ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-23.
தொல்காப்பியர் வரலாறு :
தொல்காப்பியர்-காலம் :
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.
பாணினியின் காலம் கி.மு. 300 என்றும் 350 என்றும் கி.மு. 700க்கு நீண்ட நாளின் முன்னாகும் என்று சரித்திர அறிஞர் பலர் பலவாறு கூறுகின்றனர். எஸ். கிருஷ்ண பேல் வால்களர் என்னும் அறிஞர் தமது வடமொழி இலக்கணவொழுங்குகள்’ என்னும் நூலிலே பாணினியின் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியது அன்றென ஆராய்ந்து நிறுவியுள்ளார்..
பாணினி முனிவரின் காலம் எதுவாயினும் தொல்காப்பியனார் அவர்க்கு முன்னிருந்தவர் என்பது, கடைப்பிடிக்க தொல்காப்பியர் காலத்தை ஆராய்தற்குரிய மற்றொரு சாதனம் குமரியாறு கடல்கொள்ளப் படுவதற்கு முன்பு அவர் இருந்தார் என்பது கலித்தொகை, சிலப்பதிகாரம், களவியல் உரை முதலிய தமிழ் நூல் உரைகள் தமிழ் நாட்டில் நிகழ்ந்த கடல்கோளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. சிலப்பதிகார உரையில் அடியார்க்குநல்லார் குமரியாற்றின் தெற்கு நாற்பத்தொன்பது தமிழ் நாடுகள் இருந்து கடல் கொள்ளப்பட்டதெனக் கூறுகின்றனர். எர்னஸ்ட் கெக்கல், ஸ்காட் எலியட் முதலிய பேரறிஞர்களால் குறிப்பிடப்படுகின்ற குமரிக்் கண்ட (லெமூரியா) அழிவு பன்னூறாயிர ஆண்டுகளின் முன்பு நிகழ்ந்ததாகல் வேண்டும். ‘எலியட்’ பண்டிதர் கூறும் ஐந்து பெரிய பிரளயங்களில் கி.மு. 9564-ல் நிகழ்ந்த ஐந்தாம் பிரளயத்தால் ஏழேழ் தமிழ் நாடுகள் கடல் கொள்ளப்பட்டனவென்று கருதுதல் பொருந்தும். எனினும் குமரியாறும் அதன் தெற்கே சிறு நிலப்பகுதியும் எஞ்சியிருந்து பின்னொரு கடல் கோளால் அழிந்திருக்க வேண்டும். களவியல் உரையானது ‘அக்காலத்துப் போலும் பாண்டிய நாட்டைக்கடல் கொண்டது’ என இடைச்சங்கத்திறுதியில் நிகழ்ந்ததாகக் கருதி உரைக்கின்றன.
கடல்கோளால் குமரியாறு அழிந்திருக்க வேண்டுமாதலின் அதற்கு முன்பே தொல்காப்பியம் இயற்றப்பெற்றதாம் என்க. பனம்பாரனார் குமரியாற்றைத் தமிழ்நாட்டிற்கு எல்லையாகக் கூறியிருப்பதும் ‘கடல் கொள்வதன் முன்பும் உறநாடும் உண்மையின்றாதற்கும் எல்லை கூறப்பட்டது.’ என இளம்பூரணர் உரைத்திருப்பதும் போல்வன இதனை வலியுறுத்தும்.. இனி அக் கடல் கோள் எக்காலத்து நிகழ்ந்ததோ எனின் , யூதவேதத்தின் ஆதியாகமத்திலே நோவாவின் காலத்தில் ஓர் பிரளயம் உண்டான வரலாறு விரித்துரைக்கப்பட்டுள்ளது. அது, கி.மு 2000-ல் அவர்களால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்றிலே கூறப்பட்டுள்ளது. இலங்கைத்தீவின் வரலாற்றிலும்..........
..................................................தொடரும் .............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக