செவ்வாய், 17 மார்ச், 2020

தன்னேரிலாத தமிழ்-15


தன்னேரிலாத தமிழ்-15
களவும் கற்பும்

களவு, கற்பில் நிறைவுறும்.

களவொழுக்கம் வெளிப்படுதல்..

‘அம்பலும் அலரும் களவு வெளிப்படுதலின்
அங்கு அதன் முதல்வன் கிழவனாகும்.’

தலைவன் –தலைவி; களவுக்காதல் பல்வேறு இடையூறுகளைக் கடந்து பொதுவெளியில்
ஊரார் பேசும் அம்பலும் பழிதூற்றும் அலரும் களவை வெளிப்படுத்தும். 


அதற்குக் காரணமாகத் தலைவனின் வேட்கை நிகழ்ச்சிகளே அமையும்.
களவு வெளிப்பட மணந்து கொள்ளும் சூழல் ஏற்படும்.

‘வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று
ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே.’

அஃதாவது , மணம் புரிந்து கொள்வதற்குரிய வழிகள், புறத்தார்க்குத் தெரிந்தபின்பு மணந்து கொள்ளல், புறத்தார்க்குத் தெரியாது மணத்தல் என இருவகைப்படும். அஃதாவது,

‘கற்பு எனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே.’

கற்பு என்று கூறப்பெறுவது, வதுவைச் சடங்குடன் பொருந்திக் கொள்ளுவதற்குரிய மரபினையுடைய தலைவன், தலைவியைக் கொடுப்பதற்குரிய மரபினையுடையோர் கொடுப்பக் கொள்வது. இஃது பெற்றோர் முன்னின்று ஏற்பாடு செய்யும் திருமணமுறையாகும்.

களவொழுக்கத் திருமணம்.

‘கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்து உடன்போகிய காலையான.’

கொடுப்போர் இன்றியும் நிகழும் மணம், களவொழுக்கத்தில் இணைந்து உடன்போகிய காலத்து நிகழும். அஃதாவது இன்றைய காதல் திருமணம்.

இல்லற வாழ்க்கை

‘காமம் சான்ற கடைக் கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே.’

இல்லற வாழ்க்கையின் இறுதிக் காலத்து, பெருமை பொருந்திய மக்களுடன் நிறைந்து, அறத்தினை விரும்பிய சுற்றத்தோடு தலைவனும் தலைவியும் சிறந்ததாகிய செம்பொருளை இடைவிடாது நினைத்தல் மனையறத்தின் கடந்தகாலப் பயனாகும்.

தொல்காப்பியம்

தமிழர்தம் அகவாழ்க்கையை ஆராய்ந்தறிந்து, இன்றளவும் நின்று நிலவும் , உலகம் போற்றும் உன்னத நெறியார்ந்த வாழ்க்கை முறையினை வழங்கிய தொல்காப்பியரைத் தொழுது வணங்குவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக