செவ்வாய், 27 செப்டம்பர், 2011

சங்க இலக்கியச் செய்திகள் -4

பசுமழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய
சிதட்டுக்காய் எண்ணின் சில்பெயற் கடைநாள்
சேற்று நிலை முனைஇய செங்கண் காரான்
நள்ளென் யாமத்து ஐ எனக் கரையும்
அஞ்சுவரு பொழுதி னானும் என்கண்
துஞ்சா வாழி தோழி காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி என்
நெஞ்சுபுண் உற்ற விழுமத் தானே
                கழார்க் கீரன் எயிற்றி, குறுந்.261:3-8
உரை: தோழி, என் நெஞ்சம் புண்பட்ட  துயரத்தால் எனக்கு உறக்கம் வரவில்லை.முன்பு பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாத மழை பின்பு பெய்ததால் எள் பயிர்கள் உள்ளீடு இல்லாத வெறுங் காய்களைப் பெற்றன.சிறிதாக மழை பெய்யும் கார்ப் பருவக் கடைசி நாட்களில் சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களுடைய எருமை, இருள் செறிந்த நடுச் சாமத்தில் ஐ எனக் கத்துகின்ற அச்சம்தரும் வேளையிலும் நாழிகைக் கணக்கர் இரவு முழுவதும் உறங்காது விழித்துக் காலக் கணக்கை ஆராய்ந்து அறிவிக்கும் காலத்திலும் என் கண்கள் உறங்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக