ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-27.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் -
உரையாசிரியர்- இளம்பூரணர் : மு.வை. அரவிந்தன்.
17ஆம் நூற்றாண்டில் மீண்டும் தொல்காப்பிய ஆராய்ச்சி தொடங்கியது. இதனைத் தொடங்கி வைத்தவர் சிவஞான முனிவர். தொல்காப்பியப் பாயிரம், முதல் சூத்திரம் ஆகிய இரண்டிற்கும் விருத்தியுரை எழுதினார். இவர் இவ்விருத்தியுரை இலக்கண ஆராய்ச்சிக் கருவூலமாய்த் திகழ்கின்றது. இவரை அடுத்துச் சோழவந்தான் அரசன் சண்முகனார் தொல்காப்பியப் பாயிரத்திற்கும் முதற் சூத்திரத்திற்கும் விருத்தியுரை எழுதினார். அரசன் சண்முகனார் எழுத்ததிகாரத்தில் நூன் மரபு, மொழி மரபு என்ற இரு பகுதிகளுக்கும் உரை எழுதினார் என்றும் அவ்வுரைப் பகுதிகள் கிடைக்கவில்லை என்றும் கூறுவர்.
தொல்காப்பியத்தையும், உரைகளையும் பதிப்பித்த போது அடிக் குறிப்பாகப் பல அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பலர் எழுதியுள்ளனர். இளவழகனார், சி. கணேசையர் இருவரும் தொல்காப்பியம் முழுமைக்கும் குறிப்புரை எழுதியுள்ளனர். எழுத்ததிகாரத்திற்கு ஞா. தேவநேயப் பாவாணரும், சொல்லதிகாரத்திற்கு ஆ. பூவராகம் பிள்ளையும், கு. சுந்தரமூர்த்தியும் குறிப்புரையும் விளக்கமும் எழுதியுள்ளனர். மேலும் தொல்காப்பியத்தில் ஈடுபாடு கொண்ட அறிஞர் பலரும் காலந்தோறும் ஆராய்ச்சியுரைகளை எழுதியுல்ளனர்.
இளம்பூரணரின் புலமைத்திறம்:
பழம் பெரும் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் முழுமைக்கும் முதன் முதலில் உரைகண்டு அதனைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு நன்கு அறிமுகப்படுத்திய பெருமை இளம்பூரணரையே சாரும். “ பிறர் உட்புகுந்து காண முடியா வண்ணம், இருண்டு கிடந்த தொல்காப்பியம் என்னும் சரக்கரையுள் தம் அறிவென்னும் அவியா விளக்கைக் கொண்டு துருவி, ஆங்கே குவிந்துகிடந்த அரதனக் குவியல்களை உலகிற்கு முதலில் விளக்கிக் காட்டிய பெருந்தகையார் ; அறிதற்கரிதாகிய தொல்காப்பியக் கடலைத் தம் மதிவலி கொண்டு கடைந்து முதன்முதலில் இலக்கண அமுதம் அளித்த பெரியார்” என்று புலவர் போற்றும் புகழுக்கு உரிய சான்றோர் இவர்.
இவருடைய உரை சேனாவரையரும் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் மிக நயமாக உரை எழுத உறுதுணையாய் அமைந்தது. தொல்காப்பியம் போன்ற பழம்பெரும் இலக்கண நூல்களுக்கு அவை தோன்றிப் பலநூறு ஆண்டுகள் கழிந்த பின்னர் முதன்முதலில் உரை காண்பது எளிய செயல் அன்று. தகுதி வாய்ந்த ஒருவர் உரை கண்டபின், அவரைப்பின்பற்றி வேறு உரை கண்டு விளக்கம் எழுதுதல் அரிய செயல் அன்று. இளம்பூரணர்க்குப் பின் தொல்காப்பியத்திற்கு உரை கண்ட சேனாவரையர், நச்சினார்க்கினியர் முதலியோர் இவர் உரையினைப் போற்றி, பல முறை பயின்று தெளிவு பெற்று இவருடைய புலமைச் சிறப்பை நன்கு உணர்ந்துள்ளனர்; இவரிடம் பெரு மதிப்புக் கொண்டவராய் இருக்கின்றனர். தொல்காப்பியம் மாபெரும் நூலாக இன்று இத்துணைச் சீரும் சிறப்பும் எய்தித் திகழ இவரது உரை துணை செய்தது என்று கூறுவது வெறும் புகழ்ச்சியன்று. இளம் பூரணர் ஒருவரே “உரையாசிரியர்” என்ற சிறப்புப் பெயரால் தமிழிலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர். ........................................தொடரும் ............................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக