தமிழமுது –171– தொல்தமிழர் இசை மரபு:
சான்றோர் ஆய்வுரை – 31. தமிழால் வீடுபேறு
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.
மணிவாசகர் இறைவனோடு கொண்ட உறவில் லாபநட்டக் கணக்குப் போட்டுப் பார்ப்பார்.....!
“தந்தது உன் தன்னைக் கொண்டது என் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன்று இல்லா ஆனந்நம் பெற்றேன்
யாதுநீ பெற்றதுஒன்று என்பால்
சிந்தையே கோயில் கொண்டஎம் பெருமான்
திருப்பெருந்துறை யுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்
்யானிதற்கு இலன் ஓர்கைம்மாறே”
என்று மணிவாசகர் கேட்கின்றார்.
“நான் கடைக்கோடி ஆன்மா..! கடையனினும் கடையன், பேரின்பப் பெருவெள்ளத்தில் நீந்தித் திளைக்கின்றேன், யாது நீ பெற்றது ஒன்று என்பால்?” என்று மணிவாசகர் கேட்கின்றார்.
இறைவன் எண்ணிக்கொள்கின்கிறார்..”ஆன்மாவை ஈடேற்றும் அரும்பெருபணி உலகத் தலைவன் இறைவனின் பணி.
மணிவாசகரை ஆட்கொள்ள குதிரைச் சேவகனாய், கொற்றாளாய் கூலியாளாய் மண் சுமந்தான். பிரம்படி பட்டான் , மணிவாசகர் எனும் ஆன்மாவை பொன் மேனி புண் சுமந்தான்! மணிவாசகர் எனும் ஆன்மாவை ஈடேற்ற இவ்வளவு அல்லல்பட வேண்டியிருந்தது. உலகத்தில் உள்ள அத்தனை கோடி ஆன்மாக்களையும் ஈடேற்ற எவ்வளவு அல்லல்படுவது.
இறைவனுக்கு மணிவாசகர் வழியே திருவாசகம் கிடைத்த பிறகு மனிதர்கள் எப்பொழுதெல்லாம் திருவாசகத்தை ஓதுகின்றார்களோ அவர்கள் இறைவனின் திருவருள் இன்பத்தை எளிதாகப் பெறுவார்களாம்.! ஆன்மாக்களை ஈடேற்ற வேண்டிய உயிர்க்குலத் தலைவனாகிய ஆண்டவனின் கடமையைத் திருவாசகம் செய்துவிடுவதால், உயிர்க்குலத்தை ஈடேற்றும் கருவியாகத் திருவாசகம் இறைவனுக்குக் கிடைத்துவிட்ட காரணத்தால் இறைவன் தான் தான் மணிவாசகரோடு கொண்ட உறவினால் ‘சதுரர்’ ஆனோம் (ஆதாயம் பெற்றவர்) என்று நெகிழ்ந்து மகிழ்வார்.!,
“ ஒரு மொழியால் அறிவைப் பெறலாம்
ஒரு மொழியால் ஞானத்தைப் பெறலாம்
ஒரு மொழியால் வீடுபேற்றை அடைய இயலுமா?
அடைய இயலும்..!என்று நிரூபித்ததுதான்
நம் அருமைத் தமிழ்மொழி! சமயத்தால் தமிழ் வளர்ந்தது!
சமயம் வளர்த்த செம்மைத் தமிழைப் போற்றுவோம்.,
தமிழ் வளர்த்த சமயநெறியைப் போற்றுவோம்!.
சமயம் வளர்த்த செம்மைத் தமிழை ஆழ்வார்களும் நாயன்மார்களும் திருக்கோயில் தலம்தோறும் சென்று தமிழிசையைப் பேணி வளர்த்தனர்.
”ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக்கு உடனாகி
மாழைஓண்கண் பரவையைத் தந்து ஆண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே.”