செவ்வாய், 18 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1079


திருக்குறள் -சிறப்புரை :1079

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். -----0௭

உழைத்த பொருளைக் கொண்டு நன்றாக உடுத்தும் உண்டும் வாழ்வாரைக் கண்டால், கயவர்கள் பொறாமை கொண்டு, அவரிடத்துக் குற்றம் இல்லையானும் குற்றம் காண்பதில் வல்லவர்கள்.

“ கோடு ஏந்து அகல் அல்குல் பெண்டிர் தம் பெண் நீர்மை
சேடியர் போலச் செயல் தேற்றார் –கூடிப்
புதுப் பெருக்கம் போலத் தம் பெண் நீர்மை காட்டி
மதித்து இறப்பர் மற்றை யவர்.” ----நாலடியார்.

குடும்பப் பெண்கள் ஆடை அணிமணிகளாலே தம்மை வியக்கச் செய்து, பிறரிடத்துப் பொருள் பறிப்பதில்லை ; வேசியரோ அப்படிச் செய்வார்கள். அதுபோல், தம் குணங்களைக் காட்டி வியக்கச் செய்யாமல் அடங்கி இருப்பார்கள் ; கயவர்களோ வெகு மேன்மை உள்ளவர் போல் நடித்துக் காட்டிப் பிறரை வஞ்சித்துப் பொருள் பறித்துக்கொண்டு போவார்கள்.

திங்கள், 17 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1078


திருக்குறள் -சிறப்புரை :1078

 சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். ----0௭

 சான்றோர், மெலியோர் குறையைக் கேட்டவுனே அவர்தம் குறையைப் போக்குவர்;  கீழ் மக்களோ, கரும்பை அடித்து நொருக்கிப் பிழியப் பயன்படுவதைப் போல, வலியோர் வலிமைக்கு அடங்கியே பயன் தருவர்.

“கடித்துக் கரும்பினைக் கண் தகர நூறி
 இடித்து நீர் கொள்ளினும் இன்  சுவைத்தே ஆகும்
 வடுப்பட வைது இறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயில் சிதைந்து. “ -----நாலடியார்.

கரும்பை, கடித்துக் கணுக்கள் உடையும்படி நெரித்து, ஆலையில் இட்டுத் துவைத்துச் சாறு எடுத்தாலும் அது சுவை உடையதாகவே இருக்கும். அதுபோல் நற்குடியில் பிறந்தாரைப் பிறர் திட்டிப் பேசினாலும் தமது வாயினால் தம்மை வைதவர் மனம் நோகும்படியான சொற்களைச் சொல்ல மாட்டார்கள். 

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

Indus symbols and their Dravidian connections


“Indus symbols and their Dravidian connections”

                                  Chennai: Considering the vast area that covers the  Indus Valley Civilization (IVC), many languages must have been spoken there. However, the Indus script, due to its consistency in symbols, was likely to have been created by a single linguistic community, according to Houston-based Tamil scholar Naga Ganesan.

“ Since fish and crocodile played a major role in Indus astronomy, culture and religion, they were represented in the Indus script. Harappans likely called these signs  as ‘min’ and ‘mokara/makara’ in their language. The word  ‘simsumara’, first referring to Gangetic dolphin by similarly with the gharial crocodile, has a proto-Dravidian root.”, he said, while speaking on “Some k-initial Dravidian loan words in Sanskrit;preliminary observations on the Indus language”, at the Roja Muthiah Research Library in the city recently.

                    Ganesan said many vedic non-Aryan words have been shown to be loans from Dravidian language of the Indus farming culture.
“There is linguistic and archaeological evidence to support the view that the Indus civilization is non-Aryan and pre-Aryan.”

……………………………………………………..
                         
       “The long-snouted gharial seems to be the ultimate source for phallic symbol, the ‘lingam’. In Tamil texts, vitankar means linga. Siva as a nude kamuka (erotic ascetic), as well as crocodile. At places like Gudimallam, the phallic symbol represents Varuna, the god of the littoral landscape of Sangam poetry”, he added.
                -For more information…. Pl.TOI:17/12/18.


திருக்குறள் -சிறப்புரை :1077


திருக்குறள் -சிறப்புரை :1077

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லாத வர்க்கு.------0௭௭

கயவர், தம் கன்னத்தை அடித்து உடைக்கும் வலியாரின் வளைந்த கையினை உடையவர்க்கேயன்றிப் பிறர் இரந்து நின்றாலும் அவர்க்குத் தாம் உணவு உண்ட கையைக்கூட உதற மாட்டார்கள். உண்ட கையை உதறினால் ஒரு பருக்கை சோறாவது விழுந்துவிடுமே அதனால் அவ்வாறு கூறினார்.

“தளிர்மேல் நிற்பினும் தட்டாமல் செல்லா
உளிநீரர் மாதோ கயவர் – அளிநீரார்க்கு
என்னானும் செய்யார் எனைத்தானும் செய்யவே
இன்னாங்கு செய்வார்ப்  பெறின்.” ----நாலடியார்.

தளிரின் மேல் நின்றாலும் ஒருவர் தட்டித்தள்ளாமல் போகமாட்டாத உளியின் தன்மை உடையவர்கள் கயவர்; மென்மையானவர்களுக்கு  எந்த உதவியும் செய்ய மாட்டார்கள் ; அடித்து உதைத்துத் துன்பப்படுத்துவோர்க்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்பார்கள்.

சனி, 15 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1076


திருக்குறள் -சிறப்புரை :1076

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.-----0௭

கயவர்கள் தாம் கேட்டறிந்த கமுக்கச் செய்திகளைப் பல்லோருக்கும் எடுத்துரைப்பதால் அவர்கள் அடித்துமுழக்கும் செய்தி அறிவிக்கும் பறைக்கு ஒப்பானவர்கள்.

‘கணமலை நன்னாட கண்ணின்று ஒருவர்
குணனேயும் கூறற்கு அரிதால் – குணன் அழுங்கக்
குற்றம் உழை நின்று கூறும் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ நா.”  -----நாலடியார்.

கூட்டமாக மலைகள் சூழ்ந்த நல்ல நாட்டின் அரசனே..! எதிரிலிருந்து  ஒருவர் குணத்தையும் சொல்வதற்கு அருமையாயிருக்கும் அப்படியிருக்க, அவரிடத்திலிருந்து அவர்தம்  குணம் அழியும்படிக் குற்றங்களை எடுத்துச் சொல்கின்ற கயவரின் நாக்கு எப்படிப்பட்ட பொருளினால் செய்யப்பட்டதோ…?

வெள்ளி, 14 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1075


திருக்குறள் -சிறப்புரை :1075

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது.-----0௭௫

அச்சப்பட்டுக்கிடப்பதே கீழ்மக்களின் இயல்பாகும். அஞ்சி ஒடுங்குவது ஒழித்து உழைத்துப் பொருளை ஈட்டவேண்டும் என்று ஆசைப்பட்டாலே  ஒரு சிறிதாவது அச்சம் ஒழியும்.                         

”செழும் பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பு  அறுக்கில்லா தேரை – வழும்பில்சீர்
நூள்கற்றக் கண்ணும் நுணுக்கம் ஒன்று இல்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அரிது. ----நாலடியார்.

தவளைகள்   செழிப்பான குளத்தில் எந்நாளும் வாழ்ந்து கொண்டிருந்தாலும் தம்மேலுள்ள வழுவழுப்பான அழுக்கை நீக்கிக் கொள்ள மாட்டா. குற்றமில்லாத சிறப்புடைய பல நூல்களைக் கற்ற போதும் நுணுகி நோக்கும் அறிவு இல்லாதார், நூற்கருத்தை அறிந்து கொள்ளும்  தன்மையுடையர் அல்லர்.

வியாழன், 13 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1074


திருக்குறள் -சிறப்புரை :1074

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். -----0

கீழ்மகன் ஒருவன் தன்னினும் கீழ்த்தரமாய்,  மனம்போனபோக்கில் ஒழுகுவாரைக் கண்டால், தான் அவரைவிட மேலானவன் என்று கருதி இறுமாப்புக்கொள்வான்.

“ மைதீர் பசும்பொன் மேல் மாண்ட மணி அழுத்திச்
செய்தது எனினும் செருப்புத்தன் காற்கே ஆம்
எய்திய செல்வத்தர் ஆயினும் கீழ்களைச்
செய்தொழிலால் காணப்படும்.” -----நாலடியார்.

குற்றமற்ற நல்ல பொன்னின் மேலே மாட்சிமையுடைய இரத்தினங்களை இழைத்து செய்யப்பட்டதானாலும் செருப்பு, தன் காலில் அணிவதற்கே பயன்படும் அதுபோல, கீழ்மக்கள் எவ்வளவு செல்வம் பெற்றவராயினும் அவர்கள் கீழ்மக்களே என்பதை அவர்கள் செய்யும் செயல்களால் அறியலாம்.

புதன், 12 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1073


திருக்குறள் -சிறப்புரை :1073

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான். -------0

தேவராகிய மேலோர் போன்றவர்கள் கயவர்கள். எப்படியெனின் தேவரும் கயவரும் மனம்போன போக்கில் தாம் விரும்பியவற்றை விரும்பியவாறே செய்யும் இயல்புடையவர்கள்.

”ஏட்டைப் பருவத்தும்  இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள் –கோட்டை
வைரம் செறிப்பினும் வாள் கண்ணாய் பன்றி
செயிர் வேழம் ஆகுதல் இன்று. –நாலடியார்.

வாள் போன்ற கண்ணை உடையவளே..! நற்குடியில் பிறந்தார் பொருள்வளம் இழந்த காலத்திலும் செய்கின்ற நற்செயல்களைக் கயவர்கள் பொருள்வளம் கொண்ட காலத்திலும் செய்யமாட்டார்கள். பன்றியின் கொம்பில் பூணைப் பூட்டினாலும் அது வீரம்கொண்ட யானை ஆகிவிடாது. மேலோர் இயற்கையும் கீழோர் இயற்கையும் மாறா என்பது கருத்து.

திங்கள், 10 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1072


திருக்குறள் -சிறப்புரை :1072

நன்றறி வாரின் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.------0

அறிவார்ந்து ஆராயும் சான்றோரைக் காட்டிலும் கயவர்கள் பேறு பெற்றவர்கள் ;  நன்மை தீமை ஆராய்ந்து ஒழுகும் அறிவின்மையால் அவர்கள் மனக்கவலை இல்லாதவர்கள்.

“” ஆர்த்த அறிவினர் ஆண்டு இளையராயினும்
காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்
தீதொழிலே கன்றித் திரிதந்து எருவை போல்
போத்து அறார் புல்லறிவினார்.’ –நாலடியார்.

நிறைந்த  அறிவுள்ளவர்கள் வயதில் இளையோராயினும் மனத்தாலும் பிறருக்குத் தீமை செய்யாமல் தம்மைக் காத்து அடக்கமுடன் நடந்து கொள்வர்.  சிற்றறிவு உடைய கயவர்கள், வயது முதிருந்தோறும் தீய செயல்களில் உழன்று வருந்திக் கழுகைப்போல் திரிந்து இழிவையே துய்ப்பர். (திருந்தாது குற்றம் புரிவார் என்பதாம்.)

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1071


திருக்குறள் -சிறப்புரை :1071
108. கயமை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல். ---- 0

உருவத்தால் மக்களை ஒப்பர் கயவர் ; கயவரும் மக்களும் ஒத்தாற் போன்ற ஒப்புமையை வேறு இரண்டு இனத்தில் யாம் கண்டதில்லை.

“ நிறைப் பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்து
மறைப் பெருங் கல் அன்னார் உடைத்து.” ---நாலடியார்.

நிறைவான பெருஞ் செல்வத்தைப் பெற்றிருந்தாலும் மனத்தில் கொஞ்சமும் இரக்கமின்றிப் பாறையாகிய பெரிய கல்லைப் போன்றவர்களை உடையதாயிருக்கின்றது இவ்வுலகம்.

சனி, 8 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1070


திருக்குறள் -சிறப்புரை :1070

கரப்பவர்க்கு யாங்கொளிக்குங் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர். ----- ௧00

இரந்து நிற்பார்க்கு ’ஒன்றும் இல்லை போ’ , என்னும் சொல்லைக் கேட்டவுடனே இரந்தவன் உயிர் போய்விடுகின்றது ; இருப்பதை மறைத்தவர் உயிருடன் இருக்கிறார், மறைத்தவர் உடம்பில் இருக்கும் உயிர் எங்குசென்று ஒளிந்து கொள்ளுமோ..?

”புறத்துத் தன் இன்மை நலிய அகத்துள்
 நல் ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
 ஈயாய் எனக்கு என்று இரப்பானேல் அந்நிலையே
 மாயானோ மாற்றி விடின்,” ---நாலடியார்.

 வறுமையால் வருத்தமுற்ற ஒருவன் தன் மனத்தில் நிலைப்படுத்திய நல்லறிவை நீக்கி, இழிவான நிலையில்  ஒரு செல்வனை நாடி, எனக்கு ஏதாகிலும் கொடு என்று இரக்கவும் செல்வனோ இல்லை என மறுத்துவிட்டால் அவ்விடத்திலேயே இரந்தவன்  மனமழிந்து, இறந்து போக மாட்டானா..?


வெள்ளி, 7 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1069


திருக்குறள் -சிறப்புரை :1069

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும். ---- ௧0௬௯

செல்வ வளம் உடையவர் முன் சென்று இரத்தலின் இழிவை நினைக்கும் பொழுதே உள்ளம் நைந்து உருகும் ; அந்நிலையில் இருப்பவர் இல்லை எனக் கைவிரித்தபோது அந்த மனம் உடைந்து சிதறி அழியும்.

“இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல்
பரந்து வெளிப்படாது ஆகி
வருந்துகதில்ல யாய் ஓம்பிய நலனே.” –அகநானூறு.

ஒரு பொருளும் இல்லாது இரந்து வந்தவர்க்கு அவர் வேண்டுவதொன்றைக் கொடாது ஈட்டியவன் பொருள் பிறரால் அறியப்படாது அழிந்து போவதுபோல, என் தாய் பாதுகாத்த என் மேனி அழகும் பிறர் அறிய வெளிப்படாது அழிந்து ஒழிந்து போவதாக. ---பரத்தை கூற்று,

வியாழன், 6 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1068


திருக்குறள் -சிறப்புரை :1068

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும். ------ ௧0௬௮

வறுமை நிலையைக் கடக்க இரத்தல் என்னும் பாதுகாப்பு இல்லாத தோணி, மறைத்துவைத்தல் என்னும் வலிய பாறையால் தாக்குண்டு சிதைந்து போகும்.

“தண்கடல் வரைப்பில் தாங்குநர் பெறாது
பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போல
கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண…” ---   பெரும்பாணாற்றுப்படை.

ஞாயிறும் திங்களும் வலம் வருகின்ற கடல் சூழ் உலகில், மழை இல்லாமையால் புகை எழுகின்ற மலையின்கண், நின்னைப் புரப்பாரைப் (பேணுநர்) பெறாமையால், பழம் கனிந்த மரத்தை நாடித் திரியும் பறவை போல, அழுது புலம்பும் சுற்றத்தினருடன் ஓரிடத்து இராமல் பயனின்றி ஓடித் திரிகின்ற பொலிவிழந்த வடிவினையும் கற்ற கல்வியை வெறுத்துப் பேசுகின்ற வாயையும் உடைய பாணனே….!

புதன், 5 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1067


திருக்குறள் -சிறப்புரை :1067

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.---- ௧0௬௭

இரப்பாரை எல்லாம் யான் இரந்து கேட்டுக்கொள்கிறேன், தம்மிடம் இருப்பதை மறைத்து இரந்தவர்க்கு ஒன்றும் கொடுத்துதவ மனமில்லாதவரிடம் சென்று இரந்து நிற்க வேண்டாம்.

“ முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே.” ---புறநானூறு. 

நிறைந்த செல்வத்தை உடைய மூவேந்தராயினும் எம்மிடத்து அன்பு காட்டாது வழங்கும் பரிசிலை விரும்ப மாட்டோம்.

செவ்வாய், 4 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1066


திருக்குறள் -சிறப்புரை :1066

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல். ---- ௧0௬௬

பயன் கருதாது பால் சுரந்தூட்டும் பசுவின் நிலைமை கண்டு இரங்கிக் கொஞ்சம் நீர் கேட்டு, ஒருவன் இரந்து நின்றாலும் அவ்வாறு இரத்தலைப்போலும் அவன் நாவிற்கு இழிவினைத் தரவல்லது வேறு ஒன்றும் இல்லை.

“உள்ளது சிதைப்போர் உளர் எனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு….” ---குறுந்தொகை.

தாம் முயன்று தேடாது, தம் தாயத்தாரால் தேடி வைக்கப் பெற்ற செல்வத்தை அழிப்பவர், உயிருள்ளவராக உலகோரால் எண்ணப்படார். அவ்வுள்ளது சிதைத்தபின், ஒன்றும் இல்லோராய் உயிர் வாழ்தல், இயல்பாகவே வறுமை உடையோராயினர், அத்தகையோர் வாழ்க்கை, பிறரிடம் சென்று இரந்து உயிர் வாழ்வதைவிட இழிவானதாகும்.
எவ்வகையானும் இரத்தலைவிட இழிவானது வேறு எதுவும் இல்ல.

திங்கள், 3 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1065


திருக்குறள் -சிறப்புரை :1065

தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல்.----- ௧0௬

  தன் வீட்டு அடுமனையில் ஆக்கப்பட்ட தெளிந்த நீர் போலும்   கூழாயினும் தன்னுடைய உழைப்பினால் கிடைத்ததை உண்பதைவிட  இனிமையானது வேறு ஒன்றும் இல்லை.

“விருப்பு இல்லார் இல்லத்து வேறு இருந்து உண்ணும்
வெருக்குக்கண் வெம் கருனை வேம்பாம் – விருப்புடைத்
தன் போல்வார் இல்லுள் தயங்கு நீர் தண்புற்கை
என்போடு இயைந்த அமிழ்து,” ---நாலடியார்.

தன்மேல் அன்பில்லாதவர்களுடைய வீட்டில் வேறாயிருந்து பூனைக் கண்ணைப்போன்ற பொரிக்கறி உணவு வேம்பைப்போல் கசப்பாம் ; விருப்பமுள்ள தன்னோடு ஒத்தவருடைய வீட்டில் உண்ணப்படும் தெளிந்த நீரிலேயுள்ள புல்லரிசிக் கூழானது உடம்பிற்குப் பொருந்திய அமிழ்தமாகும்.

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1064


திருக்குறள் -சிறப்புரை :1064

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.----- ௧0௬௪

இரந்துண்டு வாழும் அவலநிலைக்கு ஆளான போதும், பிறரிடம் சென்று இரந்து நிற்காத மேன்மைக்குணம், அகன்ற இவ்வுலகமெல்லாம் கொள்ளாத அளவு பெருமை உடைத்து.

” திருத் தன்னை நீப்பினும் தெய்வம் செறினும்
உருத்த மனத்தோடு உயர்வு உள்ளின் அல்லால்
அருத்தம் செறிக்கும் அறிவிலார் பின் சென்று
எருத்து இறைஞ்சி நில்லாது மேல். “ -----நாலடியார்.

திருமகள் தன்னைக் கைவிட்டாலும் தெய்வம் சினந்து வருத்தினாலும்  அயராது மனத்துள் தம் (தன்மான வாழ்வை) மேன்மையை நினைப்பதே யல்லாமல்,  வீணே பொருள் சேர்த்துவைத்திருக்கும் அறிவிலார் பின் சென்று, இரந்து நிற்கமாட்டார் மேலானவர்.

சனி, 1 டிசம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1063


திருக்குறள் -சிறப்புரை :1063

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்டது இல்.----- ௧0௬௩

வறுமையால் விளையும் துன்பத்தை முயன்று நீக்க நினையாது, பிறரிடம் இரந்துண்டு வாழ்ந்துவிடலாம் என்று கருதும் மனவலிமையைவிட உலகில் வலிமை உடைய செயல் பிறிதொன்றில்லை.

“இரத்தலினூஉங்கு இளிவரவு இல்லை.” ----முதுமொழிக் காஞ்சி.

பிச்சை எடுத்து உயிர் வாழ்தலைவிட இழிவான செயல் வேறு ஒன்றும் இல்லை. 

வெள்ளி, 30 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1062


திருக்குறள் -சிறப்புரை :1062

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.------- ௧0௬௨

இவ்வுலகைப் படைத்தவன், இரந்து வாழவேண்டிய அவல நிலைக்குச் சிலரையும் படைத்திருப்பானாயின் அவனும் அப்பிச்சைக்காரர்களைப் போல நாளும் அலைந்து, திரிந்து அல்லல் பட்டுக் கெடுவானாக.

”ஐதே கம்ம இவ்வுலகு படைத்தோனே
……  ……  ……  ………
வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில்
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி
ஆன் வழிப் படுநர் தோண்டிய பத்தல்
யானை இனநிரை வெளவும்
கானம் திண்ணிய மலை  போன்றிசினே.”  ---நற்றிணை.

வெயிலால் வெப்பமுற்ற பரற்கற்கள் நிறைந்த பள்ளத்தின் ஒரு புறத்தில் குந்தாலியால் கிணறு தோண்டப்பட்டிருக்கும். அங்கு, பசுக்கூட்டங்களைப் பாதுகாக்கும் ஆயர்கள் சென்று, அருகில் பறித்த சிறுகுழியில் ஊறிய நீரை யானைக் கூட்டம் சென்று உண்ணும். இத்தகைய வறட்சி உடைய கொடிய காட்டுப் பகுதி, திண்ணிய மலை போல நிலைத்த அச்சத்தைச் செய்கின்றது. இத்தகைய காட்டுப் பகுதியில் இவ்வுலகைப் படைத்தவனும் சென்று மெலிவானாக.

வியாழன், 29 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1061


திருக்குறள் -சிறப்புரை :1061

107. இரவச்சம்

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும். ---- ௧0௬௧

தம்மிடம் இருப்பதை ஒளிக்காமல் இரந்து வருவர்களுக்கு மனம் மகிழ்ந்து கொடுக்கும் கண் அனையாரிடத்தும் பொருள் வேண்டி இரவாது தம் வறுமையைப் போற்றி நிற்றல் கோடி மடங்கு பெருமை உடையதாகும்.

“கரவாத திண் அன்பின்  கண் அன்னார் கண்ணும்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை…….” ----நாலடியார்.

தம்மிடம் இருப்பதை மறைக்காத, உறுதியான அன்பிலே கண் போன்றவரிடத்தும் சென்று இரவாது வாழும் வாழ்க்கையே நல்ல வாழ்வாகும்.

புதன், 28 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1060


திருக்குறள் -சிறப்புரை :1060

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி. ---- ௧0௬0

இரந்து வாழ்பவர் சினங்கொள்ளக்கூடாது, வேண்டியது கிடைக்கும்வரை பொறுமை காத்தல் வேண்டும். இரந்து வாழும் இழிநிலைக்குத் தம் வறுமை நிலையே போதிய சான்று என்று உணரவேண்டும்.

“யாங்கு அறிந்தனனோ தாங்கருங் காவலன்
காணாது ஈத்த இப்பொருட்கு யான் ஓர்
வாணிகப் பரிசிலன் அல்லென் பேணித்
தினை அனைத்தாயினும் இனிது அவர்
துணை அளவு அறிந்து நல்கினர் விடினே” –புறநானூறு.

வேந்தன், என்னுடைய எத்தன்மையை அறிந்தான்..? என்னை அழைத்துக் காணாமல் தந்த இப்பொருளுக்கு யான் பொன் பொருளை மட்டுமே கருதும் பரிசிலன் இல்லை. பரிசில் வேண்டுவாரின் கல்வி முதலிய தகுதியின் அளவு அறிந்து விருப்பத்தோடு தினை அளவு கொடுத்தாலும் போதுமெனக் கொள்வேன்.

செவ்வாய், 27 நவம்பர், 2018

திருக்குறள் -சிறப்புரை :1059


திருக்குறள் -சிறப்புரை :1059

ஈர்வார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.----- ௧0

  வறுமையால் வாடி,  இரந்து பொருள் கேட்பார் உலகில் இல்லையானால் கொடுப்போர்க்குப் பெருமை எப்படிக் கிடைக்கும்..? இரப்பார்க்குக் கொடுப்போரே பெருமை பெறுவர் என்பதாம்.

” ……………. இயல் தேர் அண்ணல்
இல்லது நிரப்பல் ஆற்றாதோரிலும்
உள்ளி வருநர் நசை இழப்போரே.
அனையையும் அல்லை நீயே…” ---புறநானூறு.

இயற்றப்பட்ட தேரை உடைய அண்ணலே..! தம் இல்லாமையைத் தீர்த்துக் கொள்வதற்காகப் பொருளைத் தேடி அடைய முடியாத இரப்போரைவிட, அவரால் பரிசிலுக்காக நினைந்து எய்தப்பெறும் கொடையாளிகள், அவ்விரப்போரால் விரும்பப்படும் புகழை இழந்துவிடுவர். நீ அவ்வாறு இரப்போரால் விரும்பப்படாத தன்மையை அடைபவன் அல்லன்.