செவ்வாய், 24 நவம்பர், 2026

தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -75. வாழ்க்கையில் யாவரும் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் :

 தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -75. 

  முனைவர் இரெ. குமரன்: 6. கலித்தொகை: 

         தொல்தமிழர் -   

வாழ்க்கையில் யாவரும் பின்பற்றவேண்டிய  நெறிமுறைகள் : 

சங்கப்பாடல்கள் அனைத்தும் சிறப்பினவாயினும் அவற்றுள் மிகச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது இப்பாடல் .  

“ ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்  

  போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை   

பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்    

அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை    

அறிவு எனப்படுவது பேதையார் சொல் சொல் நோன்றல்   

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை   

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை   

முறை எனப்படுவது  கண்ணோடாது உயிர் வெளவல்   

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்” 

                                                   - நல்லந்துவனார், 133 : 6 – 14.

 விளக்கவுரை:  

ஆற்றுதல் என்பது இல்லற வாழ்க்கையில் வறுமை உற்றவர்க்கு ஒன்றை உதவுதல் .  

 போற்றுதல் என்பது நட்பாகக் கூடினாரைப் பிரியாதிருத்தல் .  

பண்பு எனப்படுவது உலக ஒழுக்கம் அறிந்து ஒழுகுதல்.  

அன்பு எனப்படுவது தன் சுற்றத்தாரைச் சினவாதிருத்தல்.   

அறிவு எனப்படுவது அறியாதார் தன்னைப் பார்த்துச் சொல்லும் சொல்லைப் பொறுத்துக் கொள்ளுதல்.   

செறிவு எனப்படுவது கூறியது ஒன்றைத் தான் என்றும் மறவாதிருத்தல்.  

 நிறைவு எனப்படுவது மறைவான ஒன்றைப் பிறர் அறியாது காத்தல். 

  முறை எனப்படுவது தீங்கு செய்தார் நம்மவராயினும் கண்ணோடாது அவர் குற்றத்திற்கேற்ப உயிரைக் கொள்ளுதல்.   

பொறை எனப்படுவது தன்னைப் போற்றாதவரிடம் பகை கொள்ளாது பொறுமையோடு இருத்தல். ( கிளை - சுற்றம் ; நோன்றல் - பொறுத்தல்.)   

                                      கலித்தொகை முற்றிற்று. 

..................................................தொடரும்.......................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக