வியாழன், 14 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் - 19

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் -  19                                     
யானை - மதநீர்
மதநீர் (Musth) என்பது ஆண் யானைகளுக்கு சில வேளைகளில் கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட சுரப்பிகளில் வழியும் நீர். இது இவைகளை மிகவும் ஆக்ரோசமாகவும் ஆபத்தாகவும் மாற்றும் தன்மையுடையது என்றும், இது ஆண்களின் பாலுணர்வினைச் சார்ந்ததென்றும் கூறுவர். இவ்வாறாக மதநீர் வழியும் காலத்தில் யானைக்கு மதம் பிடித்தல் என்று கூறுவர். பெண் யானைக்கு எக்காலத்திலும் மதநீர் சுரக்காது. (விக்கிபீடியா)
யானைக்கு -  மதம்
.......................................... யானை
குளகு மென்று ஆள்மதம் போல
                                                   மிளைப் பெருங்கந்தன், குறுந். 136: 3,4
அடங்கிக் கிடக்கும் யானையின் மதம் அதிமதுரத் தழையை மென்று தின்னத் தின்ன பெருகுவதாயிற்று.
விலங்குநூல் வழி யானைக்கு மதம் பிடித்தல் – தழை, மதம் நீக்க – வாழைத்தண்டு இஃது உண்மையா என்று ஆய்க.
மேலும் காண்க : சீவக.750

மதநீரொழுகல்
தூங்குகையா னோங்கு நடைய
உறழ்மணியா நுயர் மருப்பின
பிறைநுதலாற்  செறனோக்கின
பாவடியாற் பணை யெருத்தின
தேன்சிதைந்த வரைபோல
மிஞிஞார்க்குங் கமழ் கடாத்
தயறு சோரு மிருஞ் சென்னிய
மைந்து மலிந்த மழ களிறு
கந்து சேர்பு நிலைஇ வழங்க..
குறுங்கோழியூர் கிழார், புறநா. 22 : 1 – 9
 அசைந்த பெருங்கையுடனே தலையெடுத்து நடக்கும்  உயர்ந்த நடையையுடையனவும் அந்நடைக்கேற்ப ஒன்றற்கொன்று பட்டொலிக்கும் மணியுடனே உயர்ந்த கோட்டினையுடையனவும் பிறை வடிவாக இடப்பட்ட மத்தகத்துடனே சினம் பொருந்திய பார்வையை யுடையனவும் பரந்த அடியுடனே பரிய கழுத்தையுடையனவும் தேனழிந்த மலைபோலத் தேனீ யொலிக்கும் மணம் நாறும் மதத்துடனே புண்வழலை வடியும் பெரிய தலையையுடையனவுமாகிய வலிமிக்க இளங்களிறு கம்பத்தைப் பொருந்தித் தான் நின்ற நிலையிலேயே நின்று அசைய… (உ.வே.சா. உரை.)
மேலும் காண்க : -

`வரி வண்டார்க்கும் வாய்புகு கடாஅம்’ – (புறநா. 93.)
கலித். 21 , அகநா. 78.
`புணர் மருப்பி யானையின் புயன்கொண் மும்மத
மணமகள் கதுப்பென நாறும்’ (சீவக. 1621)
மதநீரொழுகல்
விழுச்சூழிய விளங்கு ஓடைய
கடுஞ் சினத்த கமழ் கடாஅத்து
அளறுபட்ட நறுஞ் சென்னி
வரை மருளும் உயர் தோன்றல
வினை நவின்ற பேர் யானை
 மாங்குடி மருதனார், மதுரைக். 6 :  43 - 47
 போர்த் தொழில் பழகிய பெரிய யானைகள் சிறந்த முகபடாத்தை உடையவை  ; விளங்கும் நெற்றிப் பட்டம் அணியப்பெற்றவை, மிகுந்த சினத்தை உடையவை ; மணம் கமழும் மதநீர் ஒழுகுவதால் சேறு படிந்த தலையினை யும் , மலை என்று மயங்கும் வண்ணம் தோற்றமும் கொண்டவை . இவை சினம் மிகுந்து போர்க்களத்தில் உள்ள வீரர்களைக் கொன்று திரிவன.
 யானையின் மதநீர்க்கு மணம் உண்டு, மதநீரின் மணம் மணமகளின் கூந்தலின் மணம் போன்றது என்று திருத்தக்கதேவர் கூறுவார்.
 “ புணர் மருப்பு யானையின் புயல்கொள் மும்மதம்
 மணமகள் கதுப்பு என நாறும் “ – சீவக. 1621.
( குழி – யானையின் முகபட்டம் ; ஓடை – யானையின் நெற்றிப்பட்டம் ;அளறு – சோறு ; குரூஉ – நிறம் ;  வீறு – நெற்றி .)

யானைப் புணர்ச்சி
சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம்
குளவித் தண்கயம் குழையத் தீண்டி
முதுவெங் கண்ணனார்.நற்.232: 1- 2
சிரிய கண்ணையும் பெரிய கையையும் உடைய  யானையின் ஆண் – பெண்ணாகிய இரு இனமும் மலைப் பச்சைச் சூழ்ந்த குளிர்ந்த குளத்தில் மெய் தளருமாறு புணர்ந்து மகிழும். ( விலங்கியல் வல்லுநர் வழி ஆய்க .)
சூல் கெடுமே
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று
இருவெதிர் ஈன்றவேல் தலைக் கொழுமுளை
சூல்முதிர் மடப்பிடி நாள் மேயல் ஆரும்
கந்தரத்தனார். நற். 116 : 3-5
 சூல் முதிர்ந்த இளைய பெண் யானை ; தன் வயிற்றுச் சூல் கெட்டுப்  புறத்தே வெளிப்படுமாறு பெரிய மூங்கிலின்  முளைத்து எழுந்த ; இலையில்லாத கொழுத்த முளைப்பகுதியை  அறியாது தின்னும்.

மூங்கில் முளையைத் தின்றால் பிடியின் சூல் கெட்டுவிடுமா ? விலங்கியல் நோக்கில் ஆய்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக