலும் என்பவே.” ---நைடதம்.
அரசனே..! சூதாட்டத்தைப் பகைத்து இகழக்கடவாயாக.   வேட்டையில் வெல்லும் வேடர்கள் கள்ளத்தனமாக வலையை மறைத்து அதன் உள்ளே வைத்திருக்கின்ற இரையை, அறியாது பறவைகள் உண்டதை ஒக்கும் சூதாட்டம்.

சனி, 14 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -21

மெய்ப்பொருள் காண்பது அறிவு -21
”முகத்தின் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தின் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனம்.” –திருமந்திரம்.
உங்கள் கண் பார்வையை, புருவத்தின் நடுவில் வைத்திருங்கள் ; கேசரி முத்திரை என்று இதனைக் குறிப்பிடுவர். வெளியெலாம் அடங்கியிருக்கும் புருவ நடுவில் எண்ணத்தையும் உயிர் மூச்சையும் ஒடுங்கியிருக்கச் செய்யும் வன்மையுடையது - தியானம்.
அகக் கண்ணால் காணும் ஆனந்தத்தை விவரிக்க இயலாது. முகக் கண்கொண்டு பார்ப்பது மூடத்தனம். அகக் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம் என்பதே திருமந்திரத்தின் கருத்தாகும். 

திருக்குறள் -சிறப்புரை :936


திருக்குறள் -சிறப்புரை :936
அகடாரார் அல்லல் உழப்பர் சூதென்னும்
முகடியால் மூடப்பட் டார். --- ௯௩௬
(அகடு ஆரார் )
சூது என்னும் முகடி (மூதேவி) யால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் வயிறு நிறைய உண்பதற்கு வழியின்றி, எந்நேரமும் துன்பத்தில் உழன்று தவிப்பர்.
“ உனது கணவனான தருமன், தானே சூதாடி அனைத்தையும் பணையமாக வைத்துத் தோற்றான். பின்னர்த் தன்னையும் தம்பியரையும் உன்னையும் (திரெளபதி) பணையமாக வைத்துத் தோற்றான். முறையாக நாங்கள் சூதில் வென்றோம் “ என்று கூறித் துச்சாதனன் செண்டு என்ற ஆயுதத்தினால் அவளது கூந்தலைப் பற்றி இழுத்துச் சென்றான்.
“வண்டார் குழலும் உடன் குலைய
       மானம் குலைய மனம் குலையக்
கொண்டார் இருப்பர் என்று நெறிக்
       கொண்டாள் அந்தோ கொடியாளே. –வில்லிபாரதம்.
 வண்டுகள் நிறைந்த கூந்தல் குலையவும் மானம் குலையவும் மனம் குலையவும் பாஞ்சாலி அவன் பின் சென்றாள். தன்னை மணந்த கணவர்கள் அங்கு உள்ளனர் என்ற துணிவில் அங்கே சென்றாள். அந்தோ.. கொடிய பாவம் செய்தவள்.

வெள்ளி, 13 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -20

மெய்ப்பொருள் காண்பது அறிவு -20
"What is your message to the society..?
காந்தி,  கொஞ்சங்கூட யோசிக்காமல் சொன்னார்..
 “My Life” –என்று
என் வாழ்க்கைதான் இந்தச் சமுதாயத்திற்கு நான் சொல்லுகின்ற செய்தி. "

திருக்குறள் -சிறப்புரை :935


திருக்குறள் -சிறப்புரை :935
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.--- ௯௩௫
சூதாடுவதில் வெறிகொண்டு, ஆடும் களம் புகுந்து, தன் தொழில் திறமையை விடாது பற்றி நின்று,  எல்லாவற்றையும் இழந்தவர்கள் பலர் உளர்.
ஐய நீ ஆடுதற்கு அமைந்த சூது மற்று
எய்து நல்குரவினுக்கு இயைந்த தூது வெம்
பொய்யினுக்கு அருந்துணை புன்மைக்கு ஈன்ற தாய்
மெய்யினுக்கு உறுபகை என்பர் மேலையோர்.” –நைடதம்.
அரசனே..! சூதானது வறுமைக்குத் தூதும் பொய்க்கு உதவியும்  இழிதொழிலுக்குத் தாயும்  வாய்மைக்குப் பகையும் ஆகும் என்பர் பெரியோர்கள்.


வியாழன், 12 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -19

மெய்ப்பொருள் காண்பது அறிவு -19
” Powerful media like cinema must avoid cheap, criminal, alcoholic sex pictures. The media is a generator for accelerating  human cultural values.” –Poondi Aiyaa. 

திருக்குறள் -சிறப்புரை :934


திருக்குறள் -சிறப்புரை :934
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.--- ௯௩௪
ஒருவன் தன் வாழ்க்கையில் எதிர்கொள்ள விரும்பாத இழிவுகள் பலவற்றையும் கொடுக்கும் சூதினைப்போல வறுமையைத் தரவல்லது வேறொன்றும் இல்லை.
“ மெய்வருந் திறத்தின் உம்மை
       வெல்லுமாறு வேறலால்
ஐவருந் திருந்த எங்கள்
       அடிமை இன்னர் ஆயினீர்
மைவருந் தடங்கண் வேள்வி
       மாது தன்னை ஒட்டி நீ
கைவருங் கவற்றி னின்னன்
       எறிகவென்று கழறினான்.” –வில்லிபாரதம்.
 உண்மையாகவே வெல்லும் முறையோடு உங்களை நான் வெற்றி கொண்டதால் நீங்கள் முற்றிலும் எங்கள் அடிமைகள் ஆயினீர், ;மையுண்ட கண்களை உடையவளும் யாக பத்தினியுமான திரெளபதியையும் பந்தயமாக வைத்துச் சூது ஆடுக ,” என்றான் சகுனி.

புதன், 11 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -18

மெய்ப்பொருள் காண்பது அறிவு -18
”இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்” –புறநானூறு.
 தண்ணீரும் உணவுமாகிய இரு மருந்தைப் பசிப்பிணிக்குத்தரும் நல்ல நாட்டையுடைய தலைவனாகிய கிள்ளிவளவன்.
“மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”- மணிமேகலை.
”நீரும் சோறும் மருந்து”
”பசிப்பிணி மருந்து”
” பசிப்பிணி மருத்துவன்” – புறநானூறு 

திருக்குறள் -சிறப்புரை :933


திருக்குறள் -சிறப்புரை :933
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.---- ௯௩௩
சூதாட்டக்களத்துள் ஒருவன் ஓயாது நாளையும் வருவேன் என்று கூறிச் செல்வானாயின்  உழைத்துச் சேர்க்கும் நல்வழியில் வந்த பொருளும் அவனிடத்தே தங்காது விரைந்து அழியும்.
“கள்ளுண விரும்புதல் , கழகம் சேர்தல், மால்
உள்ளுறப் பிறன்மனை நயத்தல் ஒன்னலர்க்கு
எள்ளரும் ஞாட்பினுள் இரியல் செய்திடல்
வள்ளியோய் அறநெறி வழுக்கும் என்பவே.” –நைடதம்.
 அரசனே…! கள் குடித்தலை விரும்புதலும் சூதாடும் இடம் சேர்தலும் உள்ளம் மயக்கமடைய பிறர் மனையாளை விரும்புதலும் பகைவர்களுக்கு இகழ்ச்சியில்லாத போர்க்களத்தில் பின்னிட்டு ஓடலும் ஆகிய இவைகளால்  அறத்தின்வழி பிறழும் என்பர் பெரியோர்.

செவ்வாய், 10 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -17

மெய்ப்பொருள் காண்பது அறிவு -17
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” –திருமந்திரம்.
“ஒன்றாகக் காண்பதே காட்சி புலனைந்தும்
வென்றாந்தன் வீரமே வீரம் – என்றானும்
சாவமற் கற்பதே கல்வி தனைப்பிறர்
ஏவாமல் உண்பதே ஊண்.” –ஒளவையார்.

ஒன்றே இறை – சிவன்
ஐம்புலன் அடக்கல் – திண்மை
 சாவாமற் கற்பது – சாகாக் கல்வி
ஏவாமல் உண்பது – தன் உழைப்பால் உண்ணும் உணவு.
சாகாக் கலை – மரணமிலாப் பெருவாழ்வு ; வள்ளலார், தாயுமானவர் வழிநின்று அறிக.

“நாபி யகத்தே நலனுற நோக்கிடில்
சாவது மில்லை யுடம்பு.” –ஒளவை குறள்.

யோக நெறியில் செம்பொருளைச் சிந்தித்துணரும் பயிற்சியினால் இறவாப் பெருநிலையை அடைவதே சாகாக் கல்வியாகும்.
 சாதலால் வரும் துன்பத்தினை மனவுணர்வு படைத்த மாந்தர்கள் தாம் மேற்கொண்டு செய்யும் தவத்தின் ஆற்றலால் மாற்றி, இவ்வுலகில் இறவா நிலையை அடைதல் கூடும் என்னும் உண்மையினைத் திருவள்ளுவர்,

“ கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. (269) என்று கூறுவார். 

திருக்குறள் -சிறப்புரை :932


திருக்குறள் -சிறப்புரை :932
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.----- ௯௩௨
சூதட்டத்தில் முன்பு ஒருமுறை வென்று, சிறிது பொருள் பெற்ற ஆசையால் மீண்டும் மீண்டும் சூதாடிப் பெரும் பொருளை இழப்பர். அத்தகைய சூதாடிகள் நல்ல முறையில் வாழ வழியும் உண்டோ..? இல்லை என்பதாம்.
“ அடியும் ஆண்மையும் வலிமையும் சேனையும்
       அழகும் வெற்றியும் தத்தம்
குடியும் மானமும் செல்வமும் பெருமையும்
       குலமும் இன்பமும் தேசும்
படியு மாமறை ஒழுக்கமும் புகழுமுன்
       பயின்றகல் வியுஞ் சேர
மடியு மான்மதி யுணர்ந்தவர் சூதின்மேல்
       வைப்பாரோ மனம் வையார்.” –வில்லிபாரதம்.
அறிவுடையோர் சூதாடுவதை விரும்புவாரோ..? தலைமையும் ஆண்மையும் படைகளும் அழகும் வெற்றியும் குடிப்பெருமையும் மானமும் செல்வமும் பெருமையும் குலமும் இன்பமும் புகழும் நான்மறை ஒழுக்கமும் கல்வியும் ஆகிய பலவும் சூதினால் அழியும்.


திங்கள், 9 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -16

மெய்ப்பொருள் காண்பது அறிவு -16
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யு மருளது வாமே.” –திருமந்திரம்.
அன்பினைப் பொருட்படுத்தாமல் வன்னெஞ்சினராய்த் திரிவாரையும் அவ்வன்பினைப் பெற்று மென்னெஞ்னராய் மேவி வாழ்வாரையும் சிவன் அறிந்து,அவரவர் செய்கைகட்கு ஏற்றவாறு முறையே துன்ப, இன்பங்களை அளிப்பான். அத்தகைய உகப்புடன் அருள் செய்யும் தலைமை சேர் முதல்வன், ஆருயிர்கள் முதற்கண் தொடர்புடையார்மாட்டு அன்புடையராய், அப்பயிற்சி மேலீட்டால் அனைத்துயிர்கள் மாட்டும் அருளுடையராய் ஒழுக வல்லார்க்கு மகிழ்ந்தன்பு செய்வான்; அதுவே அவன் திருவருளுமாகும்.
(இகழ்ந்தது- அன்பினைப் புறக்கணித்தது ; பெற்றது – மெய்யின்புற்றது ; கொழுந்தன்பு ; வளரும் அன்பு.)

திருக்குறள் -சிறப்புரை :931


94. சூது
திருக்குறள் -சிறப்புரை :931
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.—௯௩௧
வெற்றிபெறினும் சூதாட்டத்தை விரும்பாதே ; அப்படியே வெற்றிபெற்று பொருள் கிடைத்தாலும் அஃது இரையில் மறைந்திருக்கும் தூண்டில் முள்ளை அறியாது இரையெனப்பற்றிய மீனின் நிலையைப் போன்றதாகும்.
“ கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
 அகறல் ஓம்புமின் அறிவுடையீர்..” –நற்றிணை.
அறிவுடையீர்..! சூதாடு கருவி புரண்டு விழுதல் போல, நிலையில்லாத வாழ்க்கையின் பொருட்டுப் பொருளைத்தேடி, அருமையான நுங்கள் காதலியரை விட்டுப் பிரியாது கலந்தே இருங்கள்.

ஞாயிறு, 8 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -15

மெய்ப்பொருள் காண்பது அறிவு -15
”என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
 ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று ளார்அடி யாரவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம். –சேக்கிழார்.
கற்பவர்க்கு என்றும் இன்பம் பெருகவும் கற்பவர் உள்ளம் ஒரு பொருளையே காதலித்து ஓங்கிடவும் சிவனடியார்களின் புகழ் உலகெலாம் பரவி, எங்கும் நிலைபெற்றது

திருக்குறள் -சிறப்புரை :930

திருக்குறள் -சிறப்புரை :930
கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.---- ௯௩0
கள் உண்பான் ஒருவன் தான் கள் உண்ணாதிருந்தபோது, கள்ளுண்டு மயங்கிக் கிடப்பவனைக் கண்டு, தானும் குடித்தபின் ‘இவனைப் போலத் தான் இருந்திருப்போமா..?” என்று எண்ணிப் பார்க்க மாட்டானா..?
“ பாலால் கழீஇ பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைக்கு இருந்தன்று
கோலால் கடாஅய்க் குறினும் புகல் ஒல்லா
நோலா உடம்பிற்கு அறிவு. –நாலடியார்.
( வாலிது ஆம் ; இருந்தை – கரி.)
பாலால் கழுவிப் பலகாலம் உலர்த்திவைத்தாலும் கரித்துண்டு வெண்மையாகாது அதைப்போல் கோலால் அடித்துக்கூறினும் பிறவிப் புண்ணியம் இல்லாத மனிதனுக்கு அறிவு வருவதில்லை

சனி, 7 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -14

மெய்ப்பொருள் காண்பது அறிவு -14
தத்துவங்கள் -25
தத்துவம் : இயல்பு, உண்மை, நிலைமை, தன்மை எனப் பொருள்படும்.
ஐஅஞ்சாகிய தத்துவம் மேல் நின்ற நினக்கு –இறைவன்.
”நிலம் நீர் தீ வளி விசும்போ டைந்தும்
 கலந்த மயக்கம் உலகமாதலின்.” –தொல்காப்பியம்.
நிலம், நீர், தீ,காற்று, ஆகாயம் – பூதங்கள் -5
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் –புலன்கள் -5
மெய், வாய், கண், மூக்கு, செவி – பொறிகள் – 5
கை, கால், வாக்கு, குதம், குறி – கருவிகள் – 5
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் – கரணங்கள் -4
ஆக, 24 ம் சடத்தத்துவங்கள், இதில்  சீவன் குடிபுக, தத்துவங்கள் 25 ஆம். இந்தச்சீவனுள் இறைவன் புகுந்து, யாவற்றையும் இயக்கி அருள் புரிகிறான்.

திருக்குறள் -சிறப்புரை :929


திருக்குறள் -சிறப்புரை :929
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று. --- ௯௨௯
கள் உண்டு மயங்கிக் கிடப்பவனுக்குக் குடித்து அழிபவர்களைச் சான்றுகாட்டித் தெளிவிக்க முயல்வது, நீருள் மூழ்கிய ஒருவனைத் தீவட்டிக் கொண்டு தேடுவதைப் போன்றதாகும்.
“உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு…”---குறுந்தொகை.
முன்னோர் தேடிவைத்த செல்வத்தை அழிப்போர் செல்வம் உடையவர் எனக் கூறப்பெறார் ; இல்லாதவரின் வறுமை பிச்சை எடுப்பதைக் காட்டினும் இழிவானது.

வெள்ளி, 6 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -13

மெய்ப்பொருள் காண்பது அறிவு -13                     
அகர முதல எழுத்தெல்லாம்… “ கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் ; நற்றாள் தொழாஅர் எனின்.
“கல்லாதேன் ஆனாலும்
கற்றுணர்ந்த மெய்யடியார்
சொல்லாலே நின்னைத்
தொடர்ந்தேன் பராபரமே.” தாயுமானவர்.
“ கல்லா மாந்தர் கற்பது வேண்டியும்
 நல்லறி வுடையோர் நயப்பது  வேண்டியும்” அமைவதே கல்விக்கூடங்கள்.
அக்கல்விக்கூடம்
“ முந்தையோர் செய்யுள்போல் செய்த
திருக்கோயில்…” –திரு வெங்கையுலா.

திருக்குறள் -சிறப்புரை :928


திருக்குறள் -சிறப்புரை :928
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். – ௯௨௮
இதுவரை கள்ளினைக் குடித்துக் களிப்பறியேன் என்று கூறுவதைக் கைவிடுக ; கள் குடித்தால், அறிவு மயங்கிய நிலையில் செஞ்சத்தில் ஒளித்து வைத்திருந்த செய்திகள் யாவும் தானே வெளிப்படும்.
 (மதி அழிய மானமும் அழிய நேரிடும்.)
”புலை மயக்கம் வேண்டிப் பொருட் பெண்டிர் தோய்தல்
 கலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல் சொலை முனிந்து
பொய் மயக்கம் சூதின்கண் தங்குதல் இம்மூன்றும்
 நன்மை இலாளர் தொழில்.– திரிகடுகம்.
 இழிகாம இன்பம் வேண்டிப் பொருள்  பறிக்கும் வேசியரோடு உறவாடல்  ; பிறர் உண்ட எச்சில் கலத்தில் கள் உண்ணல் ; அறிவுடையார் கூறும் உண்மைகளை வெறுத்துப்  பொய் கலந்த சூதாட்டத்தில் ஈடுபடல் ஆகிய இம்மூன்றும் அறிவற்றவர்களின் செயல்களாகும்.

வியாழன், 5 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -12

மெய்ப்பொருள் காண்பது அறிவு -12
அன்பு செய்வாரை அறிவான் சிவன்….!
”துணையது வாய்வருந் தூயநற் சோதி
துணையது வாய்வருந் தூயநற் சொல்லாந்
துணையது வாய்வருந் தூயநற் கந்தந்
துணையது வாய்வருந் தூயநற் கல்வியே.” ---திருமந்திரம்.
இயற்கை, உண்மை, அறிவின்ப உருவாகிய சிவபெருமான், எந்நிலையினும் எவர்க்கும் எல்லாவாற்றானும் விளக்கத்துணை நிற்கும் பேரொளிப் பிழம்பாவான். அவன் சிவகுருவாய்வந்து திருவைந்தெழுத்தைச் செவியறிவுறுத்துவான். அம்மந்திரத்தினையே ஆகுபெயராக ஈண்டுச் சொல்லென ஓதினார். அதற்குத் துணையாக இருப்பவனும் அவனே. அவன் மலர் மணம்போல் ஆருயிர்களைத் தன் திருவடிக்கண் அடக்கி இன்புறுத்தலின் தூயநற் கந்தந் துணையென்றனர்.இத்தனையும் நிகழ்வதற்கு வாயிலாகிய கல்வித்  துணையாக எழுந்தருள்பவனும் அவனே. அதனால் அச்சிவனைத் ’தூய நற் கல்வி’ என்றார். 

திருக்குறள் -சிறப்புரை :927


திருக்குறள் -சிறப்புரை :927
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர். --- ௯௨௭
(உள் ஒற்றி ; கள் ஒற்றி)
கள்ளினை மறைத்து, மறைந்து குடித்துக் கண் சாய்ந்து தளர்பவரை உள்ளூரில் வாழ்பவர் அவர்தம் நிலையறிந்து எப்பொழுதும் ஏளனமாக இகழ்வர்.
“கள் உண்பான் கருமப் பொருள் இன்னா.” இன்னாநாற்பது.
கள் உண்பான் சொல்லுகின்ற செயல்களின் பயன் துன்பம் தருவதாகும்.

புதன், 4 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -11

மெய்ப்பொருள் காண்பது அறிவு -11
”அருட்பிரகாச வள்ளலார் அருட்பெருஞ்சோதி அகவலில் குறிப்பிடும் ’அருள்வெளிப்பதி’ என்பது, இரு கண்களுக்கு இடையே புருவ மத்தியில் அமைந்த இடைவெளியினை. இது கீழ் இரண்டும் மேல் ஒன்றும் ஆக அமைந்த ( ஃ ) முப்புள்ளி வடிவாகிய ஆய்தவெழுத்தினைப் போன்று இரண்டு கண்களுக்கு மேல் மத்தியில் அமைந்திருத்தலின் ஒள கார எழுத்தினையடுத்துக் கூறப்பட்டுள்ளமை உய்த்துணர்வதற்குரியதாகும். இத் தியான முறையை…
“நெற்றிக்கு நேரே புருவத்திடை வெளி
 உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
 பற்றுக்குப் பற்றாய் பரமனி ருந்திடும்
சிற்றம் பலமென்று தேர்ந்து கொண்டேனே.” –திருமந்திரம்.
இவ்வாறு நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளியில் உள்ளத்தை ஒன்றவைத்துத் தியானிக்கும் முறையே சிறந்த தவமாகும். “ –        க. வெள்ளைவாரணனார். 

திருக்குறள் -சிறப்புரை :926


திருக்குறள் -சிறப்புரை :926
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.---- ௯௨௬
 உறக்கத்தில் இருப்பவர்களின் அறிவும் ஆழ்நிலையில் செயற்படாமையால் அவர்கள் செத்தாரின் வேறாகக் கருதப்பட மாட்டார்கள் அதுபோல் கள்ளுண்பவர்களின் அறிவும் மயங்கிச் செயற்படாமையால் அவர்களும் நஞ்சு உண்பவர்களினின்றும் வேறாகக் கருதப்பட மாட்டார்கள்.
“மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
 கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்.” –மணிமேகலை.
நல்லறிவை மயக்கும் கள்ளினையும் நிலை உயிர்களைக் கொல்லுதலையும் அறிவுடையோர் தீயவை என விலக்கினர்.செவ்வாய், 3 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -10
ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைவன்
உய்யக் கொண்டேறுங் குதிரை மற்றொன்று உண்டு
மெய்யர்க்குப் பற்றுக் கொடுக்குங் கொடாது போய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திருந் தானே.” –திருமந்திரம்.
ஐம்பொறிகளுக்குத் தலைவன் – ஆருயிர்
ஐவர் வாழும் ஊர் – ஐம்பொறிகள் ; உடல்
அவ்வூர்க்குத் தலைவன் – மனம்
குதிரை – உயிர்ப்பு (உயிர் வளி)
அகத் தவப் பயிற்சி உடையார்க்கு மனமாகிய குதிரை அடங்கிப் பற்றுக்கொடுத்து ஒழுகும்; முறையான பயிற்சி இல்லாத பொய்யர்க்குப் பற்றுக்கொடாது, துள்ளி எழுந்து அவரைக் கீழே வீழ்த்தித் தான் வேண்டியவாறு சென்றுவிடும்.

திருக்குறள் -சிறப்புரை :925


திருக்குறள் -சிறப்புரை :925
கையறியாமை யுடைத்தே பொருள் கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.--- ௯௨௫
தன் கைப்பொருளைக் கொடுத்துக் கள்ளுண்டு, தன்னை அறியாது தானே மயங்கிக்கிடக்கும் செயல், ஒருவன்  தான் செய்வது இன்னதென்று அறியாத அறிவற்ற செயலாகும்.
” கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் பைங்கூழ்
விளைவின்கண் போற்றான் உழவும் இளையனாய்க்
கள் உண்டு வாழ்வான் குடிமையும் – இம்மூன்றும்
துக்கப் பிறப்பாய் விடும்.” ---திரிகடுகம்.
சுற்றத்தார்க்கு உதவாதவன் செல்வமும் பசுமைப்பயிர்போற்றித் தனக்குப் பயன் கொடுக்கும் காலத்துப் பாதுகாக்காதவன் உழவுத் தொழிலும் இளமைக் காலந்தொட்டே கள் உண்டு வாழ்வான் குடிப்பிறப்பும்  ஆகிய இம்மூன்றும் நிலைப்பன போலத் தோன்றிக் கெட்டழியும்.

திங்கள், 2 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -9

மெய்ப்பொருள் காண்பது அறிவு -9
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது.-குறள்.262.
”சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ.
தவம் என்பது விரதம் முதலிய நியமங்களால் மனத்தை ஒருமுகப்படுத்தி இறைவனை நோக்கி உருகியிருப்பது. இதனால் ஆன்மா புனிதம் அடைகிறது ; அடையவே பரமான்மாவின் ஒளியையும் திருவருளையும் நேரே பெறுகிறது; பெறவே அது அதிசய மகிமைகள் உடையதாய் உலகம் துதிசெய்ய வருகிறது.” –ஜெகவீரபாண்டியனார்.

திருக்குறள் -சிறப்புரை :924


திருக்குறள் -சிறப்புரை :924
நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. --- ௯௨௪
கள் உண்ணல் என்னும் பெருங்குற்றத்தைச் செய்யும் குடிகாரன்முன், நாணம் என்னும் நற்குணம் நிறைந்த பெண், அவ்விடத்தே நிற்க வெட்கப்பட்டு விலகிப் போவாள்.
“ பொய்யான் புலாலொடு கள் போக்கித் தீயன
செய்யான் சிறியார் இனம் சேரான் – வையான்
கயல் இயல் உண் கண்ணாய் கருதுங்கால்; என்றும்
அயல அயலவர் நூல். – ஏலாதி.
பொய் கூறான் புலால் உண்ணான், கள் குடியான், தீமைகள் செய்யான், சிற்றினம் சேரான், பிறரை இகழ்ந்து பேசான் இத்தகைய அருங்குணங்கள் வாய்க்கப்பெற்ற ஒருவனுக்கு உற்று நோக்குங்கால் அறிவுநூல்கள் வேண்டுவனவல்ல.ஞாயிறு, 1 ஜூலை, 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு -8

மெய்ப்பொருள் காண்பது அறிவு -8
“ பெண்ணைச் சம்பளமில்லா அகப்பையாக ; ஆணைச் சம்பாதித்துப் போடவந்த கலப்பையாக நினைக்காமல் இருவரும் குடும்ப நிலையறிந்து வாழ்ந்துவந்தால், படகு ஜீவநதியில் மெத்தென மிதந்து செல்லும். –பூண்டி ஐயா. 

திருக்குறள் -சிறப்புரை :923


திருக்குறள் -சிறப்புரை :923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.--- ௯௨௩
கள் உண்டு களிப்பவனைக் காணும் பெற்றதாயின் முகத்திலேயே வெறுப்புத் தோன்றுமென்றால் ஒழுக்கத்தை உயிராகப் போற்றும் சான்றோர் முன் கள்ளுண்டு களித்தால் எப்படியிருக்கும்..?
”பிறன்மனை கள் களவு சூது கொலையோடு
அறன் அறிந்தார் இவ்வைந்தும் நோக்கார்….” ஆசாரக்கோவை.
அறவழி அறிந்த சான்றோர், பிறன் மனை நயத்தல், கள்ளுண்ணல், களவாடல், சூதாடல், கொலை செய்தல் ஆகிய இவ்வைந்து குற்றங்களையும் செய்வோரை விரும்பார்.