தமிழமுது –230– தொல்தமிழர் இசை மரபு:90.
பத்துப்பாட்டு- 6. மதுரைக்காஞ்சி : வேலன் வழிபாடும் குரவைக் கூத்தும்.
தமிழ் மக்களின் சமயம், பண்பாடு, அரசியல், பொருளாதாரம், சமுதாயம் ஆகியவற்றின் வரலாற்றுக் கருவூலமாய்த் திகழ்வது பத்துப்பாட்டாகும்.
” ............................ஒருசார்
அருங்கடி வேலன் முருகொடு வளைஇ
அரிக்கூடு இன்னியம் கறங்க நேர் நிறுத்து
கார்மலர்க் குறிஞ்சி சூடி கடம்பின்
சீர்மிகு நெடுவேள் பேணி தழூஉப் பிணையூஉ
மன்று தொறும் நின்ற குரவை.” ---610 – 615.
ஒரு புறம் அச்சத்தைச் செய்யும் வேலன் இவ்விடுக்கண் முருகனால் வந்தது என்று, தான் கூறிய சொல்லால் கேட்டோரைத் தன்வயப்படுத்துவான்.
அரித்து எழும் ஓசையையுடைய சல்லி, கரடிகை முதலிய கருவிகளோடு கூடிய ஏனை இசைக்கருவிகளும் ஒலிக்குமாறு, கார் காலத்தில் மலரும் குறிஞ்சிப் பூவைச் சூடி, கடம்பு அணிதலால் அழகுமிகும் முருகனைத் தன் மெய்யில் நிறுத்தி வழிபடுவான் ; அதனால் மகளிர் தம்முள் தழுவிக் கைகோத்து, மன்றுகள் தோறும் குரவைக் கூத்தாடுவர்.
வேலனின் வெறியாட்டும் மகளிரின் குரவைக் கூத்தும் கூறப்பட்டுள்ளன. முருகப் பெருமானுக்கு உரிய வேலினை ஏந்தி வழிபடுபவன் வேலன் எனப்படுவான். அவன் தெய்வம் ஏறி முருகனாகவே நின்று ஆடுதல் வெறியாட்டு எனப்படும். கழங்கு வைத்துத் தலைவியின் வருத்தம் முருகப் பெருமானால் வந்தது என முற்கூறிப் பின் வெறியாடுவான் என வேலனின் வெறியாட்டு முறைமை கூறப்பட்டது..
( அருங்கடி வேலன் - தலைவிக்கு அச்சத்தைச் செய்யும் வேலன். ; அரி - மிகுந்து எழும் ஓசையை உடைய கருவி / அரிக்குரல் தட்டை. ; சல்லிகை சல்லி என்னும் ஓசையுடைய கருவி. ; நெடுவேள் - முருகன் .; குறிஞ்சி, கடம்பு - முருகனுக்கு உகந்த மலர்கள் ; தழூஉ - தழுவி. ; பிணையூஉ - பிணைத்தல் ; குரவை - கூத்துவகைகளுள் ஒன்று.)
...............தொடரும்.............................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக