திங்கள், 25 ஜூலை, 2016

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் – 30

பழந்தமிழ்ப் புலவர்கள் – அறிவியல் அறிவாற்றல் –  30
பசலை….. 2 ( ஒவ்வாமைத் தோல் அழற்சி )
In addition to irritants and allergens, emotional factors, skin infections, and temperature and climate play a role in atopic dermatitis. Although the disease itself is not caused by emotional factors, it can be made worse by stress, anger, and frustration. Interpersonal problems or major life changes, such as divorce, job changes, or the death of a loved one, can also make the disease worse.

மேற்சுட்டியுள்ள மருத்துவ அறிவியல் காரணிகளோடு, காதல் – காமம் – பிரிவு – மன அழுத்தம் முதலிய காரணிகளோடு பசலை நோய் தோற்றம் குறித்துச் சங்கப்புலவர்தம்  கூற்றை ஆராய்ந்து காண்போம்.
காம நோய்
அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒள்நுதல்
ஒலிமென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அருங் கட்நோய்
          -கபிலர் , குறிஞ்சிப். 1 – 3
ஒளி பொருந்திய நெற்றியையும் தழைத்த மெல்லிய கூந்தலையும் பிறர் நிறத்தினை வெல்லும் வெற்றியுடைய நிறத்தினையும் உடைய என் தோழி, தன் மனத்திற்குள், தன் உயிரைத் தாங்கியிராமைக்குக் காரணமாகிய ஆற்றுதற்கரிய நினைவினை மறைத்தாள்; அதனால் அவள் அணிந்திருந்த அணிகள் நெகிழப்பெற்றன. மருந்துகளால் நீக்குதற்கரிய கடிய இந்நோயை நினக்குச் சொல்லுதல் எளிதன்று – வலிமையுடைத்து…..( வீவு அருங் கடு நோய் – போக்குதற்கரிய காம நோய்.)
 காமநோயின் ஆற்றலைத் தாக்குப்பிடிக்கமுடியாத உடலும் உள்ளமும் அடைந்த நிலையைத் தோழியின் கூற்றாகத் தான் அறியமுடிகிறது. இக்கூற்று, குடிப் பெருமையின் பண்பாடு சார்ந்தது, ஒரு பெண்ணின் களவொழுக்கம் நேர்கூற்றாக அமைதல் இயலாததொன்றாகும்.
நோய்க் குறிகள்
                            சுவையறிதலில் ஐம்புலன்களில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சுவையை மட்டுமே அறியும் ஆற்றல் உண்டு ; ஐம்புலன்களும் ஒருசேர துய்க்கும் சுவை – இன்பச்சுவை – காம இன்பம் ஒன்றே. அதனால் ‘இன்பத்துட் சிறந்தது காம இன்பம்” என்பர்.
காமக் களிப்பு
தெண் நீர் மலரின் தொலைந்த
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே
                               கணக்காயனார், நற். 23 : 8, 9
தெளிந்த நீரில் உள்ள மலர்போன்ற இவள் கண்கள் அழகு இழந்தன ; அவை காமத்தை மறைக்க இயலாது தவிக்கின்றன.
கவலை
உரம் செத்தும் உளெனே தோழி என்
நலம் புதிது உண்ட புலம்பினானே
         உறையூர் முதுகண்ணன் சாத்தன், குறுந். 133: 4, 5
தோழி ! தலைவன், என் பெண்மை நலத்தை நுகர்ந்து, பிரிந்து சென்றுவிட்டான், தனிமையில் தவித்து, என் உடல் வலிமை அழிந்தும் இன்னும் உயிருடன் இருக்கின்றேனே, என்றனள் தலைவி.
வெறுப்பு
கல்லினும் வலியன் தோழி
வலியன் என்னாது மெலியும் என் நெஞ்சே
                          கபிலர், குறுந். 187 : 4, 5
 மணம் முடிக்க மனமில்லாத தலைவன், கல்லைவிட வலிய நெஞ்சுரம் உடையவன் எனக் கருதாது, என் மனம் அவனையே நினைத்து வருந்துகின்றதே – தலைவி.
தூக்கமின்மை
கனையிருங் கங்குலும் கண்படை இலெனே
அதனான் என்னொடு பொருங்கொல் இவ்வுலகம்
உலகமொடு பொருங்கொல் என் அவலம் உறு நெஞ்சே
                                  வெள்ளிவீதியார், நற். 348 : 8 – 10
தலைவனிடம் கொண்ட மிகுந்த அன்பினாலே ஆற்றாமையால் வருந்துகிறேன், தூக்கம் இல்லை, இவ்வுலகம் என்னோடு போரிடுகிறதோ அல்லது இவ்வுலகத்தோடு என் அவல நெஞ்சம் போரிட எழுகின்றதோ..? – தலைவி.
கனவு
கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன்
நனவின் வருதலும் உண்டு என
அனை வரை நின்றது என் அரும்பெறல் உயிரே
                    நல்லந்துவனார், கலித். 128 : 24 – 26
தோழி! யான் காணும்படி என் கனவிலே வந்த தலைவன், நனவில் வந்து கூடுதலும் உண்டு என்று கருதி, அவன் வரவை எதிர்நோக்கி என் அரிய உயிரும் நீங்காது நின்றது, என்றனள் தலைவி.
தனிமைத் துயர்
குப்பைக் கோழித் தனிப் போர் போல
விளிவாங்கு விளியின் அல்லது
களைவோர் இலை யான் உற்ற நோயே
                                   குப்பைக் கோழியார், குறுந். 305 : 6 – 8
 தலைவனைக் காணாது வருந்தும் நெஞ்சே !  குப்பைக் கோழிகள் தாமே தனிமையில் நிகழ்த்தும் போர், விலக்குவாரின்றி  அதுவாக முடியுங் காலத்தில் முடியும், அதுபோல நான் உற்ற நோயும் நீக்குவார் ஒருவருமின்றி வருத்துகிறதே  என்று தன் மனத்துள் புலம்பினள்.
அச்சம்
சுடுவாள் போல் நோக்கும்
அடுபால் அன்ன என் பசலை மெய்யே
                  ……………….. நற்.175 : 8,9
தோழி ! சுடுபால் மேல் ஆடை படர்வது போல்,  பசலை படர்ந்த என் மேனியைச் சுடுவது போல் நோக்கினளே அன்னை - தலைவி

பசலை
பாசி அற்றே பசலை காதலர்
தொடுவழித் தொடுவழி நீங்கி
விடுவழி விடுவழிப் பரத்தலானே
                      பரணர், குறுந். 399: 3 – 5
பாசி போலும் பசலை, தலைவன் தொடுந்தோறும் நீங்கி, அவன் விட்டு விலகுந்தோறும் உடலெங்கும் பர நிற்கிறதே,
 ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என்
ஆயிழை மேனிப் பசப்பு
                 கபிலர், கலித். 42 : 31, 32
 தோழி ! தலைவனைக் கண்டதும் என் மேனியில் படர்ந்திருந்த பசலை, ஞாயிற்றின் முன் இருள் போல் மறைந்ததே – என்றாள் தலைவி.
பசலை, பாசிபோலும் பாலாடை போலும் பொன்னிறம் போலும் என்றெல்லாம் மேனியில் படரும் பசலையின் நிறம் குறிக்கப்படுகிறது.
பசலை, தோன்றி மறையும் தோல் நோயாகவும் சுட்டப்படுகின்றது.
பசலை, மன அழுத்தத்தால், கவலையால், தன்னையே வருத்திக்கொள்ளும் பெருந்துயரால், அன்புடன் அணைத்துத் தீர்ப்பாரின்றித் தோறுவதாகச் சுட்டியுள்ளமை ஆராய்தற்குரியது.
 பசலை, பருவமடைந்த, பெற்றோர் அறியாது காதல்கொண்ட பெண்களிடத்தில் காதல் கிளர்ச்சியின் காரணமாகப் பசலை நோய் தோன்றுகிறது ;  வெளியிட இயலாத வேறு காரணங்களாலும்  மன அழுத்தம் காரணமாகவும் எவரிடத்து வேண்டுமானாலும் தோன்றலாம்.
பசலை நோய்க்குக்கு முதன்மைக் காரணி – மன அழுத்தம் ; அதனால் ஏற்படும் கவலை,  செயல் தடுமாற்றம், தூக்கமின்மை, தனிமை,  வெறுப்பு, அச்சம், கனவு, இன்னபிறவற்றால் துன்புறுதல்.
மேற்சுட்டியவற்றை மருத்துவ அறிவியலோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது சங்கப்புலவர்களின் அறிவியல் அறிவாற்றல் தெற்றென விளங்கும். 

For More Information

National Institute of Arthritis and Musculoskeletal and Skin Diseases (NIAMS) 
Information Clearinghouse
National Institutes of Health
Email: NIAMSinfo@mail.nih.gov
Website: 
http://www.niams.nih.gov                    ……………………………… முற்றும்
திருக்குறள் – சிறப்புரை..................................... தொடரும் ………………..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக