ஞாயிறு, 31 ஜூலை, 2022

தன்னேரிலாத தமிழ் –480: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –480: குறள் கூறும்பொருள்பெறுக.

 

633

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்லது அமைச்சு.


பகைவருக்குத் துணையாக நிற்பவரைப் பிரித்தலும்; தமக்குத் துணையாகவரும் மாற்றாரைப் பாதுகாத்தலும்; பிரிந்து சென்றாரைச் சேர்த்துக் கொள்ளலும் ஆகியவற்றை ஆற்றலுடன் செயல்படுத்த வல்லமை உடையவரே அமைச்சராவார்.


மன்னனும் மாசுஅறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்பு உடையன் - மன்னற்குத்

தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்

 சென்ற இடம் எல்லாம் சிறப்பு.”----- வாக்குண்டாம், 26.


நாடாளும் மன்னனையும் குற்றமில்லா வகையில், கற்றறிந்த புலவரையும் ஆராய்ந்து பார்த்தால், மன்னனைவிடக் கற்றறிந்தவன் சிறப்புடையவனாவான். கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

சனி, 30 ஜூலை, 2022

தன்னேரிலாத தமிழ் –479: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –479: குறள் கூறும்பொருள்பெறுக.

 

631

 கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்டது அமைச்சு.


ஓர் அரிய வினையைச் செய்து முடிப்பதற்கு உரிய கருவி (உத்தி),  ஏற்ற காலம்,   செயல் திறன் (திறமிக்கவர்கள்) ஆகிய எல்லாவற்றையும் ஆராய்ந்து உரைக்க வல்லவர்களே அமைச்சராவர்.


திங்கள் அமிர்த கிரணம் மிகச் சீதளமே

திங்களினும் சந்தனமே சீதளமாம் இங்கு இவற்றின்

அன்பு அறிவு சாந்தம் அருள் உடையார் நல்வசனம்

இன்பம் மிகும் சீதளம் ஆமே.” ---நீதிவெண்பா, 95.


திங்களின் அமுது போன்ற ஒளி குளிர்ச்சியைத் தரும்; அதைக் காட்டிலும் குளிர்ச்சியைத் தரக்கூடியது சந்தனம் ; திங்கள், சந்தனம் ஆகிய இரண்டைக் காட்டிலும் மிகுந்த குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை அன்பு, அறிவு, பொறுமை, அருள் ஆகியவற்றை இயல்பாய் பெற்றிருக்கின்ற, நல்லவர்களின் நல்ல உள்ளங்களில் இருந்து எழும் நல்ல சொற்களே.

வெள்ளி, 29 ஜூலை, 2022

 

தன்னேரிலாத தமிழ் –478: குறள் கூறும்பொருள்பெறுக.

 

629

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்

துன்பம் உறுதல் இலன்.


 இன்பமானவற்றை எண்ணி இன்பம் கொள்ளாதவன், துன்பம் வந்துற்றபோது  துயரம் கொள்ளான். வாழ்வில் இன்பமும் துன்பமும் ஒரு நாணயத்தின் இரண்டு  பக்கங்கள் போன்றவையே.


இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்

 நன்பகல் அமையமும் இரவும் போல

 வேறு வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து

 உள என உணர்ந்தனை ஆயின் ஒரூஉம்

இன்னா வெஞ்சுரம் நன்னசை துரப்பத்

துன்னலந் தகுமோ துணிவில் நெஞ்சே.”அகநானூறு, 327.


 நெஞ்சே….!  இன்பமும் துன்பமும் புணர்தலும் பிரிதலும் நல்ல பகல் பொழுதும் இரவுப் பொழுதும் போல, வேறு வேறு இயல்பு உடையனவாகி மாறாக எதிர்ப்பட்டு  நிற்பன என உணர்ந்தனையாயின், இவளை நீங்கிச் செல்லும்  துன்பம் தரக்கூடிய  கொடிய பாலைவழியில், நல்ல பொருள் வேட்கைத் தூண்ட, தலைவியைப் பிரிந்து செல்லலும் தகுமோ..?

வியாழன், 28 ஜூலை, 2022

தன்னேரிலாத தமிழ் –477: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –477: குறள் கூறும்பொருள்பெறுக.

 

625

 அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற

 இடுக்கண் இடுக்கண் படும்.


ஒன்றன் பின் ஒன்றாகத் துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் அவற்றை மனம் தளராது எதிர்த்து நிற்பவனிடத்துத் துன்பங்கள் துன்பப்பட்டுப் போகும்.


உடற்கு வரும் இடர்  நெஞ்சு ஓங்கு பரத்து உற்றார்

அடுக்கும் ஒரு கோடியாக நடுக்கம் உறார்.”நன்னெறி, 29.


உயர்ந்த பொருளான தவத்தால் விளையும் பயன்பெற  மனம் வைத்தவர்கள், (ஞானிகள்) தன்னை நாடிவரும் துன்பங்கள் கோடி எண்ணிக்கை உடையவை என்றாலும் அச்சம் கொள்ளமாட்டார்கள்.