தமிழமுது –254– தொல்தமிழர் இசை மரபு:114 நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
புத்துயிர் ஊட்டிய சிலப்பதிகாரம்.
ஐம்பெருங்காப்பியங்களுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. இலக்கிய நோக்கில் சிலப்பதிகாரம் சிறந்து விளங்குகிறது சமய நோக்கில் மணிமேகலை முதன்மை பெறுகின்றது, சிலம்பில் சமயத் தாக்குதல் இல்லை ; சமயப்பொதுமை போற்றப்படுகிறது. சிலம்பு முத்தமிழ்க் காப்பியம் என்று போற்றப்படுகின்றது.
முத்தமிழாவன இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்பன. சிலப்பதிகாரத்தை இயலிசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்றார் அடியார்க்குநல்லார். பொருளுணர்ச்சிக்குக் கருவியாய் வழங்கும் செய்யுளுமாகிய இலக்கியமும் அதன் இலக்கணமும் இயற்றமிழ் எனப்படும். பொருளையுணர்த்தும் உரைநடையோ செய்யுளோ இன்றி, இசை நாடகம் நடைபெறுதல் கூடாமையின் இயற்றமிழ் அவ்விரண்டிற்கும் அடிப்படையாகும். பண்ணோடும் தாளத்தோடும் கூடிய பாட்டுக்கள் இசைத்தமிழாகும். ஆடல், பாடல், அழகு என்ற மூன்றுங்கூடியது நாடகத்தமிழ். ஆடல் என்பதில் நிலை, உடற்றொழில், ஒற்றைக் கை,இரட்டைக்கைத் தொழில்கள் பாவக்ம் முதலிய பலவும் அடங்கும். நாடகத்தை அறிந்து இன்புறுதற்குக் கண்ணும் செவியும் வாயில்களாகும்.
இப்பொழுது இசைத்தமிழையும் நாடகத்தமிழையும் இயற்றமிழ்் பற்றுக்கோடாகவுள்ள இருவேறு கலைகள் எனலாம். உலகில் வேறு எம்மொழியாளரும் இசையையும் நாடகத்தையும் கலைவகையிற் சேர்த்து எண்ணினரன்றித் தம் மொழியின் கூறாக அவற்றைக் கொண்டிலர். தமிழ் மட்டுமே இசைத்தமிழ் என்றும் நாடகத்தமிழ் அவற்றைத் தமது மொழியுடன் ஒன்று படுத்தியுள்ளனர். பண்டைக் காலத்திலே தமிழ் நாட்டில் இயற்றமிழின்் இலக்கிய இலக்கணங்கள் பல்கியிருந்தமை போலவே இசை நாடகங்களின் இலக்கிய இலக்கணங்கள் பல்கியிருந்தமை ஒரு காரணமாதல் வேண்டும்.
சிலப்பதிகார உரையில் “ இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை, பெருங்குருகும், பிறவும் தேவவிருடிநாரதன் செய்த பஞ்சபாரதீப முதலாவுள்ள தொன்னூல்களும் இறந்தன ; பின்னும் முறுவல், சயந்தம் குணநூல், செயிற்றியம் என்பவற்றுள்ளும் ஒரு சார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முன் நடு இறுதி காணாமையின் அவையும் இறந்தன போலும்” என அடியார்க்குநல்லார் எழுதியிருப்பதும் மற்றும் சிலப்பதிகார மூலத்தாலும் உரைகளாலும் அறியப்படும் செய்திகளும் பழைய நாளிலே இசைநாடகங்கள் தமிழில் எவ்வளவு பெருக்கமுற்றிருந்தன என்பதைப் புலப்படுத்தும். நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.
............................................தொடரும்.................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக