. தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -8.
தொல்தமிழர் முருகன் வழிபாடு ; ஆறுபடைவீடுகள்.
திருமுருகாற்றுப்படை . திருப்பரங்குன்றம்.-1.
முனைவர் இரெ. குமரன்:
“மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்து
கரும்பும் மூசாச் சுடர்ப்பூங் காந்தள்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
பார்முதிர் பனிக்கடல் கலங்க உள்புக்கு
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்” . நக்கீரர்.42 - 46.
முருகன் குறிஞ்சிநிலத்தெய்வம் ; ஆதலின் அவனது கண்ணியாகிய செங்காந்தளின் சிறப்பு உரைக்கப்பெற்றது. குரங்குகளும் முற்றிலும் ஏறிப் பயின்று அறியா மரங்கள் நெருங்கிச் செழித்துள்ள, பக்க மலைச் சாரலில் உள்ள வண்டுகளும் மொய்க்காத, சுடர்போலச் சிவந்த காந்தள் பூக்களால் தொடுத்துக் கட்டிய , குளிர்ந்த பெரிய மாலையை அணிந்த திருமுடியை உடையவனாக விளங்குகிறான் முருகன். நிலம் முற்றுப்பெற்ற குளிர்ந்த கடலே கலங்கும்படி உள்ளே சென்று சூரபன்மாவாகிய தலைவனைக் கொன்ற - சுடர் விடுகின்ற இலைவடிவாகிய நெடுவேல்.
ஆற்றுப்படுத்துதல் :
“ சேவடி பரும் செம்மல் உள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்து உறையும்
செலவுநீ நயந்தனை ஆயின் பலஉடன்
நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே, “ - 62 – 66.
முருகக் கடவுளின் செவ்விய திருவடிகளை நினைக்கும் மேன்மையான மனத்தோடு, இம்மையில் நல்வினைகளை விடாது செய்யும் கொள்கையினால் மெய்யுணர்ந்து, எஞ்ஞான்றும் தங்குதற்குரிய நெறியில் செல்லும் செலவைப் புலவனே நீ விரும்பினாயானால் வீடு பேறு வாய்க்க வேண்டும் என்று உன் மனத்தில் எழுந்த அவா கைகூடுவதோடு, நீ, நினைத்த காரியங்கள் எல்லாம் நல்வினைப் பயனால் இப்பொழுதே அடையப் பெறுவாய்,
...............................தொடரும்.........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக