புதன், 11 மார்ச், 2020

தன்னேரிலாத தமிழ்-11


தன்னேரிலாத தமிழ்-11
அகப்பொருள் திணை

திணை என்பது ஒழுக்கத்தையும் நிலத்தையும் குறிப்பதாகும்.
‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.’ –தொல்காப்பியர் திணை அமைப்பைப் பொதுப்டக் கூற... இந்நூற்பாவிற்கு உரை வகுத்த இளம்பூரணர்,

‘அவ்வெழுதிணையும் ஆவன,  கைக்கிளை,முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை ஆம். இவற்றுள் கைக்கிளையும் பெருந்திணையும் சிறந்த இன்பவொழுக்கம் ஆகா.

‘கைக்கிளை ஒருதலை வேட்கை எனவும் பெருந்திணை ஒவ்வாக் கூட்டமாய் இன்பம் பயத்தல் அரிது எனவும் கூறுதலான் இந்நூலுடையார் காமத்துப் பயனின்மை உய்த்துணர வைத்தவாறு அறிந்து கொளக.’ என்பார்.

எனவே, பருவம் வந்துற்ற ஆணும் பெண்ணும் கூடி மகிழும் இன்பம் சிறந்ததெனக் கொள்ளப்பட்டு, அதனைச் சிறப்புவகையான் வேறுபடுத்திக் கூறுகிறார் தொல்காப்பியர்.

ஐந்திணை

எழுவகைத் திணையுள் உயரிய இன்பவொழுக்கங்களை கூறுவன முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல் என்பனவாம்.

இவ்வைந்திணையுள் நடுவுநிலைத் திணை என்பது பாலையைக் குறிக்கும். பாலைக்குத் தனி நிலம் இல்லை.

காதலர் தம்முள் கருத்தொருமித்துக் காதல் வயப்படுவர். காதலர்க்கு இலக்கணம் வகுத்துள்ளார் தொல்காப்பியர். காதல் வயப்படும் தலைவன் – தலைவி இருவருக்கும் அமைந்திருக்க வேண்டிய  குணநலன்களாவது,

பத்துப் பொருத்தம்

‘பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திரு என
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.’

1.குலப்பிறப்பு 2. ஒழுக்கம் 3. ஆள்வினையுடைமை 4. வயது 5. வடிவம் (வனப்பு) 6. உள்ளக்கிளர்ச்சி 7. சால்பு 8. அருளுடைமை 9. நுண்ணறிவு 10. திரு என்ற பத்தும் ஒத்தவையாக இருத்தல் நன்று.


‘நடுவண் ஐந்திணைக்கண் நிலமும் காலமும் கருப்பொருளும் அடுத்துப் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் எனச் சொல்லப்பட்ட அவ்வுரிப்பொருள், ஒத்த அன்பும், ஒத்த குலனும், ஒத்த வடிவும், ஒத்த குணமும், ஒத்த செல்வமும், ஒத்த இளமையும் உளவழி நிகழுமாதலின் அது பெருங்கிளைமை ஆயிற்று.’ இளம்பூரணர்.

உரிப்பொருள்

அகனைந்திணையின் உரிப்பொருள் அவ்வந் நிலத்தை ஒட்டியே அமைந்துள்ளது.அவ்வந் நிலத்து மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப அவர்தம் ஒழுக்கமும் அமைவதால் இவ்வாறான வரையறை. குறிஞ்சி – புணர்தல் ; பாலை – பிரிதல் ; முல்லை – இருத்தல் ; நெய்தல் – இரங்கல் ; மருதம் – ஊடல் . இயற்கையை அடிப்படையாக்க் கொண்டு வகுக்கப்பட்ட இவ்வகப்பொருள் நெறிகள்   மக்கள் அனைவருக்கும் பொதுவானவையாகும்.


1 கருத்து: