தமிழமுது –260– தொல்தமிழர் இசை மரபு:120 நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு வீழ்ச்சியும் எழுச்சியும்
அயலவர்களாகிய களப்பிரர்களும் பல்லவர்களும் தமிழ்நாட்டை ஆட்சியாளர்களாக ஆகினர். பிற மொழிகளாகிய பாலியும் பிராகிருதமும் வடமொழியும் போற்றப்பெற்றமையாலும் பிற சமயங்களாகிய பெளத்தமும் சமணமும்செல்வாக்குப்பெற்றமையாலும் தமிழர்தம் மொழியும் இலக்கியமும் போற்றுவாரும் புரப்பாரும் இன்றிப் பொலிவிழந்து நலியத் தலைப்பட்டன, இயல்பான தமிழ் வளர்ச்சி தடைப்பட்டது. தமிழர்தம் கலைகளும் நாகரிகமும் நசுக்கப்பட்டன. எனவே இக்காலம் தமிழிலக்கிய ஆசிரியர்களால் இருண்டகாலம் என்று அழைக்கப்படுகிறது.
இசைமரபு எழுச்சி:
பல்லவர் ஆட்சியில் (கி.பி. 600 – 850.) களப்பிரர் காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த பெளத்தம் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வீழத் தலைப்பட்டது. அதேகாலத்தில் சமணம் வளர்ச்சி பெற்றது. அகச்சமயங்களாகிய சைவம் கி.பி 7ஆம் நூற்றாண்டு முதலும் வைணவம் கி.பி. 8ஆம் நூற்றாண்டிலிருந்தும் செழித்தன. ஒருபுறம் சைவமும் வைணமும் ; மறுபுறம் பெளத்தமும் சமணமும் அணிவகுத்துச் சமயப்போர் நிகழ்த்தின.
பல்லவ மன்னன்முதலாம் மகேந்திரன் கி.பி. (615 – 630.)
சமணர்களின் துண்டுதலால், சைவ சமயக் குரவராகிய திருநாவுக்கரசருக்குக் கொடுமைகள் பல இழைத்த காலத்தில் சமயப் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தது. மகேந்திரவர்மன் தான் எழுதிய ‘மத்தவிலாசப் பிரகசனம் என்னும் வடமொழி நூலில் தன் காலத்தில் நிலவிய சமயங்களைக் கேலி செய்துள்ளான். அவன் சைவ சமயத்தை மேற்கொண்டதும் சமணமும் அழியத்தலைப்பட்டுச் சைவம் தழைத்தோங்கியது.
.......................தொடரும் ............................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக