புதன், 12 நவம்பர், 2025

தமிழமுது –170 – தொல்தமிழர் இசை மரபு:...தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். ..

 

தமிழமுது –170 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 30.

தமிழால் வீடுபேறு

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

 

நிலையாமை என்பது வாழ்க்கையைச் செயலற்ற தன்மை ஆக்குவதற்கு அல்ல. காலத்தின் விரைவு கருதி அறத்தின் வழியில் செயல்களை விரைந்து செய்வதற்கே….!

 

“நல்லதோர் வீணை செய்தே அதை

நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ ?”

 

 என்று பாரதி கேட்டதைப்போல,  வாழ்க்கைய மதிக்காத போக்கிற்கு விடை கொடுக்கத்தான்.

வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின் என்று வலியுறுத்தியது தமிழர் சமய நெறி.

 

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

 வாழத்தான் வேண்டும்!

வாழ்வதற்கு என்ன தேவை ?

மாடமாளிகை கூட கோபுரங்களா?

வங்கியின் மூலதனமா..?

 

 ”வாழ்க்கைக்குப் பொருள் தேவை ! அதைப்போல நாம் வாழ்வதிலும் பொருள் தேவை” நான் வாழ்ந்தால் போதாது. நாம் வாழவேண்டும் என்ற எண்ணம் இதயத்தில் வேண்டும்.  வீட்டிற்கும் வீதிக்கும் இணைப்பு இருத்தல் வேண்டும். தன் வாழ்க்கை தன்னல வட்டத்தில் அமைந்துவிடக் கூடாது. தன்னல் வட்டத்தில்  அமைந்த வாழ்க்கை  நன்மை எது ? தீமை எது ? என்று தெரியாத தடுமாற்றத்தில் தீமையை நன்மையாகக் கருதி, விட்டில் பூச்சி, ,விளக்கொளியில் மடிவதுபோல் முடிந்து போகும்.

 

 யானே பொய் ; என் நெஞ்சகம் பொய்; என் அன்பும் பொய், ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமோ ?” என்று அழுது அழுது ஆண்டவனைத் தொழுவார் மணிவாசகப் பெருமான்.

 “ ஏசிடினும் யான் உன்னை ஏத்தினும் என்பிழைக்கே குழைந்து  வேசறுவேனை விடுதி கண்டாய்.” என்று போற்றிடினும் புழுதி வாரித் தூற்றிடினும் என் பிழை களைந்திடும் பெருமான் ..” என்று போற்றுவதன் மூலம் இறையருளின் தாயன்பை உணரமுடிகிறது.

பண் சுமந்த பாடல்களுக்காய் மண் சுமந்தான் அவன் தன் பொன்மேனி புண் சுமந்து ; இனிய தீந்தமிழ் பாடல் நாளும் பொற்காசு கொடுத்து விரும்பிக் கேட்டான்.

 

 “ பண் சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்

பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்

விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்தீசன்

 கண் சுமந்த  நெற்றிக் கடவுள் கலிமதுரை

மண் சுமந்து கூலி கொண்டு அக்கோவால் மொத்துண்டு

புண் சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்.”

 

 ஊன் உருகும், உயிர் உருகும் திருவாசகத்தை இறைவன் தாமே தம் கைப்பட் எழுதிக்கொண்டான் என்பார்கள்.

 

ஜி.யு. போப் எந்தக் கடிதம் எழுதும் பொழுதும் திருவாவகத்தை மேற்கோள் காட்டி எழுதுவாராம். அப்படி எழுதும் பொழுது திருவாசகம் உயிரின் உணர்வினைத் தட்டி எழுப்பியதால், ஊற்றெழும் அன்பினால் கண்ணீர்த் துளிகள் சொரியும், விழுந்த கண்ணீர்த்துளிகள்  கடிதத்தில் சில எழுத்துக்களையே அழித்து விடுமாம் , ஜி.யு. போப் கண்ணீர்த்துளியால் கரைந்த எழுத்துக்களோடு கடிதத்தை அனுப்புவாராம். கண்ணீர்த்துளிகளால் கரைந்த எழுத்துக்கள் உள்ள கடிதத்தை மாற்றி வேறு கடிதம் அனுப்ப மனமில்லை “ திருவாசகத்தால் எழுந்த கண்ணீரும் புனிதத் தன்மை வாய்ந்த்து.” என்பதால் கடிதத்தை அப்படியே அனுப்பியுள்ளேன் என்பாராம் ஜி.யு.போப்.

 

 மணிவாசகர் இறைவனோடு……..தொடரும்……………….


செவ்வாய், 11 நவம்பர், 2025

தமிழமுது –169 – தொல்தமிழர் இசை மரபு:....தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

 

தமிழமுது –169 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 29.

தமிழால் வீடுபேறு

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

 

”எது செழுந்தமிழ் வழக்கு…?” பண்ணோடு கலந்த பைந்தமிழை இசையோடு கலந்த இன்பத்தமிழை வெறுத்து ஒதுக்காமல் வாழ்நெறிமுறைப்படி வாழச்சொன்னது தமிழ்நெறி.

 

தொன்மையான நம் தமிழ்மொழி எழுத்துக்களின் கூட்டம் அல்ல ! சொற்களின் குவியல் அல்ல ! ஒலிகளின் முழக்கம் அல்ல ! வாழ்க்கையின் வடிவம் நம் அன்னைத் தமிழ்மொழி. எழுத்துக்கும் சொல்லுக்கும்  இலக்கணம் பேசிய மொழிகளுக்கு நடுவே வாழ்க்கைக்கு இலக்கணம் பேசியது நம் அருமைத் தமிழ் மொழி !.

 

குழந்தையின் அழுகை, தாயின் தாலாட்டு முதல் கல்லறையின் கண்ணீர்த்துளிகள் வரை விழி எனும் மொழியின் ஒலிதானே !

 

“ கருத்துக்கள் பேசினால் உரைநடை !

கற்பனை பேசினால் கதை !

உணர்ச்சிகள் பேசினால் கவிதை !

ஒப்பனை பேசினால் ஓவியம் !

நளினங்கள் பேசினால் நாட்டியம் !

நடிப்பு பேசினால் நாடகம் !

உயிரின் துடிப்பு பேசினால் தாயின் மொழி அன்றோ!

அதுவே தாய்மொழி அன்றோ !

ஐயிரு திங்கள் குருதிக் குளத்தில் குளித்து உயிரைத் தந்தவள் தன் உயிர்த்துடிப்பு அன்னை மொழியாகும் !”

 

சீர்காழிப்பதியில் திருத்தோணிப்புரத்துக் கரையில் அழுத குழந்தைக்கு  உலகத்தின் அன்னை,  நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்த பேரன்புடன் ஞான அமுதை ஊட்டினாள்.

அழுத குழந்தை மொழிந்த மொழி எல்லாம் தேனார் தீந்தமிழ் விருந்து ! “எனதுரை தனதுரை” என்று அந்த ஞானக் குழந்தை பிரகடனம் செய்தது ! “தான் மொழிவது எல்லாம் இரைவனின் வாக்கே” என்று ஞானக் குழந்தை தெய்வக்குரலாய் ஒலித்தது !

 

  தடுமாறி நின்ற மானுடத்தை நெறிப்படுத்தவும்,  சரிப்படுத்தவும், வழிப்படுத்தவும், “ஆணை நமதே” என்று நம்பிக்கையுடன் பிரகடனம் செய்தது. செழுந்தமிழ் வழக்கு அயல் வாழ்க்கை வென்று எடுத்த பெருமை அந்த ஞானக்குழந்தை ஞானசம்பந்தப் பெருமானுக்கே உண்டு ! ஞானசம்பந்தர் திசை அனைத்தின் பெருமை எல்லாம்  தென் திசையே  வென்று ஏறச் செய்தார்.

 

நிலையாமை என்பது…………………….தொடரும்………..

 


திங்கள், 10 நவம்பர், 2025

தமிழமுது –168 – தொல்தமிழர் இசை மரபு:...........நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

 

தமிழமுது –168 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 28.

முத்தமிழிசை.

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

 

இராமன் வனம் புகுவான் என்ற சொல்லைக்கேட்ட அளவில் அயோத்தி மாநகரம் எய்திய துயரத்தைக் கம்பர் வருணித்திருக்கும்  பாடலில் இரண்டை நோக்குவோம் .

 

 “ ஆவும் அழுத அதன் கன்றழுத அன்றலர்ந்த

பூவும் அழுத புனற் புள்ளழுத கள்ளொழுகும்

காவும் அழுத களிறு அழுத கால் வாய்ப்போர்

மாவும் அழுத அம்மன்னவனை மானவே.” – 98.

 

“ கையால் நிலந்தடவிக் கண்ணீர் மெழுகுவர்

உய்யாள் பொற் கோசலையென்று ஓயாது வெய்துயிர்ப்பார்

ஐய இளங்கோவே ஆற்றுதியோ நீயென்பார்

நெய் ஆர் அழலுற்றது உற்றார் அந்நீணகரார்.” - 104

 

அவலச்சுவை என்னும் சோகரசம் இவற்றில் எவ்வளவு ததும்புகின்றது பாருங்கள்.

 

 “செல்லும் சொல வல்லானெதிர் தம்பியும் தெவ்வர் சொல்லும்

“சொல்லுஞ் சுமந்தேன் இருதோள் எனச் சூம்பியேங்கும்

கல்லுஞ் சுமந்தேன் கணைப் புட்டிலும் கட்டமைந்த

வில்லும் சுமக்கப் பிறந்தேன் வெகுண்டு என்னையென்றான்”- 135.

 

சீற்றம் தணியுமாறு கூறிய இராமருக்கு எதிராக எனது சீற்றத்தால் என்ன பயன் என்று இலக்குமனன் கூறும் மாற்றத்திலும், அவனது கோப உணர்ச்சி பொங்கித் ததும்புதலை அங்கை நெல்லிக்கனி எஅனக் காட்டும் இச்செய்யுளின் அருமையை நோக்குங்கள்.

 

 இனி, சுந்தரமூர்த்திகள் பரவை நாச்சியாரைக் கண்டதனைத் தெரிவிக்கும் பெரியபுராணம்…..

 

“ கற்பகத்தின் பூங்கொம்போ காமந்தன் பெருவாழ்வோ

பொற்புடை புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து

விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக் கொடியோ

அற்புதமோ சிவனருளோ அறியேன் என்று அதிசயித்தார்.” – 140.

 

என்னும் அருமைத் தெய்வப் பாடலில் விளங்கும் உவகை வியப்பு, என்னும் சிருங்காரா,அற்புத உணர்ச்சிகளை எங்ஙனம் அளவிட்டு உரைக்க வல்லேம்.

இங்ஙனம் இவ்விசை மயமாக இருக்கும் செந்தமிழ்ப் பாடல்கள் பாற்கடல் போல் பரந்துள்ளன. அவற்றை எல்லாம் படித்தறிந்து இன்புற வேண்டுவது தமிழ் மக்கள் கடனேயாகும்.

………… …தொடரும்……………………

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 

ஞாயிறு, 9 நவம்பர், 2025

தமிழமுது –167 – தொல்தமிழர் இசை மரபு:..........நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

 

தமிழமுது –167 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 27.

முத்தமிழிசை.

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

 

 

இயற்றமிழ் இசை :

இயற்றமிழை நோக்கின்  அதுவும் இசையுடன் விரவியே நடைபெறுதல் புலனாகும். தொல்காப்பியனார் சொற்றொடர்களின் ஓசை அமைதிக்கு வண்ணம் என்று பெயர் கொடுத்து, அதை இருபது வகைப்படுத்தியுள்ளனர். வல்லெழுத்துப் பயின்று வருவது வல்லிசை வண்ணம், மெல்லெழுத்துப் பயின்று மெல்லிசை வண்ணம். நெட்டெழுத்துப் பயின்று வருவது நெடுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்து பயில்வது குறுஞ்சீர் வண்ணம். என்று இவ்வாறு வண்ணங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதனாலும்  செய்யுள்கள் எல்லாம் எதுகை, மோனை, முதலிய தொடை விகற்பங்களோடு பாடப்படுதலாலும் இயற்றமிழ்ப் பாக்களும் இசையமைதி பெற்றிருப்பது நன்கு புலனாகும். வெண்பா முதலிய பாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான இசையுடனேயே பண்டு  தொட்டு ஓதப்படுகின்றன. அவற்றுள்ளும் கலிப்பா, பரிபாட்டு என்பவற்றை இசைப்பாக்கள் என்றே  பேராசிரியர் முதலிய பேருரையாளர்கள் கூறுவாராயினர். எட்டுத்தொகையுள் ஒன்றாகிய  பரிபாடல் செய்யுட்கள் ஒவ்வொன்றுக்கும் பண் வகுத்திருப்பதும் நோக்கற்பாலது.  பாலை யாழ்,நோதிறம் காந்தாரம் என்ற பண்கள் அதில் குறிக்கப்பட்டுள்ளன. இசை வகுத்தோராக ஒரு பதின்மர் பெயர் அதிற் காணப்படுதலின், அப்பொழுது இசைவாணர்கள் எவ்வளவு மிகுதியாக இருந்திருத்தல் வேண்டும், என்று கருதலாகும். மற்றும் வெண்பா முதலிய பாக்களுக்கு இனமாக வகுக்கப்பெற்ற தாழிசை, துறை முதலாயினவும் இசைப்பாக்களே யாதல் வேண்டும்.

மற்றும், மக்களுடைய உள்ளக்கிளர்ச்சியாகிய வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், வெகுளி, நகை, சாந்தம் என்பவற்றை மெய்ப்படத் தோற்றுவிக்கும் கவிதைகள் எல்லாம் இசையமைதி உடையனவே என்னலாம். தொல்காப்பிய மெய்ப்பாட்டியியலில் உள்ள உணர்ச்சியாகிய சுவைகளுக்கு இலக்கணம் கூறப்பட்டிருத்தலின் அக்காலத்திலேயே அத்தகைய செய்யுட்கள் மிக்கிருந்தனவாதல் வேண்டும். நமக்குக் கிடைத்துள்ள இடைக்காலத்து நூல்களிலும் சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரிய புராணம்,  முதலிய சுவை உணர்ச்சிகள் த்தும்பப் பெற்ற பாடல்களால் அமைந்தனவாகும்.

 

இராமன் வனம் புகுவான்………… …தொடரும்……………………

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 

சனி, 8 நவம்பர், 2025

தமிழமுது –166 – தொல்தமிழர் இசை மரபு:.............நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

 

தமிழமுது –166 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 26.

முத்தமிழிசை.

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

 

ஜநத ராகங்கள் பண் என்றும் ஜந்ய ராகங்கள் திறம் என்றும் கூறப்பட்டன. இசைப்பாட்டுக்கள் எல்லாம்  செந்துறை, வெண்டுறை, வரி, உரு முதலியவற்றில் எத்தனையோ பலவகைகள் உண்டு.  இப்பொழுது கீர்த்தனங்கள்  என்று கூறப்படுவன  உருக்களில் அடங்குவனவாகும். பல வகையான கூத்துக்களோடும் வரிப்பாடல்கள் பாடப்பட்டன.  கொற்றி, பிச்சி, சித்து, சிந்து, ஆண்டி, அம்மானை, பந்து, கழங்கு உந்தி, தோள்வீச்சு, சாழல், தெள்ளேணம்,  முதலிய எண்ணிறந்த கூத்துவகைகளும்  அவற்றிற்குரிய பாடல்களும் பயிற்சியில் இருந்தன.  அவை பெரும்பாலும் மகளிருடைய விளையாட்டுகளாக விளங்கின.

 

மற்றும் மகளிர் கிளியோட்டுவதும் பாட்டு,  சாந்து இடிப்பதும்  உழத்தியர் நாற்று நடுவதும் பாட்டு, களை பறிப்பதும்  பாட்டு, இவ்வாறு எல்லாச் செயல்களும் பாட்டுகளோடு நிகழ்ந்தன.  இவற்றால் முற்காலத்தில் தமிழகத்திருந்த ஆடவரும் மகளிரும் இசையும் கூத்தும் ஆகிய இன்ப விளையாட்டுகளால்  களி சிறந்து, உடம்பும் உள்ளமும் தளிர்ந்திருந்தனர்.  என்னும் உண்மை புலனாகும் என்க.

அம்மானை, பந்து, ஊசல், வள்ளை என்னும் வரிப்பாட்டுகளைச் சிலப்பதிகாரத்தில் காணலாகும். அன்பே வடிவாகிய மாணிக்கவாசகப் பெருமான் ஓதுவார் உள்ளத்தை உருக்கும் திருவாசகத்திலே தெள்ளேணம், சாழல், தோள்நோக்கம் உந்தி முதலிய வரிப்பாடல்களை அமைத்துள்ளார்.

தமிழிலே ஒப்பற்ற இசைப் பாக்களாக  சிலப்பதிகாரத்தில் உள்ள கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்சூழ் வரி, குன்றக் குரவை, வாழ்த்துக் காதை  என்னும் ஆறு காதைகளும் இசைப்பாக்களின் தொகுதியேயாகும்.

“ பவள வுலக்கை கையாற் பற்றித்

தவள முத்தங் குறுவாள் செய்கண்

தவள முத்தங் குறுவாள் செய்கண்

குவளை யல்ல கொடிய கொடிய” -  கானல் வரி.

“பொன்னி லங்கு பூங்கொடி பொலஞ்செய் கோதை வில்லிட

மின்னி லங்கு மேகலையா ளார்ப்ப வார்ப்ப வெங்கணும்

தென்னன் வாழ்க வாழ்க வென்று சென்று பந்தடித்துமே

தேவ ரார மார்பன் வாழ்க  வென்று பந்தடித்துமே.”- வாழ்த்துக்காதை.

 

 தேவாரம் , திருவாசகம்,  திருவிசைப்பா, திருவாய்மொழி, முதலியனவோ, வானோரும் அளவிடற்கரிய சிறப்புடைய இசைப் பெருஞ் செல்வக் களஞ்சியகளாகும்.

 

இயற்றமிழ் இசை : ……தொடரும்……………………

 

வெள்ளி, 7 நவம்பர், 2025

தமிழமுது –165 – தொல்தமிழர் இசை மரபு:..........நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

 

தமிழமுது –165 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 25.

முத்தமிழிசை.

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

 

 

 ஏறக்குறைய நாலாயிரம் ஆண்டுகளின் முன் தோன்றிய பேரிலக்கணமாகிய தொல்காப்பியத்தில், இசை பற்றிய குறிப்புகளும், இசைபாடுதலையே தொழிலாகவுடைய பாணர் முத்லானவர்களைப்பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. அந்நூலிலே முல்லை, குறிஞ்சி மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து நிலங்கட்கும் வெவ்வேறுவகையான யாழ் அல்லது பண் உண்டு என்று குறிப்பிடப்படுவதால், அக்காலத்தே தமிழகம் முழுவதும் இசைக்களை பரவியிருந்ததென்பதும் எவ்வக்க் குடிமக்களும் இசையுணர்ச்சி உடையராய் இருந்தனர் என்பதும் பெறப்படும்.

 இரண்டாயிரம் ஆண்டுகளின்முன் விளங்கிய தெய்வப்புலமைத் திருவள்ளுவர் குழல், யாழ் என்னும் இசைக் கருவிகளைப்பற்றியும் பண்ணைப்பற்றியும் திருக்குறளில் கூறியுள்ளார் மற்றும் சங்க இலக்கியங்கள் பலவற்றிலும்  அவை பற்றிய குறிப்புகள் உள்ளன.

 சிலப்பதிகாரக் காப்பியத்தில் இசைக்கருவிகளின் பெயர்களும் இலக்கணங்களும் கருவிகளிலும் கண்டத்திலும் இசைகள் பிறக்கும் முறைமையும் பிறவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.

 அக்காலத்திலே, பேரியாழ், மகரயாழ்,  சகோடயாழ், செங்கோட்டியாழ், என நால்வகை யாழ்கள் இருந்தன. பேரிகை, இடக்கை, உடுக்கை,   மத்தளம், திமிலை, குடமுழா, தண்ணுமை, தடாரி,  முதலிய (31) முப்பத்தொருவகைத் தோற்கருவிகள், வாசிக்கப்பட்டன. ஆயிரம் நரம்புடைய ’ஆதியாழ்’ என்பதொன்று இருந்ததென்றும், ஆதியிசை (11,991) பதினொராயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்று என்றும் கூறினால், பெரும்பாலார் வியப்படையக்கூடும்.

“உயிருயிர் மெய்யன வுரைத் தைம்பாலினும்

உடறமி  ழயலிசை யேழுடன் பகுத்து

மூவேழ் பெய்தந்………………………..

தொண்டு மீண்ட பன்னீ ராயிரம்

கொண்டன ரியற்றல் கொளை வல்லோர் கடனே.” – சிலம்பு , உரை.

ஆனால் பழந்தமிழ் நூல்கள் அவற்றின் உண்மையைத் தெரிவிக்கின்றன.

 ஷட்ஜம் முதலிய ஏழிசைகளும் – குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி,  தாரம் என்னும் தமிழ்ப் பெயர்கள் வழங்கின. இப்பொழுது ஆலாபனம் என்பது ஆளத்தி என்னும் பெயரால் வழங்கிற்று. த,ந, ம,  என்னும் மூன்று மெய்யினங்களோடு குற்றெழுத்து ஐந்தும், நெட்டெழுத்து ஐந்தும் தென்னா, தெனா என்னும் அசைகளும் ஆளத்தி செய்தற்கு உரியவாயிருந்தன. மூலாதாரம் தொடங்கி, எழுத்தின் நாதம் ஆளத்தியாய், பின்பு இசையென்றும் பண் என்றும் பெயர் பெறலாயின.

ஜநத ராகங்கள் பண் என்றும் ஜந்ய ராகங்கள் திறம் என்றும் கூறப்பட்டன………………………….

………………தொடரும்………………………….

வியாழன், 6 நவம்பர், 2025

தமிழமுது –164 – தொல்தமிழர் இசை மரபு:.....நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

 

தமிழமுது –164 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 24.

முத்தமிழிசை.

நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்து, செவிப்புலனைக் குளிர்வித்து, உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையேயாகும்.

தும்பி, வண்டு, குயில், பூவை முதலிய உயிர்களிடத்து இவ்வின்னோசை இயற்கையாகவே அமைந்து இன்பம் செய்கின்றது. மக்கள், தம் நுன்ணறிவு மாட்சியால், பற்பல வகையாகிய இன்னிசைகளைத் தம் மிடற்றிலிருந்தும், கருவிகளிலிருந்தும் எழுப்புகின்றனர். இசை இயல்புகளையும் வேறுபாடுகளையும் சிறப்பாக அறியாவிடினும் பொது வகையில் இசையை விரும்பாதவர்கள் யாருமில்லை.

 பச்சிளங்குழவியும் இசையை விழைகின்றது. ஆவினங்கள், இசையைக் கேட்டு அசையிடாதிருக்கின்றன. யானை முதலிய வனவிலங்குகளும், பாம்பு முதலியனவும்  இசைக்கு வசமாகின்றன. அறிவே உருவாகிய ஆண்டவனும் இசையை விரும்புகின்றான். அவன் இசை வடிவமாக இருக்கின்றான் என்றும்  இசையின் பயனாக உள்ளான் என்றும் இசை பாடுகின்றான் என்றும் ஆன்றோர் கூறுவர். “ஏழிசையாய் இசைப் பயனாய்” என்று சுந்தரரும், “எம்மிறை நல்வீணை வரிசங்குமே” என்று அப்பரும் கூறுதல் காண்க. கலைகட்கெல்லாம் தெய்வமாகிய நாமகள் கையில் வீணையை அமைத்துள்ள நம் முன்னோர்கள் இசைக் கலையை எவ்வளவு சிறந்தாதாகப் போற்றியிருத்தல் வேண்டும்.?.

 

இனி, தமிழ்மக்கள் பண்டுதொட்டு இசையை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதனைத் தமிழ் நூல்களின் ஆதரவைக்கொண்டு நோக்குவோம்.

  தமிழ்மொழியானது மிகப்பழைய காலத்தில் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என மூன்று பெரும் பிரிவுடையதாக இருந்தது.  அதனால் முத்தமிழ் என்ற வழக்கு உண்டாயிற்று. பழைய சங்க காலங்களில் முத்தமிழுக்கும் இலக்கண இலக்கியங்கள் பற்பல இருந்தன.  ஆசிரியர் அகத்தியனார் இயற்றிய அகத்தியம் என்பது முத்தமிழ் இலக்கணமே. தலைச் சங்கப் புலவர்கள் இயற்றிய ’பெருநாரை’, பெருங்குருகு’ என்பனவும் நாரதர் இயற்றிய ‘பஞ்ச பாரதீயம்’, அகத்தியர் மாணாக்கராகிய சிகண்டி என்பவர் இயற்றிய ‘இசை நுணுக்கம்’ முதலியனவும் பழைய இசைத்தமிழ் நூல்களாம்.

 

 ஏறக்குறைய நாலாயிரம் ஆண்டுகளின் முன் தோன்றிய……….

 

………………தொடரும்………………………….

புதன், 5 நவம்பர், 2025

தமிழமுது –163 – தொல்தமிழர் இசை மரபு:.................முனைவர் ராம. கெளசல்யா.

 

தமிழமுது –163 – தொல்தமிழர் இசை மரபு:

சான்றோர் ஆய்வுரை – 23.

தமிழிசை.

முனைவர் ராம. கெளசல்யா.

தேவாரப்பண்களுக்குத் தற்போது வழங்கப்படும் பெயர்கள்:

தேவாரப் பண்                            தற்போது வழங்கப்படும் பெயர்கள்

1. திரு நேரிசை --à ஹரிகாம்போதி

2. திருத்தாண்டகம் ----à ஹரிகாம்போதி.

3. காந்தாரம் ------à நவரோஸ்

4. திருக்குறுந்தொகை --à மாயா மாளவ் கெளளம்.

5. திருவிருத்தம் -----.> பைரவி

6. சீகாமரம் -----à நாத நாமக்கிரியை.

7. குறிஞ்சி ----à குறிஞ்சி.

8. மேகராகக் குறிஞ்சி ----à நீலாம்பரி

9. இந்தளம்-----à நாதநாமக்கிரியை.

10.    கொல்லி ----à நவரோஸ்.

11.    நட்டராகம் --àபந்துவராளி.

12.    கெளசிகம் ---à பைரவி.

13.    நட்டபாடை --à நாட்டை.

14.    தக்கேசி ---àகாம்போதி.

15.    சாதாரி -----àகாம்போதி.

16.    காந்தார பஞ்சமம் ---à கேதாரகெளளம்.

17.    புறநீமை --à பூபாளம்

18.    கொல்லிக் கெளவாணம் --àநவரோஸ்.

19.    செந்துருத்தி -----à மத்யமாவதி.

20.    பஞ்சமம் ----à ஆகரி.

21.    பழம்பஞ்சுரம்-------à சங்கராபரணம்.

தமிழ் - ஏழிசைப் பெயர்கள்: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்.

 தமிழர்களின் தனிப் பெரும் அடையாளமாகிய இசைக்கலை  தனக்கே உரித்தான அடையாளங்களுடன் சிறந்து விளங்குகிறது. இளைய தலைமுறையினரும் இதைப் புரிந்துகொண்டு  இப்பாடல்களை ஆர்வமுடன் கற்று மேடைகளிலும் பாடுகிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்கிறது. இந்த மகிழ்ச்சி என்றென்றும் நிலைக்க தமிழன்னை அருள் புரிவாள் என்று நம்புவோம். ( நன்றி, தினமணி செம்மொழிக்கோவை) ………………தொடரும்………………………….