ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-10.
தொல்காப்பியர் வரலாறு : பாயிரம் - மறுப்புரை:
நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்.
ஆய்வுரை -பகுதி -3
அகத்தியர் எனப் பெயரிய தமிழாசிரியர் ஒருவர் பண்டு விளங்கியிருந்தனரென்பதற்கும், முத்தமிழுக்கும் இலக்கணமாக அவரால் இயற்றப் பெற்றதொரு விரிந்த நூல் அகத்தியமென்னும் பெயருடன் திகழ்ந்ததென்பதற்கும் அளவிறந்த சான்றுகள் உள்ளன. அவற்றை நான் எழுதிய ‘அகத்தியர்’ என்னும் உரை நூலில் விரிவாகக் காட்டியுள்ளேன். ஈண்டுச் சிலவற்றைக் குறிப்பிடுகின்றேன்.
இறையனார் களவியல் உரையில் முச்சங்க வரலாறு கூறுமிடத்து, தலைச்சங்கப்புலவருள்ளும் இடைச்சங்கப் புலவருள்ளும் அகத்தியனார் முதலில் வைத்துக் கூறப்படுகின்றனர். அகத்தியம் முச்சங்கத்தார்க்கும் நூலாயிருந்ததெனவும் அதிற்கூறப்பெற்றுள்ளது. பின் வந்த உரையாளர்கள் பலரும் அகத்தியனாரைப் பற்றியும் அகத்தியத்தைப் பற்றியும் ஆண்டாண்டுக் குறிப்பிட்டிருப்பதுடன். அகத்தியமெனச் சிற்சில நூற்பாக்களையும் எடுத்துக் காட்டியிருக்கின்றனர்.
“தரவின்றாகித் தாழிசை பெற்றும்” என்னும் தொல்காப்பிய்ச் செய்யுளியற் சூத்திரவுரையில் இனி இவ்வாறு வந்த கொச்சகங்களையெல்லாம் ஒரு வரையறைப் படுத்துப் பாத்தோறும் இனஞ்சேத்திப் பண்ணிற்குத் திறம்போலப் பின்னுள்ள ஆசிரியர் அடக்குவர். அதனை அகத்தியமும் தொல்காப்பியமும் உணர்ந்து அவர்தம் கருத்தறிந்த ஆசிரியர் அவ்வாறடக்காமைக்குக் காரணம் கூறுவர்.’ என நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.
அவ்வாசிரியர் கூறுங் காரணம் இவையென அவர் பின்பு எடுத்துக்காட்டியவை யெல்லாம் பேராசிரியருரையாக விருத்தலின் அகத்தியமும் தொல்காப்பியமும் உணர்ந்தவரென அவராற் சுட்டப்பெற்றவர் பேராசிரியரேயென்பது துணிபு. “ஆங்ஙனம் விரிப்பின்” என்னும் செய்யுளியற் சூத்திரவுரையில் ‘இஃது எற்றார் பெறுதுமெனின் இதன் முதனூல் செய்த் ஆசிரியன் அகத்தியனார் சொல்லுமாற்றாற் பெறுதும் என்றவாறு’ எனப் பேராசிரியர் தாமே கூறியிருப்பதும் இதனை வலியுறுத்தும்.
இதிலிருந்து கடைச் சங்க காலத்தின் பின் நெடுநாள் வரை அகத்தியம் வழங்கி வந்ததென்று துணிந்து கூறலாகும். எனினும் அதற்கு யாரும் உரை கண்டாரெனத் தெரியாமையின் உரையாளர்கள் காலத்தில் அந்நூல் முழுவுருவுடன் காணக் கூஆதவாறு சிதைந்து போயிற்றென்று கருதுதல் சாலும்.இனி , தலைச்சங்கப் புலவராயிருந்து தமிழிலக்கணம் இயற்றிய இவ்வகத்தியரும் முனிவர் பலருள்ளும் சிறந்தவராக வைத்துப் புராண இதிகாசங்கள் கூறும் அகத்தியரும், இருக்கு வேதப்பதிகங்களீற் பலவற்றை இயற்றிய அகத்தியரும் ஒருவரென்றோ, வெவ்வேறாவர் என்றோ அறுதியிட்டு உரைத்தல் மிக அரிதாகும். அகத்தியர் என்பது ஓர் குடும்பப் பெயரே என்றும் அப்பெயருடையார் பலர் இருந்திருக்கின்றனர் என்றும் முதலில் விந்த மலையின் வடக்கில் ஓர் அகத்தியரும் இராமாயண காலத்தில் கோதாவரியாற்றங்கரையிலோர் அகத்தியரும், பரத காலத்தில் பொதியின் மலையில் மற்றோர் அகத்தியரும் இருந்துளாரென்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். .....................................தொடரும்......................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக