தமிழமுது –224– தொல்தமிழர் இசை மரபு:84.
பத்துப்பாட்டு- 3. சிறுபாணாற்றுப்படை : செம்பாலைப் பண்:
ஓய்மாநாட்டு நல்லியக்கோடனிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் சிறு பாணன் ஒருவன், வழியில் வறுமையில் வாடும் பாணன் ஒருவனை அவ்வள்ளலிடம் ஆற்றுப்படுத்தும் முறையில் அமைந்ததே இந்நூல்.
இயற்றியவர் , இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்.
இந்நூலில் இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ எனவரும் செய்தியால் சிறிய யாழை ஏந்தியிருந்த பாணன் சிறுபாணன் என அழைக்கப்பெற்றான்.
செம்பாலைப் பண்:
”அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்குபுரி நரம்பின்
பாடுதுறை முற்றிய பயன்தெரி கேள்விக்
கூடுகொள் இன்னியம் குரல் குரல் ஆக
நூல்நெறி மரபின் பண்ணி ஆனாது
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும்
இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும்
ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்
நீ சில மொழியா அளவை ....... -- 227 – 235.
அமிழ்தத்தை தன்னிடத்தே பொதிந்து வைத்திருக்கும் முறுக்கு அடங்கின நரம்புகள் ஆகியவற்றைக் கொண்டது சீறியாழ் ; இனிய இசைகளைக் கொண்ட யாழை விளங்குகின்ற இசை நூல் முறைமையால் செம்பாலைப் பண்ணாக இயக்கி,
ஐம்பெருங்குரவர் முதலியோர்க்குக் குவித்த கைகள உடையோய் ..!
வீரர் படைக்கருவிகள் எறிதற்குக் காட்டிய மார்பினை உடையோய்...! ஏரினை உடைய குடிமக்களுக்கு நிழல் செய்த செங்கோலை உடையோய்...!
தேர் ஊர் அரசர்க்கு வெம்மை செய்த வேலினை உடையோய்..! என்றெல்லாம் சில புகழ் மொழிகளை கூறுவதற்கு முன்னே ........
(அவ்வள்ளல் பரிசில் நல்குவதற்கு முந்துவான். ஐம்பெருங்குரவர் - தாய், தந்தை, ஆசிரியர், தமையன் , அறவோர்.)
...............தொடரும்..............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக