தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -9.
தொல்தமிழர் முருகன் வழிபாடு ; ஆறுபடைவீடுகள்.
முனைவர் இரெ. குமரன்:
திருமுருகாற்றுப்படை . திருச்சீரலைவாய் -2. - திருச்செந்தூர்.
யானை ஊர்தியில் முருகன்;
“ வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வர
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடை
கூற்றத் தன்ன மாற்றுஅரு மொய்ம்பின்
கால்கிளர்ந் தன்ன வேழம் மேல்கொண்டு.”- நக்கீரர் - 78 – 82.
கூரிய அங்குசத்தால் குத்தப்பெற்ற தழும்புகள் நிறைந்த செம்புள்ளிகள் மிக்குடைய மத்தகத்தில் பொன்னரிமாலை நெற்றிப்பட்டத்தோடு கிடந்து அசைய, தாழ்ந்து தொங்கும் மணிகள் மாறி மாறி ஒலிக்கின்ற பக்கங்களையும் விரைவான நடையினையும் கூற்றுவணை ஒத்த வலிமையினையும் ஓடும்போது காற்று எழுந்து செல்வது போன்ற வேகத்தையும் உடைய யானையின் மீதேறி முருகன் வருகின்றான். (முருகன் யானைக் கொடி உடையோனை வென்று அடக்கியதால் யானை ஊர்தி யானது)
ஆறுமுகத்தான் ஆற்றும் அருட் செயல்கள்:
“மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்க
பல்கதிர் விரிந்தன்று ஒரு முகம் ; ஒருமுகம்
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகி
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம்
மந்திர விதியின் பரபுளி வழாஅ
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி
திங்கள் போலத்திசை விளக்கும்மே ஒரு முகம்
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கி
கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒருமுகம்
குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே
ஆங்கு அம்மூஇரு முகனும் நவின்று.” - 91 – 103.
பல சுடர்களைத் தோன்றச் செய்தது -ஒருமுகம் ; வேண்டும் வரம் அளிக்கும் - ஒரு முகம், ; அந்தணர் வேள்விகளைக் காக்கும் - ஒரு முகம். ; வேத நூல்கள் காட்டாத எஞ்சிய பொருள்களைக் கூறும் - ஒரு முகம். ; மறக்கள வேள்வியை விரும்பி நிற்கும் - ஒரு முகம். ; வள்ளியம்மையுடன் மகிழ்ந்திருக்கும் - ஒரு முகம். ; ( பன்னிரு கைகள் ஆற்றும் அருஞ்செயல்களை நூலில் காணவும்.) .
......................................தொடரும்.....................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக