ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-29.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் -
உரையாசிரியர்- இளம்பூரணர் : மு.வை. அரவிந்தன்.
உரைத்திறன்: தொல்காப்பிய மூலத்தைக் கொண்டே தொல்காப்பியர் கருத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்று கருதுபவர், இளம்பூரணர் செய்த உரை இல்லாதிருந்தால் பல சூத்திரங்களுக்குப் பொருள் தெரியாமல் மயங்குவர். இளம்பூரணர்க்குப் பின்வந்த உரையாசிரியர்களும் இளம்பூரணரையே பின்பற்றி. இவரது பொருள் விளக்கம், மேற்கோள், எடுத்துக்காட்டு ஆகியவற்றைப் போற்றி மேற்கொண்டு உரை எழுதுகின்றனர்.
எழுத்ததிகாரத்தில்:
அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுத லாகி
உளஎனப் பட்ட ஒன்பதிற்று எழுத்தே
அவைதாம்
கசதப என்றா நமவ என்றா
அகர உகரமோடு அவைஎன மொழிப. (எழுத். 170.) என்ற சூத்திரம் இளம்பூரணர் உரை இன்றேல் விளங்காது. அளவுப் பெயர்க்கும் நிறைப் பெயர்க்கும் முதலில் வரும் எழுத்துகள் ஒன்பது. அவை : க ச த ப, ந ம வ, அ உ என்பன. இவ் எழுத்துகளை முதலில் கொண்ட அளவுப் பெயர்களாகப் பின் வருவனவற்றை இளம்பூரணர் காட்டுகின்றார்.
கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு.
நிறைப்பெயர்கள்:
கழஞ்சு, சீரகம், தொடி, பலம், நிறை, மா, வரை, அந்தை, உகரத்தை முதலெழுத்தாகக் கொண்ட பெயர் இளம்பூரணர் காட்டவில்லை,
அக்காலத்திலேயே வழக்கிழந்து விட்டது. நச்சினார்க்கினியரும் இதற்கு உதாரணம் காட்டவில்லை.
பொருளதிகாரத்தின் தொடக்கத்தில் (அகத்திணை இயலுக்கு முன்னுரையாக) எழுதும் உரை விளக்கம் அறிவுக்கு விருந்தாய் அமைந்துள்ளது.
“நிலம் எனவே, நிலத்திற்குக் காரணமாகிய நீரும் நீர்க்குக் காரணமாகிய தீயும், தீக்குக் காரணமாகிய காற்றும், காற்றிற்குுக் காரணமாகிய ஆகாயமும் பெறுதும். “
“காலமாவது மாத்திரை முதலாக நாழிகை, யாமம், பொழுது, நாள், பக்கம், திங்கள், இருது, அயநம், ஆண்டு, உகம் எனப் பலவகைப்படும்.”
“கருப்பொருளாவது இடத்தினும் காலத்தினும் தோற்றும் பொருள்.”
“உரிப்பொருளாவது மக்களுக்கு உரிய பொருள்.” பரத்தையர் யார் என்பதற்குக் கூறும் விளக்கமும், ஐம்பூதங்களின் சேர்க்கை பற்றிக் கூறும் விளக்கமும் சிறப்பானவை. “பரத்தையர் ஆவார் யார் எனின், அவர் ஆடலும் பாடலும் வல்லராகி, அழகும் இளமையும் காட்டி இன்பமும் பொருளும் வெஃகி ஒருவர் மாட்டும் தங்காதார்.
சொல்லும் - பொருளும்...... .....................................................தொடரும்..........................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக