தமிழமுது –215– தொல்தமிழர் இசை மரபு:75.
7. அகநானூறு : தாளங்கள் - எழுவகைத் தூக்குகள்:
” பிறர் உறு விழுமம் பிறரும் நோப
தம் உறு விழமம் தமக்கோ தஞ்சம்
கடம்புகொடி யாத்து கண்ணி சூட்டி
வேறுபல் குரல் ஒரு தூக்கு இன்னியம்
காடுகெழு நெடுவேள் பாடு கொளைக்கு ஏற்ப
அணங்கு அயர் வியன்களம் பொலிய பையத்
தூங்குதல் புரிந்தனர் நமர் என ஆங்கு அவற்கு
அறியக் கூறல் வேண்டும் - தோழி .” - - கபிலர் , 382: 1- 8.
தோழி தலவிக்குக் கூறியதாவது ...! பிறர்க்கு ஏற்படும் துன்பத்தைக்கண்டால் நல்லோர் தாம் அயலார் ஆயினும் அதற்காக வருந்தி அதனைத் துடைக்க முற்படுவர் ; தமக்கு நேரும் துன்பத்தைப் பெரிதெனக் கொள்ளாது எளிதெனக் கொண்டு பொறுமையுடன் அதனைத் தாங்கிக்கொள்வர் ; இது சான்றோரின் இயல்பாகும் .......
கடப்ப மரத்தில் கொடியுனைக் கட்டி, மாலை சூட்டி, தாளங்கள் வழிவரும் செந்தூக்கு முதலாகிய எழுவகத் தூக்கினுள் ஒன்றினைப் பொருந்திய இனிய இசைக்கருவிகளைக்கொண்டு குறிஞ்சி நிலக் கடவுளாம் முருகனைப் பாடும் பாட்டிற்குப் பொருந்த வெறியாட்டு அயர்கின்ற அகன்ற களம் அழகுறுமாறு, நம் அன்னை முதலிய நம்மவர் மெல்ல வெறியாடுதலுக்கு விரும்பினர் என்னும் சேதியைத் தலைவனைக் காணுங்கால் நீ, அவன் உணருமாறு எடுத்துக்கூறவேண்டும் ; அதுவே நினக்குத் தக்கது.
( விழுமம் - துன்பம். ; நோப - வருந்துவர். ; தஞ்சம் - எளிமை ; நெடுவேள் - முருகப் பெருமான் ; கொளை - பாடல் ; அணங்கு அயர் - வெறியாடல். ; பைய மெல்ல. ; )
.........................தொடரும்...................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக