தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -34.
முனைவர் இரெ. குமரன்:
தொல்தமிழர் - வழிபாடு - நற்றிணை :
“வேனில் முருக்கின் விளைதுணர் அன்ன
மாணா விரல வல்வாய் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப்பலி உணீஇய
மன்றம் போழும் புன்கண் மாலை
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச்
செல்ப என்ப தாமே செவ் அரி
மயிர் நிரைத்தன்ன வார்கோல் வாங்கு கதிர்ச்
செந்நெல்அம் செறுவின் அன்னம் துஞ்சும்
பூக்கெழு படப்பைச் சாய்க்காட்டு அன்ன என்
நுதற்கவின் அழிக்கும் பசலையும்
அயலோர் தூற்றும் அம்பலம் அளித்தே. “ மூலங்கீரனார், நற். 73.
கோடைக்காலத்தில் செம்முருக்க மரத்தின் பூங்கொத்தில் பழுத்து முற்றிய நெற்றுப் போன்ற மாட்சிமை அற்ற விரல்களைக்கொண்ட வலிய வாயையுடைய பேய் வளமைமிக்க பழமையான ஊரிடத்தே தெய்வத்திற்கு வழிபாட்டோடு இடப்படும் ஊன் விரவிய பலிச் சோற்றை உண்ணுதற்காகத் தான் வாழும் பாழான மன்றத்தை இடித்துக்கொண்டு எழும். அவ்வாறு எழுகின்ற துன்புறத்தக்க மாலைப்பொழுதில், தலைவரோடு இருப்பினும் நாம் அஞ்சுவோம்.
இந்நிலையில் நாம் இங்குத் தனியே தங்குமாறு நம்மை விட்டு விட்டுச் சிவந்த மெல்லிய மயிரை நிரைத்து வைத்தாற் போன்ற நீண்டு திரண்ட வளைந்த செந்நெற் கதிர்களையுடைய வயல்களில் அன்னப்பறவைகள் துயில்கின்ற பொலிவு பெற்ற பூக்கொல்லைகளை உடைய திருச்சாய்க் கானத்தைப் போன்ற என் நெற்றிப் பசலை பரந்து அழிக்கும். அதனைக்கண்டு அயலவர் பழிச்சொல் தூற்றுவர். அப்பசலையையும் பழிச்சொல்லையும் எனக்கு அளித்து அவர் செல்கிறார் என்று பக்கத்திருப்போர் கூறுவர். இதனை நான் எவ்வாறு ஆற்றியிருப்பேன்.
( துணர் - கொத்து. ; மாணா - மாட்சிமையற்ற ; உணீஇய - செய்யிய எனும் வாய்பாட்டு வினையெச்சம் ; போழும் - பிளக்கும். ; வாங்கு - வளைந்த. ; கோல் - திரட்சி.; இனியான் என்பது முதற் குறிப்பெச்சம்)
.................This Blogger For Sale................... .......................................தொடரும்...........................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக