ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-28.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் -
உரையாசிரியர்- இளம்பூரணர் : மு.வை. அரவிந்தன்.
காலம்: இளம்பூரணர் தம் உரையில் புறப்பொருள் வெண்பா மாலை, யாப்பருங்கல விருத்தி, ஆகியவற்றிலிருந்து மேற்கோள் தந்து விளக்குவதால் அந்நூல்களுக்குப் பின் வாழ்ந்தவர் எனலா. இவரது கருத்தை நன்னூலார் மேற்கொண்டிருப்பதால் இவர் காலம் பதினோராம் நூற்றாண்டாக இருக்கலாம்.
உரையின் இயல்பு: இளம்பூரணர் உரை, ஆழமான தெளிந்த நீரோடை போன்றது ; பற்றற்ற துறவி தூய்மையான வாழ்வு நடத்தி மூத்து முதிர்ந்து காவி உடையுடன் அருள் பழுத்த நெஞ்சத்துடன் முகம்மலர்ந்து நம்மிடம் இன்சொல் பேசுவது போன்ற இன்ப உணர்வை இவர் உரை உண்டாக்குகிறது, ஆரவாரமும் பகட்டும் இவர் உரையில் எங்கும் காண்பது அரிது. மிக மிகச் சுருக்கமாகவே தெளிந்த கருத்தைக் கூறி விளங்க வைக்கிறார். தாம் கருதியதே சிறந்தது என்று எண்ணும் வகையில் இவர் எவ்விடத்திலும் எழுதவில்லை. பிறர் கருத்தை மதித்தலும், புலமை முதிர்ச்சியும் நடுநிலைமையும் உரை முழுவதும் வெளிப்படுகின்றன.
இளம்பூரணர் பிற மொழிப்பயிற்சி மிகுதியாக இல்லாதவர் ; தமிழ்க் கடலுள் பல கால் மூழ்கித் திளைத்தவர் ; தமிழ் மரபு நன்கு அறிந்த சான்றோர். இவரது தமிழ் நெஞ்சம் பல இடங்களில் வெளிப்படுகின்றது. இவரைச் சிவஞான முனிவர் “ தமிழ்நூல் ஒன்றே வல்ல உரையாசிரியர்” என்று தொல்காப்பியச் சூத்திர விருத்தியில் குறிப்பிடுகின்றார்.
தயக்கமும் ஐயமும் : தொல்காப்பியர் கருத்தையும் இலக்கணக் கொள்கையையும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு இவர் பெரிதும் முயன்றுள்ளார். கால இடையீடும், புதிய இலக்கணக் கொள்கைகளும் பழைய இலக்கணம் பற்றிய பல்வேறு கருத்தும் இவருக்குத் தயக்கமும் மலைப்பும் உண்டாக்கின எனலாம். அதனால் நடுநிலைமை பிறழாத உள்ளம் கொண்ட இவர், தாம் உரைத்த கருத்துகளையும் பொருளையும் முற்ற முடிந்த முடிபுகளாகக் கருதவில்லை.பல நூற்றாண்டுகள் கழித்து அந்நூலின் கருத்தை உள்ளவாறு அறிய முயன்று முதன்முதலில் உரை எழுதிய இவர்க்கு இத்தகைய தயக்கமும் ஐயமும் ஏற்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை.
சான்று : சொல்லதிகாரத்தில் ‘நிலப்பெயர், குடிப்பெயர் என்று தொடங்கும் சூத்திரத்தில் (சொல் -162 இளம்) இன்றிவர் என்னும் எண்ணியற் பெயர் என்ற அடிக்கு “ஒருவர், இருவர், மூவர் என்பன.” என்று விளக்கம் எழுதியபின் “இன்றிவர் என்பது இத்துணைவர் என்னும் பொருட்டுப் போலும்” என்று ஐயத்தோடு கூறுகின்றார்.
உரைத்திறன்: .....................................தொடரும்.......................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக