தமிழமுது –200– தொல்தமிழர் இசை மரபு:60.
4.. பதிற்றுப்பத்து -பேரியாழ் - பாலைப்பண்.
“இழையர் குழையர் நறுந்தண் மாலையர்
சுடர்நிமிர் அவிர்தொடி செறித்த முன்கை
திறல்விடு திருமணி இலங்கு மார்பின்
வண்டுபடு கூந்தல் முடிபுனை மகளிர்
தொடைபடு பேரியாழ் பாலை பண்ணி
பணியா மரபின் உழிஞை பாட
இனிது புறந்தந்து அவர்க்கு இன்மகிழ் சுரத்தலின்....... பரணர், 46: 1 –7.
.துறை: காட்சி வாழ்த்து
வண்ணம் : ஒழுகு வன்ணம்
தூக்கு : செந்தூக்கு
பெயர் : கரை வாய்ப் பகுதி.
இசைபாடும் விறலியர், இழையை அணிந்தவரும் தளிரை அணிந்தவரும் நறு மணத்தையுடைய குளிர்ந்த மாலையை அணிந்தவருமாகிய ஒளிமிக்க விளங்கிய தொடியை அணிந்த முன்கையையும் சிறந்த ஒளிவிடுகின்ற அழகிய மணி விளங்குகின்ற மார்பினையும் கொண்டு வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலைக் கொண்டையாகப் புனைந்த பாண் சாதி மகளிர் நரம்புக் கட்டுப் பொருந்திய பேரியாழில் பாலைப் பண்ணை அமைத்துப் பகைவர்க்குப் பணியாத இயல்புடைய உழிஞைத் திணையைப் புகழ்ந்து பாட, வீரர்களை இனிதே பாதுகாத்து அவர்களுக்கு இனிய மகிழ்ச்சியை அளித்தனர்.
்
பறைக்குரல்:
“வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணி
தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல்
மாடோர் உறையும் உலகமும் கேட்ப
இழுமென இழிதரும் பறைக்குரல் அருவி
முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும்
அயிரை நெடுவரை போல
தொலையாதாக நீ வாழும் நாளே.” - கபிலர்.70: 20 – 27.
துறை : செந்துறைப் பாடாண் பாட்டு
தூக்கு : செந்தூக்கும் வஞ்சித் தூக்கும்
பெயர் : பறைக் குரல் அருவி.
பெரியோரிடத்தேே வணங்கிய மென்மையையும் பகைவர்க்கு வணங்காத ஆண்மையும் உடைய இளந்துணையாகிய புதல்வரைப் பெற்றமையால் நின் குலத்து முன்னோர்களான பிதிரர்களைக் காப்பாற்றி இல்லறத்தார்க்குரிய பழைய கடன்களைச் செய்து முடித்து வெல்லும் போரைச் செய்யும் தலைவனே ! கற்பக முதலிய செல்வத்தையுடைய தேவர் வாழும் உலகமும் கேட்கும்படி இழுமென்னும் ஓசை உண்டாகும்படி கீழே இறங்குகின்ற பறை ஓசையைப் போன்ற ஓசையையுடைய அருவிகள் பெரியனவாகிய உச்சியையுடைய சிகரங்கள் தோறும் நிறைந்து விளங்கும் அயிரை என்னும் உயர்ந்த மலையைப் போல நீ வாழும்நாள் அழிவில்லாததாகுக.
.............................. ....................... தொடரும்..........................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக